கல்லூரி காலங்களில் விலைக்கூடிய புத்தகங்களை வாங்க முடியாத நேரத்திலும், ஒரு சில பகுதிகள் மட்டுமே ஒரு புத்தகத்தில் தேவைப்படும் வேளையிலும் மட்டும் பழைய புத்தகக் கடைகளை நோக்கி போனதுண்டு. மற்றபடி விரும்பி வாசிக்கக்கூடிய புத்தகங்களுக்காக அவ்வாறு போனதில்லை. பொதுவாக வேறொருவர் பயன்படுத்தி தனக்கு தேவையில்லை என்றோ, பழையதாகியது என்றோ தூக்கி எறியப்பட்ட புத்தகங்களை நாம் ஏன் வாங்க வேண்டும் என்ற எண்ணம். அதில் நிறைய கிறுக்கல்கள் இருக்கும், கோடிட்டிருக்கும், கிழிந்திருக்கும் என்பது போன்ற பார்வையே எனக்கு மேலோங்கியிருக்கும். பாடப்புத்தகங்கள் விலை அதிகமாக இருந்ததால் வேறு வழியில்லை. மற்றபடி நம்மால் முடிந்த அளவு புத்தகங்கள் புதிதாக வாங்கியே படிப்போம் என்ற எண்ணம்.
சமீபத்தில் படித்த "வீடில்லாப் புத்தகங்கள்" (எஸ்.ரா) வேறு பார்வையை கொடுத்துள்ளது. நல்ல நிலையில் உள்ள புத்தகங்களும் கிடைக்கும், அரிய புத்தகங்கள், நமக்காக காத்துக் கொண்டிருக்கும் புத்தகங்கள், நம் பார்வையை மாற்ற எதேச்சையாக கிடைக்கக்கூடிய புத்தகங்கள், இப்படி ஏராளமானவை, அதுவும் குறைந்த விலையில். வேறொருவர் வேண்டாம் என வெளியேற்றியதை நமக்கு தேவைப்பட்டால் வரவேற்பதில் என்ன தவறு!! ஒரு வகையான ஈகோவும் இவ்வளவு நாள் ஒட்டிக்கொண்டிருந்ததை உணர முடிந்தது.
"வீடில்லாப் புத்தகங்கள்" - சாலையோர புத்தகங்களை விர்ஜீனியா வுல்ஃப் இப்படிதான் அழைத்துள்ளார். உண்மை தான். இன்னும் இருப்பிடமேதும் கிடைக்காமல் சாலையிலேயே வசித்து வருகிறது தன்னை ஏந்தும் கைகளுக்காக காத்துக்கொண்டு. இப்புத்தகத்தில் எஸ்.ரா சாலையோர அல்லது பழைய புத்தக்கடைகள்/வண்டிகளுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், நடந்த சம்பவங்கள், கிடைத்த புத்தகங்கள் என பலவற்றை அழகாக விவரித்துள்ளார். அக்கடைக்காரர்களுடன் ஏற்படும் வித்தியாசமான நட்பும் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. பழைய புத்தகங்களில் யாரோ ஒருவரால் எழுதப்பட்ட குறிப்புகளை யார் யாருக்காக எழுதியிருப்பார்கள் என்ற எஸ்.ராவின் எண்ண ஓட்டங்கள் இருப்பது படைப்பாளிகளுக்கே உண்டான கற்பனை வளம்.
எனக்கு அப்படியெல்லாம் தோன்றுமா என்று தெரியவில்லை. ஆனால் பழைய புத்தகங்கள்/கடைகள் அவசியம் பார்க்க வேண்டியவை என்று நம்புகிறேன். அதன் விளைவாக தற்போது எங்கள் நூலகத்திற்கும், வீட்டிற்கும் சில பழைய புத்தகங்கள் வாங்கியுள்ளேன். அவற்றுள் சில புத்தகங்கள் நிச்சயம் என்னால் புதியதாக வாங்க இயலாது (விலையினால்). இதில் எனக்கு கிடைத்த இன்னொரு படிப்பினை நாம் பயன்படுத்தும் புத்தகத்தினை முடிந்தவரை நல்ல நிலையில் வைத்துக்கொள்வது பின்னர் ஒரு நாள் வேறு ஒருவருக்கு போய்சேர உதவியாக இருக்கும் என்பது தான்.
No comments:
Post a Comment