(1)
சமீபத்தல் Youtubeல் ஒரு கானொளியைக் கண்டேன். ஒரு பேராசிரியர் காரணம் சொல்லாமல் ஒரு மாணவியை வகுப்பை விட்டு விரட்டுகிறார். அதனைத் தொடர்ந்து சட்டம் எதற்கு என்ற கேள்வியை மற்ற மாணவர்களிடம் கேட்க ஆளுக்கு ஒரு பதிலினை தருகிறார்கள். 'Justice' என்று தான எதிர்பார்த்த வார்த்தைக்காகக் காத்திருந்து அதனை பெற்றவுடன் "நான் அம்மாணவியை வெளியில் அனுப்பும் போது ஏன் ஒருவர் கூட என்னை தடுக்கவும் இல்லை அல்லது ஏன் அனுப்புகிறீர்கள் என்று எந்த கேள்வியும் கேட்கவில்லை," என்று பேராசிரியர் வினா தொடுக்க வகுப்பறை பதில் இல்லாமல் திக்குகிறது. தன்னுடன் வாழ்பவருக்காக (அநியாயத்தின் வளைக்குள் சிக்குபவர்களுக்காக) தன் குரலை சிறிதளவேனும் திறக்க இயலாதது எவ்வளவு பெரிய ஊனம்!!
(2)
சமீபத்தில் தேனி சுந்தர் அவர்கள் எழுதிய "உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார்" என்ற புத்தகத்தில் ஒரு சம்பவம். நூல் ஆசிரியரின் அனுபவம். ஆசிரியரான சுந்தர் அவரின் வகுப்பிற்கு செல்கிறார். வீட்டுப்பாடத்தினை சரிபார்க்கும் சமயத்தில் முடிக்காமல் வந்திருந்த ஒரு மாணவியை திட்டுகிறார். உடனே உடன் படிக்கும் மாணவர்கள் "ஏன் சார் திட்றீங்க? நாளைக்கு முடிச்சிட்டு வந்திடுவா. விடுங்க சார்," என்கிறார்கள். சம நண்பருக்கு பேசியதைக் கேட்டு ஆசிரியரும் விட்டுவிடுகிறார். வகுப்பில் நிலவும் ஜனநாயகத்தன்மையினை காட்டுவதோடு தன் தோழிக்காக பேசிய மாணவர்களைக் காணும் போது மகிழ்ச்சி ஒரு பக்கமும், நாம் அவ்வாறு இல்லையே என்ற அவமானம் இன்னொரு பக்கமும் எழுகிறது.
PC: google imagesகுழந்தையிலேயே பழகாமல் போனால் என்றுமே அடுத்தவருக்காகப் பேசும் திறனை வளர்த்துக்கொள்ள முடியாது போலும். இந்த வயதிலும் எனக்கு சகஜமாக வருவதில்லை. இதனை பெரும் குறையாக உணர்கிறேன்.😞 இன்றைய குழந்தைகளிடம் இதை வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கிறேன். ஏனெனில் வளர்ந்தபின் என்னைப் போன்று குற்றவுணர்ச்சி இல்லாமல் இருக்க உதவலாம்.












