எனது மகள் பயிலும் அரசுப் பள்ளியில் ஏராளமான அனுபவங்கள் கிடைக்கின்றன. அவற்றை பதிவு செய்வது, புதிய அல்லது பழைய உரையாடல்களுக்கு பயன்படலாம் என்பதால் எழுத முடிவு செய்துள்ளேன்.
2024ம் ஆண்டு குழந்தைகள் தினத்தை ஒட்டி மூன்றாம் வகுப்பு பயிலும் வருணிகா தன் பள்ளியில் பயிலும் அனைத்து நண்பர்களுக்கும் (மொத்த மாணவியர் எண்ணிக்கை 30) வாழ்த்து தெரிவிக்க விரும்பி, வீட்டில் இருந்த வெள்ளை தாள்களை எடுத்து, அவற்றை கிழித்து ஒரு சிறிய விடிவ புத்தகம் போன்று நான்கு பக்கங்களில் செய்தாள். அதில் ஒரு பக்கத்தில் நண்பரின் பெயர், இரண்டாவது பக்கத்தில் குழந்தைகள் தின வாழ்த்து, மூன்றாவது பக்கத்தில் ஒரு படம் வரைந்து, நான்காவது பக்கத்தில் இவளின் பெயர் என்று ஒரு திட்டம் தீட்டி வேலையை தொடங்கினாள்.
ஏறக்குறைய 30 நபர்களுக்கு செய்ய வேண்டும். ஆரம்பத்தில் சுலபமாக செய்து விடலாம் என்று எண்ணியிருந்தாள். ஆனால் முடியவில்லை. நாட்கள் மிகக் குறைவாக இருந்த போது தான் ஆரம்பித்து இருந்ததால், சிரமமாக உணர்ந்தாள். ஆனாலும் பாதியில் நிறுத்த மனசில்லை. இம்மாதிரி நேரத்தில் பெற்றோர்கள் தலையில் இவ்வேளைகள் விழுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. வருணிகாவின் பெற்றோர்களும் இந்த முக்கியமான பணியில் ஈடுபட்டனர். வேலையும் சூடுபிடித்து இரண்டே நாட்களில் முடிந்தது. எனினும் இன்னும் வண்ணமயமாக இந்த பரிசு இருக்கலாமே என்று அவளுக்குத் தோன்ற, மீண்டும் மூவரும் களத்தில். ஒவ்வொருவருக்கும் ஏதேனும் மூன்று வண்ணங்களைக் கொண்டு ஒவ்வொரு பக்கத்தின் ஓரங்களையும் (borders) வண்ணமயமாக்கினார்கள். உண்மையில் இவ்வண்ணம் தீட்டியபின் அப்பரிசு கூடுதல் அழகாகியது.
குழந்தைகள் தின விழா முடிந்த பின் வருணிகா அவளின் நண்பர்கள் அனைவருக்கும் இப்பரிசினை வழங்கினாள். ஆசிரியர் இவ்வாறு நீங்களாக செய்து வழங்கும் பரிசே விலையுயர்ந்தது என பாராட்டி அனைவரும் இவ்வாறு செய்ய ஊக்கப்படுத்தியது இவளுக்கு கூடுதல் மகிழ்ச்சி.
குழந்தைகள் சந்தோஷமாக பெற்றுக் கொண்டனரா என பெற்றோர்கள் கேட்டனர். ஆம் என்றாள். மூவருக்கும் மகிழ்ச்சி.
மறு நாள் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவள் சொன்ன முதல் விஷயம்,
"அம்மா, சீனு நான் குடுத்த பரிச திருப்பிக் கொடுத்துட்டான்."
"ஏன்?"
"நான் அவனுக்கு கொடுத்த பேப்பரில் கலர் அடிச்சிருந்தேன் ல?"
"ஆமாம்."
"அது அவனுக்கு பிடிக்கலையாம்."
"ஏன்னு கேட்டியா?"
"ம்ம்ம்ம்.."
"என்ன சொன்னான்?"
"அதுல இருந்த கலர் அவங்க கலர் இல்லையாம். அவங்களுக்கு வேற கலராம். அப்படினு சொல்லி திருப்பி கொடுத்துட்டான்."
அம்மாவுக்கு அதிர்ச்சி. சீனு நான்காம் வகுப்பு. அப்பா இறந்து ஒரு வருடம் தான் ஆகிறது. நல்ல சேட்டைக்காரன். படிப்பிலையும் ஓரளவுக்கு கெட்டி தான்.
"அம்மா, அது என்ன அவன் கலர் இல்லைனு சொல்றான்?"
"அந்த கலர் எல்லாம் அவனுக்கு பிடிக்கல போல. நாம அவன் கிட்ட கேப்போம் ."
கயிறு தான் பிரச்சனைனு நினைச்சா, நிறம்கூட பிரச்சனை தான் போல.
No comments:
Post a Comment