Thursday, December 5, 2024

மின்மினி பூச்சிகள் 🐝

என் சிறு வயதில் மின்மினி பூச்சிகள் ஏராளமாக இருந்தன. நாங்கள் வசித்த தெருவில் மாலை, இரவு வேளைகளில் விளையாடும் போது மின்மினிகளும் சேர்ந்து கொள்ளும். அதனை உள்ளங்கையில் ஒளித்து விளையாடுவது வழக்கம். ஆனால் தற்போது மின்மினிகளை எங்கும் காண முடியவில்லை. நாங்கள் தற்போது வசிக்கும் பகுதி ஒரு காடு போன்றது என்றாலும் மின்மினிகளை காணோம். உட்கிராமங்களிலும், அடர்ந்த காடுகளில் மட்டும் காணக்கூடுமோ என்னவோ! மின்மினி பூச்சிகளை கண்டால் மகிழ்ச்சிக் கொள்ளாத குழந்தைகள் இருக்க வாய்ப்பில்லை.

(1) மின்மினிகளுக்காகவே ஒரு பயணம்! 

கோயம்பத்தூர் மாவட்டதின் மலைப்பகுதியில் உள்ள சத் தர்ஷன் என்ற இடத்தில் ஏராளமான மின்மினிகளை தினமும் இரவு காணலாம் என்று அறிந்து ஒரு குட்டி பயணம் மேற்கொண்டோம். மின்மினிகளை கண்டுகளிக்க! இரண்டு இரவுகள் மட்டுமே தங்கினோம். மேடும் பள்ளமுமான பாதை. சுற்றி அடர்ந்த, உயர்ந்த மரங்கள். இருட்டால் போர்த்தப்பட்டிருந்தது. எந்த செயற்கை ஒளியும் புகவில்லை. எந்த சத்தமும் இல்லை. நடந்து சென்று மின்மினிகள் புடைசூழும் இடத்தை அடைந்தவுடன், அவற்றின் மத்தியில் அமைதியாக அமர்ந்திருக்க ஒரு அழகான திண்ணை போன்ற அமைப்பு. இருண்ட வெளியில் மின்மினிகளின் வேளிச்சம் மட்டுமே. ஆயிரக்கணக்கான மின்மினிகள். நம்மை தொட்டுச் செல்வதும் உண்டு. நம் மீது அமர்ந்து செல்வதும் உண்டு. அந்த அழகில் மயங்காதவர்கள் இருக்க முடியாது. எங்கள் மூவருக்கும் இயற்கையின் அழகை மீண்டும் ஒரு முறை உணர்த்திய அனுபவம்.   

(2) மினிமினிகளின் வெளிச்சம் 📖

அந்த பயணத்திற்குப் பிறகு மின்மினிகளின் மீது கூடுதல் நெருக்கம் ஏற்பட்டதை குறை சொல்ல முடியாது, பிரதம் பதிப்பகத்தின் இப்புத்தகத்தை எங்கள் நூலகத்திற்கு வாங்கினோம். அருமையான ஒளிப்படங்களுடன், எளிமையான வடிவத்தில் மின்மினிகளின் வெளிச்சத்தில் உள்ள அறிவியலை விளக்குகிறது இப்புத்தகம். "ச்ச நாமும் இப்படி மின்னுனா எவ்ளோ நல்லாருக்கும்" என்று நினைக்கும் குழந்தைகளுக்கும், குழந்தையாகவே உள்ள பெரியவர்களுக்கும் "ஏன் மின்மினிகள் மட்டும் ஒளிருகின்றன?" என இப்புத்தகம் விளக்கும்.

Why can't we glow like fireflies? Pratham Level 3 | kahaanibox

(3) திரையில் மின்மினிகள் 

சமீபத்தில் பார்த்த ஒரு திரைப்படம் "Grave of the Fireflies." ஜப்பானிய திரைப்படம். போர் பின்னணியில், தாய், தந்தையை இழந்து உயிர் வாழ்தலுக்குப் போராடும் அண்ணன், தங்கை பற்றியது. அவர்கள் சந்திக்கும் இன்னல்கள், தங்கை, தாய் நிச்சயம் வருவார் என்று நம்பி காத்திருப்பது, உணவுக்கு தவிப்பது, யாரையேனும் சார்ந்திருப்பது, நிலையில்லாத வாழ்வு போன்ற போர் கால தவிப்புகள் நம்மையும் ஆட்கொள்ளும். இறுதியில் இருவரும் யாரையும் சார்ந்தில்லாமல் தனியே ஒரு குகை போன்றதொரு இடத்தை கண்டடைந்து அங்கு வாழத்தொடங்குகிறார்கள். அவ்விடம் ஆறு ஒன்றுக்கு மிக அருகில் உள்ளது. ஏராளமான மின்மினிகளுடன். தங்கை மின்மினிகளைக் கண்டு மகிழ்ச்சிக்கொள்கிறாள். மின்மினிகளை ஒரு பெட்டிக்குள் அடைத்து அவர்கள் தூங்கும் வலைக்குள் அண்ணன் விடும் காட்சி அருமை. தங்ககையின் கண்களில் விரியும் ஆச்சரியம் நமக்குள்ளும் வந்து சேரும். ஒரு நாள் காலை இறந்து போன மின்மினிகளை தங்கை மண் தோண்டி சோகத்துடன் புதைப்பாள். பின் ஒரு நாள் அதே போன்று தானும் ஏதென்று அறியாத போரினால் மின்மினிகளுக்குப் பக்கத்திலேயே புதைக்கப்படுவோம் என்று அந்த பிஞ்சு கைகள் அப்போது அறியாது. அவளும் இப்பூமியில் காணாமல் போன ஒரு மின்மினி தான்! அவளைப் போன்று காணாமல் போகும் மின்மினிகள் இன்றும் ஏராளம் 💔

Film Analysis: “Grave of the Fireflies” – The Cinephile Fix

 

2 comments:

  1. இறந்தவர்கள் மின்மினிகளாக உருவெடுப்பதாக அம்மா கூறியது நினைவுக்கு வருகிறது.....இப்போதெல்லாம் மின்மினிகளை கூடுதலாக விரும்புகிறேன் .....!

    ReplyDelete

Who Wrote the Indian Constitution? 💭

"Who wrote the Indian Constitution?" - If this question was asked to me, I would have straight away said "Dr Ambedkar", ...