Saturday, July 26, 2025

இயற்கைக்கு உயிர் இருக்கா?

(1) 

சில மாதங்களுக்கு முன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கையில், உயிருள்ளவை உயிர் அற்றவை குறித்தான பேச்சு எழுந்தது. 

"என்னது, காந்தி செத்துட்டாரா?" என்பது போன்ற அதிர்ச்சியில் நானும் என் கணவரும் "என்னது சூரியன், சந்திரன், நீர், காற்று, இவைகளெல்லாம் உயரற்றவைகளா?????" என்று மூன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்துடன் வியப்புடன் உரையாடத் தொடங்கினோம்.  

ஏன் இயற்கை உயரற்றவைகளாக கற்றுத்தரப்பட வேண்டும்? நாம் உயிர் வாழத் தேவையான இயற்கையை உயிர் உள்ளதாக ஏன் நாம் உணருவதில்லை? கற்பதில்லை? சிறு குழந்தைகளாக இருக்கும் போது நாம் அனைவருமே இயற்கையும் நம் கூட்டாளி என்பது போன்ற உறவுடனே இருந்தோமே! எந்த வயதில் மாற்றுக்கருத்து உள் வந்தது? பள்ளிக்கூடம் தான் நமக்கு மாற்றிக் கற்றுக்கொடுக்கிறதோ? இல்லையெனில், நாம் தான் அனாவசியமாக இயற்கையை உயிர் உள்ளவையாக நினைத்துக் கொள்கிறோமா?  அறிவியல் ஞானமா? எதுவென்று சரியாக தெரியவில்லை.

 (2)

ஒரு முறை குழந்தைகளுக்கான கதைகளில் புனைவு, அதீத புனைவு என்பது பற்றிய கலந்துரையாடலில் நிறைய அனுபவங்களைப் பலருடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் ஒரு குழந்தை மரத்துடன் ஏதோ உரையாடலில் இருந்ததைப் பற்றியும், மரம் காற்றில் அந்நேரம் அசைந்தது மரம் அக்குழந்தைக்குத் தலையை அசைப்பதாகவும் இருந்ததை அக்குழந்தையும், குழந்தையின் தாயும் உரையாடியதைப் பற்றி விவாதம் எழுந்தது (அது நானும் என் மகளும் தான்). உரையாடலில் இருந்த ஒருவர் மரம் நம்முடன் உரையாடுகிறது என்பது போன்றவை குழந்தைகளுக்கு அதீதப் புனைவு என்பதாகும். இல்லாத ஒன்றை குழந்தைகளுக்கு சொல்வது என்பது இயற்கைக்கு எதிரானது என்றும் மிகைப்படுத்துதல் என்றும் விவாதித்தார். எனக்கு அவரின் வாதத்தில் அப்போதும் உடன்பாடு இல்லை. இப்போதும் இல்லை. 

  Alternative Worldviews - Sharing life: The ecopolitics of reciprocity |  Heinrich Böll Stiftung | Regional Office New Delhi 

(3) 

இப்பூமியில் பல திசைகளில் மனிதர்கள் இன்னும் இயற்கையை தன் உற்றத்துணையாகக் கருதி வாழ்கின்றனர். இயற்கை இல்லையேல் நாம் இல்லை. மனிதர்களாகிய நமக்கு இருக்கும் உணர்வுகளைப் போன்றே இயற்கைக்கும் உண்டு என்பது போன்ற நிறைய கருப்பொருட்கள் "SHARING LIFE" என்று மேலே குறிப்பிட்டுள்ள புத்தகத்தில் கையாளப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் என் நண்பனால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இந்த புத்தகம் என்னை மிகவும் கவர்ந்தது. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்கள், உலகின் இன்னும் பல இடங்களில் மனிதர்கள் இயற்கையை தங்களின் வாழ்நாள் முழுக்க உடன் பயணிக்கும் ஒரு சக பயணி போலவே கருதுகின்றனர். அவர்களின் வாழ்வியிலே இயற்கையுடன் பிணைக்கப்பட்டு பிரிக்க இயலாததாக இருக்கிறது. இதற்கு உதாரணங்களும் சம்பவங்களும் புத்தகத்தில் உள்ளன. சுவாரஸ்யம்! 

இப்புத்தகமானது இயற்கைக்கு எம்மாதிரியான உணர்வுகள் உண்டு, மனிதன் என்பவன் மற்ற உயிரினங்கள் போன்றும் இயற்கையினைப் போன்றும் ஒரு பகுதி மட்டுமே என்பதை ஒவ்வொரு பக்கத்திலும் நினைவுப்படுத்துவதாக உள்ளது.

நாம் இந்த பரந்த பிரபஞ்சத்தில் மிகச் சிறிய துகள் என்பதை அவ்வப்போது நினைவுப்படுத்திக் கொள்வது நமக்கும் நல்லது நம்மைச் சுற்றியிருக்கும் பிற உயிரினங்களுக்கும் நல்லது. 💚 குழந்தைகளுக்கான கதைகள் காடுகள் பேசுவதும், காற்று இரகசியம் சொல்வதும், மலைகள் உரையாடுவதும் இயற்கை தான். 😍

No comments:

Post a Comment

Who Wrote the Indian Constitution? 💭

"Who wrote the Indian Constitution?" - If this question was asked to me, I would have straight away said "Dr Ambedkar", ...