நான்கு வருடத்திற்கு முன் கேட்கப்பட்ட ஒரு கேள்வியினையும், நான்கு நாட்களுக்கு முன் கேட்கப்பட்ட ஒரு கேள்வியினையும் பகிரலாம் என்று தோன்றியது.
முதன்முறையாக பள்ளிக்குச் சென்று வந்த எங்கள் மகளிடம் அன்றைய வீடுப்பாடத்தினை செய்ய சொல்லி, பின்னர் பயின்றதை பார்க்காமல் எழுத வருகிறதா என்று முயற்சி செய்வோமா என்ற முட்டாள்தனமானக் கேள்வியை கேட்டேன்.
என் மகள் அவளின் வீட்டுப்பாடத்தினை முடித்தவுடன், "அம்மா, இப்போ பாக்காம எழுத முயற்சி செய்யவா" என்றாள்.
"சரி," என்றேன்.
உடனே தன் இரு கண்களையும் தன் சிறு கையால் மூடிக் கொண்டு பெரும் குழப்பத்தில், "அம்மா, எதுவுமே தெரியல. என்ன செய்யட்டும்? எப்படி எழுதுறது?", என்றாள்.
நம் பிள்ளைகளின் குழந்தமையை எவ்வளவு சிறிய வயதிலிருந்தே தீர்த்துக்கட்டுகிறோம் என்று மீண்டும் ஒரு முறை வெட்கத்துடன் வியந்தேன்.
நான்கு நாட்களுக்கு முன் என்னுடன் பணிபுரிபவரின் மகன் (5 வயது) பள்ளி முடித்து வந்தான். வீட்டுப்பாடம் என்ன உள்ளது என்று அவனின் தாய் பார்த்துவிட்டு, "தம்பி, மூன்று தடவை இந்த பாடத்தை எழுதணும். சரியா?"
உடனே அவன், "அம்மா, நான் ஒரு தடவ எழுதி, அதை அழிச்சிட்டு திரும்ப எழுதி, திரும்ப அழிச்சு திரும்ப எழுதி, மூனு தடவையாக்கனுமா?" என்றான்.
நமக்கு (பெரியவர்களுக்கு) இன்னும் பயிற்சி தேவையோ (குழந்தைகளுகளுடன் எளிதாக உரையாட) மொமன்ட்! 😃
No comments:
Post a Comment