Monday, February 17, 2025

அரசுப் பள்ளி - அனுபவக் குறிப்புகள்: 3

கண்டிப்பாக Pre KG, LKG, UKG போன்ற பெரிய படிப்புகள் எங்கள் மகளுக்கு தேவையில்லை என்று முடிவு செய்திருந்ததால் அரசு அங்கன்வாடிக்கு ஆறு வயது வரை சென்று வந்தாள். அவள் இஷ்டத்திற்கு ஏற்ப விடுப்பு எடுத்துக் கொள்வது என்று மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆறு வயது நெருக்கத்தில் அவளுக்கு அங்கு சொல்லிக்கொடுப்பது எல்லாம் சலித்துப்போகவே விடுப்புகள் நிறைய எடுக்க ஆரம்பித்தாள்.

அவளின் அங்கன்வாடியில் தான் அவள் தனியாக உண்ண கற்றுக்கொண்டது. சக குழந்தைகளுடன் நெருக்கமாக பழகியது. அங்கு தன்னுடன் இருந்த நிறைய பேர் இன்று பள்ளியிலும் உடன் இருப்பது மகிழ்ச்சி. அவளின் அங்கன்வாடி ஆசிரியரும் சரி, சமைக்கும் அத்தையும் சரி அவள் அங்கு இருந்த காலத்தில் மிக அருமையாக பார்த்துக் கொண்டனர் என்றால் மிகையாகாது. அவளை அங்கன்வாடியில் சேர்த்தது மிகச்சரி என்று சொல்வதற்கு நிறைய தருணங்கள் கிடைத்தது.

எனினும் ஒரு நிகழ்வு.

அங்கன்வாடிக்கு என்று ஒரு சீருடை உண்டு. இப்போது மாற்றி விட்டார்கள், நிறம் மற்றும் அமைப்பினை. அப்போது நீல நிறத்தில். ஆண் குழந்தைகளுக்கு சட்டை மற்றும் அரைகால் சட்டை. ஆனால் பெண் பிள்ளைகளுக்கு பாவாடையாகவும் இல்லாமல், சட்டையாகவும் இல்லாமல் தரையில் உட்கார வசதியில்லாமலும், விளையாட ஏற்றதாகவும் இல்லாமல் இருக்கும். இரண்டு சீருடைகள் தருவர். அத்துணி வேறு எங்கும் கிடைக்காது. கூடுதலாக வாங்க இயலாது. அதனால் சில நாட்கள் குழந்தைகள் வேறு உடைகளை அணிவது வழக்கம். அவ்வாறு ஒரு நாள் பள்ளியில் வருணிகாவின் சீருடை ஈரமானதால் தன் பையில் இருந்த தன் அரைகால் சட்டை போன்ற ஆடையை மாற்றிக்கொண்டாள். அவளின் அங்கன்வாடி ஆசிரியர் இது போன்ற ஆடையை பள்ளிக்கு போட்டுவரக் கூடாது என அவளிடமே தெரிவித்தார். அதனை அவள் என்னிடத்தில் கூறும் போது என்ன சொல்வதென்றே தெரியாமல் இருந்தது! 

வீட்டில் மட்டுமே உடுத்தக்கூடிய ஆடைகளை பள்ளிக்கு அணிவிக்கக்கூடாது என்ற குறைந்தபட்ச அறிவினைக் கொண்ட நாங்கள், நிச்சயம் அது போன்ற உடையினை கொடுத்து அனுப்பியிருக்க மாட்டோம் என்பது குறிப்பிடத்தக்கது.

 பெண் எழுத்து: ஆடை அரசியல் | Female Writing: The Politics of Dress -  hindutamil.in

ஐந்து வயது மகள் அணிந்த ஆடை அவளின் முட்டி வரை மட்டுமே இருந்தது என்பதும்  இறுக்கமானது என்பதும் தான் அவர்களின் பிரச்சனை. ஐந்து முதல் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டுமே உள்ள இடத்திலும் இது என்ன மாதிரியான ஆடை கட்டுப்பாடு என்று இன்றளவும் எனக்கு விளங்கவில்லை. அந்த நிகழ்வினை நினைக்கையில் எரிச்சல் என்ற உணர்வு தான் மேலோங்குகிறது.

1 comment:

  1. பெரும்பாலும் பெண்களே பெண்களின் ஆடை சுதந்திரத்திற்கு எதிராக இருக்கின்றனர்...

    ReplyDelete

மொட்ட கடுதாசி

  தபால் பெட்டி எழுதிய கடிதம் - எஸ்.ரா.வின் இந்த புத்தகம் சிறார்காளுக்கான நாவல். பெரியவர்களும் வாசிக்கலாம். நம் பழைய நினைவுகளை கிளறச்செய்வதாக...