Saturday, September 6, 2025

அரசுப் பள்ளி டைரிக் குறிப்புகள் - 5

என் மகள் பயிலும் அரசு பள்ளியில் வளாகத் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்ட போது அங்கு இருந்த ஒரு மரத்தின் ஒரு பகுதியை வெட்ட முடிவு செய்யப்படுவதாக ஆசிரியர்களும் தூய்மைப் பணியாளர்களும் பேசிக் கொள்வதை மாணவர்கள் கேட்டுள்ளனர்.

இவர்களுக்கோ அவ்வாறு வெட்டுவதில் விருப்பமில்லை. ஆசிரியர்களிடம் சொல்லியுள்ளனர். ஆசிரியரோ அதனை வெட்டுவதன் அவசியத்தை எடுத்துக் கூறியுள்ளார். மாணவர்களால் மேற்கொண்டு என்ன பேசுவது, என்ன செய்வது என்று தெரியாமல் விட்டுவிட்டனர். மீண்டும் சற்று நேரம் கழித்து அதே சிந்தனையில் இருந்துள்ளனர்.

"நாம் ஏன் 'மாணவர் மனசு' பெட்டியில் எழுதிப் போடக்கூடாது?" என்று யோசித்துள்ளனர். அனைவரும் ஒப்புக்கொள்ள மாணவர்கள் ஒரு கடிதத்தினை எழுதி அதனை 'மாணவர் மனசு' பெட்டியில் போட்டுள்ளனர்.

 
google images

இச்சம்பவத்தை என் மகள் வீட்டில் சொன்னவுடன் பெருமையாக இருந்தது. ஒன்று மரத்தினை பாதுகாக்க குழந்தைகள் நினைத்துள்ளனர். மற்றொன்று தங்களின் எண்ணத்தை நேரடியாக ஆசிரியர்களிடம் சொல்லியுள்ளனர்; அதனை விடவும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் தங்களின் மனதில் எழும் எதையும் 'மாணவர் மனசு' என்ற பெட்டியில் போடலாம் என்ற அரசின் முன்னெடுப்பினை அக்குழந்தைகள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

இன்று வரை என் எண்ணத்தில் தோன்றும் பிரச்சனைகளை தைரியமாக பேச கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அதை ஒரு அரசுப் பள்ளி போகிறப்போக்கில் செய்கிறது, அவ்வாறு குறைகளை எழுதிப் போடும் குழந்தைகளை தண்டிக்காமல்! 💗

No comments:

Jane Goodall - A Netflix Interview

Jane Goodall - A name most of us would have come across in the last month as she passed away. As planned, her interview, titled "Famo...