ஒரு நாள் விடியற் காலையில் கிருஷ்ணம்மாள் ஆச்சியை சந்திக்க கிளம்பிக்கொண்டிருந்தேன். பயணத்திலோ தங்குமிடத்திலோ வாசிக்க புத்தகம் ஒன்றை என் பையில் வைத்தேன். அப்புத்தகத்திற்கு ஒரு புக் மார்க்கினை எடுப்பதற்கு அந்த அறைக்குச் சென்று விளக்கு எதுவும் போடாமல் அந்த புக்மார்க் பெட்டில் கைவிட்டு ஒன்றை எடுத்தேன். அது 'தன்னறம்' பதிப்பகத்தினுடையதாக இருந்தது. அதில் எழுதியிருந்தது வினோபாவின் வரிகள்: "when a thing is true, there is no need to use any arguments to substantiate it ."
அந்த இருட்டில் என் கையில் இந்த வரி கிடைத்தது தற்செயல் போன்று இருந்தாலும், எனக்கு நான் வணங்கும் இறையின் அறிவுரையாகப்பட்டது. ஏனெனில் அந்த காலைக்கு முந்தைய இரவு ஒருவரிடம் உண்மையை உரக்கச் சொல்லியே தீருவேன் என என்னுடைய 20 நிமிடத்தை செலவழித்தேன். ஒரு வேளை இயற்கை "நீ ஏன் உன் மூச்சைப் பிடித்திக் கொண்டு செவி சாய்க்க விருப்பமோ எண்ணமோ இல்லாதவர்களிடம் உண்மையை புரிய வைக்க முயற்சித்தாய்?" என்று கேட்பது போன்றே இருந்தது.
பையில் வைத்துக் கொண்டு பயணப்பட்டேன். ஆச்சியை காணப்போன இடத்தில் மூன்றாவது முறையாக ஏதேச்சையாக ஒருவரை (மனதுக்குப் பிடித்த நாங்கள் மதிக்கும் நபர்) சந்திக்க நேர்ந்தது. அதுவும் இயற்கையின் செயல்தான். ஒத்த எண்ணம் உடையவர்கள் சந்தித்து மகிழ்வது இயல்பாக நடந்துக் கொண்டே இருக்கும் என்பதற்கு சாட்சி.
அவரிடம் அன்பு பாராட்டி அந்த அறைக்குள் நடக்க தொடங்கியவுடன் அவர் "நான் உங்களுக்கு சில புகைப்படங்களைக் காண்பிக்கிறேன்," என்றார். அவர் குறிப்பிட்ட புகைப்படங்களைப் பார்த்துகொண்டே நடந்த என்னிடம் வேறொரு இடத்தைக் காட்டி, "நீங்க அந்த படத்தை முதலில் பார்த்து விட்டு வாங்க. ரொம்ப அருமையா இருக்கும்," என்றார்.
என் பையில் நான் வைத்த புக்மார்க் ஒரு பெரிய புகைப்படமாக என் முன்னால். வினோபாவின் அந்த வரிகள் மட்டும் தமிழில்; "செயல் உண்மையாக அமைந்துவிடுகையில் அதனை மெய்ப்பிப்பதற்கான வாதங்கள் தேவையில்லை."
என்னால் அதிலிருந்து உடனே மீள முடியவில்லை. சுற்றி இருந்தவர்களிடம் நான் பையில் வைத்திருந்த அந்த புக்மார்க்கை காட்டி என் ஆச்சரியத்தைப்பகிர்கிறேன். நம்மைச் சுற்றியுள்ள ஆச்சரியங்களை சரியான வார்த்தைகளில் விவரித்துவிட முடியுமா என்ன!!!
மீண்டும் மீண்டும் இயற்கையோ இறையோ என்னிடம் சொல்ல வருவது ஒன்று தான் என நான் உணர்ந்து கொள்கிறேன். "நீ துன்பப்படுகிறாய், உன் நியாயத்தை கூச்சல் போட்டு சொல்ல நினைக்கிறாய். வேண்டாம், செய்யாதே! உன் உண்மை உனக்காகப் பேசும்!"
இதனை நான் செயல்படுத்துவதற்கு காலமாகலாம். அது வரை நான் கூச்சலிட்டுக்கொண்டே இருக்காலாம். ஆனாலும் இயன்ற வரை இறை எனக்கு அளித்த அரிவுரையை ஏற்று நடக்கத் தொடங்கியதுமே மனது லேசாகத் தொடங்கியுள்ளது.💟
No comments:
Post a Comment