அங்கன்வாடியில் துவங்கி தற்போது பயின்று வரும் மூன்றாம் வகுப்பு வரை பள்ளிக்குச் செல்வதில் வருணிகாவிற்கு எந்த தொந்தரவும் இருந்ததில்லை. ஏனோ இரு வாரங்களுக்கு முன்னர் திடீரென்று பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லை என சொல்லி ஒரே அழுகை. சரியென்று அவள் போக்கில் ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள் என பள்ளிக்கு விடுமுறை எடுத்தாயிற்று. பிரச்சனை என்னவென்று குழந்தைக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை. ஒரு வழியாக சில, பல காரணங்களை ஊகித்து/கண்டுபிடித்து, அதனை சரி செய்வதென்று மூவரும் ஒரு மனதாக முடிவு செய்தாயிற்று.
அவள் பள்ளிக்குப் போகாத மூன்றாவது நாள் பள்ளியின் தலைமையாசிரியர் உட்பட மூன்று ஆசிரியர்களிடமிருந்து தொலைப்பேசி அழைப்புகள்.
"அவளை அனுப்பி வைங்க. நாங்க பாத்துக்கறோம்."
"சரிங்க மேடம்/சார்."
"பாப்பா, பாத்தியா. ஸ்கூலயிருந்து உன்ன கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. உன்ன அவங்களுக்கு தேடுதாம்," என்று அம்மா சொல்ல, அரை மனதுடன் அவள் பள்ளிக்குச் சென்றாள்.
மறுநாள் பள்ளியில்:
"சார், கொஞ்சம் பாத்துக்கங்க," என்று நான் சொன்னது தான் தாமதம். அவளின் ஆசிரியர் அவளை விட ஒரு குழந்தையாக மாறி,
"மேடம், எனக்கு மூனு நாளா வேலையே ஓடல. இவ இப்படி இருக்கற பொன்னு இல்லையே, ஏன் இப்படி ஆனா, அவளுக்கு என்ன ஆச்சுனு யோசிச்சிட்டே இருக்கேன் மேடம். என்னால என் வேலைல கவனம் செலுத்தவே முடியல. எங்க கிட்ட அவளுக்கு ஏதும் பிரச்சனனு சொன்னா சரி செஞ்சிடலாம் மேடம்," என்று அவர் சொல்லும் போதே அவர் கண்ணில் அக்கறையும், கவலையும், கொஞ்சம் கண்ணீரையும் உணர முடிந்தது.
இப்படி ஒரு ஆசிரியர் என் மகளுக்கு தனியார் பள்ளியில் கிடைத்திருப்பாரா என்பது சந்தேகமே!!
பி.கு: அந்த ஒரு வாரம் அழுகையுடன், சோகமாக
பள்ளிக்கு சென்றவளை பார்ப்பதற்கு அழுகையாக வந்தது. ஒரு குழந்தை
மகிழ்ச்சியாக சென்று வர ஒரு பள்ளி இல்லையோ என்ற கோபமும், விரக்தியும், இயலாமையும்
அழுகையாகவே வெளிவந்தது.
No comments:
Post a Comment