சீதக்காதி என்று ஒரு தமிழ் திரைப்படம். பெரிய வெற்றிப்படம் அல்ல. முதல் பாதியின் ஒரு பகுதி சோகமாகவும், அதனைத் தொடர்ந்து நகைச்சுவையாகவும், இறுதியில் சற்று ஆழமாகவும் எனக்குத் தோன்றிய படம். பிடித்த படங்களில் ஒன்றும் கூட.
PC: google images
ஒரு கலைஞன் அவனின் மரணத்திற்குப் பிறகும் வாழ்கிறான். அந்த கலையின் வடிவில் அல்லது அவனைப் போன்ற ஒரு கலைஞனின் உடலில். எதுவாகினும் கலைஞனுக்கு மரணமில்லை. இதுவே அப்படத்தின் மையக்கரு. இப்பொருள் ஒரு மனிதனின் வாழ்க்கையை ஆழமாக சிந்திக்க வைக்கக்கூடும். அதனை மிகுந்த நகைச்சுவையோடு கையாண்டிருப்பார்கள்.
இப்படத்தில் ஒரு நாடகக் கலைஞர் ("ஐயா" என்று அழைக்கப்படுபவர்) அவரின் மரணத்திற்குப் பிறகு அக்கலையை உண்மையில் நேசிக்கும் இன்னொரு நாடகக் கலைஞரின் ஆன்மாக்குள் புகுந்து, வசித்து தன்னைப் போலவே அவ்வுடலையும் நாடகக் கலைக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட வைப்பதாக அமைந்திருக்கும். இதை தட்டச்சு செய்யும் போதே ஏனோ எனக்குள் கனமாக உள்ளது.
அப்படத்தில் ஒரு பாடல்:
"அவன் துகள் நீயா.. அவன் தழல் நீயா.. அவன் நிழல் நீயா.. அவனே நீயா....!!!" (பாடல் முழுமையுமே அற்புதம் தான்!!!) 💖
தனக்கு பின்னர் தோன்றியுள்ள திறமையான நாடகக் கலைஞர்கள் அனைவருக்குள்ளும் "ஐயா" புகுந்துள்ளார். அவரின் துகளும், தழலும், நிழலும் அக்கலைஞர்களிடம் உள்ளது. தன் குருவின் (நேரடியாகவோ, மறைமுகமாகவோ) தாக்கம் சிஷ்யர்களிடம் இருப்பதாக இதை பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.
கலையும், கலைஞர்களும் அவ்வாறே! இரண்டிற்கும் மரணமில்லை தான்.
ஆனால் இது ஒவ்வொரு தனி நபருக்குள்ளும் நிகழக்கூடியது தானே!! கலைஞர்களுக்கு மட்டுமல்ல!!
தொடரும்....
No comments:
Post a Comment