எனக்கும் என் மகளுக்கும் அவ்வப்போது யார் வேகமாக புத்தகத்தினை படித்து முடிக்கிறார்கள் என்ற போட்டி நடப்பதுண்டு. அது போன்று நேற்று ஒரு போட்டியை துவங்கலாம் என முடிவு செய்து ஆளுக்கு ஒரு புத்தகத்தை தேர்ந்தெடுத்தோம். எவ்வளவு பக்கங்கள், கதையா நாவலா, யார் எழுதியது, எதை பற்றியது என ஏராளமான உரையாடலுக்குப் பின் அவரவர் புத்தகத்தை எடுத்துக் கொண்டோம்.
இன்று காலை நான் என் புத்தகத்தை மாற்றிக் கொள்ள போகிறேன் என்று சொன்னவுடன் அவளும் வேறு புத்தகத்தை தேடத் துவங்கினாள். நான் ஒரு புத்தகத்தை எடுத்தவுடன் "எனக்கு 'கால் முளைத்த கதைகள்' புத்தகம் எடுத்துக் குடு மா" என்று கேட்டாள். எடுத்துக் கொடுத்தேன். பின்னர் என் புத்தகத்தை பார்த்துவிட்டு "நீ உன் ஆஃபீஸுக்கும் புக் எடுத்துட்டு போவியா? அப்படீனா நீ ஃபர்ஸ்ட் முடிச்சிடுவியே!?" என்று கேட்டாள். அலுவலகத்தில் நேரம் கிடைத்தால் அங்கு வேறு புத்தகம் தான் வாசிப்பேன் என்றும் வீட்டில் வந்து தான் போட்டி புத்தகத்தை வாசிப்பேன் என்றும் சொன்னேன்.
உடனே அவள் "எனக்கு ஒரு பெரிய கதை எடுத்து குடுமா" என்று கேட்டாள். நான் 'சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்" என்ற புத்தகத்தை எடுத்து கொடுத்தேன். அவள் அதை பள்ளி பைக்குள் வைத்துக் கொண்டு, "இது ஸ்கூலில் படிக்க, அது வீட்டில் படிக்க" என்றாள்.
விவரிக்க முடியாத மகிழ்ச்சி என்னை தொற்றிக்கொண்டது. 💝
பின் குறிப்பு:
(1) ஏனோ அவளுக்கு எஸ்.ரா வின் புத்தகங்கள் மிகவும் பிடிக்கின்றன.
(2) பள்ளி நூலகத்தில் அவளுக்கு "நுழை" பிரிவின் (Reading Level 1) நூல்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன என வருத்தம்.
Blessed I am, blessed is the society
ReplyDelete