பயணத்தில் இரு புத்தகங்களை கொண்டு செல்வது வழக்கம். நெடு நேரம் வாசிக்கும் போது சோர்வு ஏற்பட்டால் என்ன செய்வது என்பதற்கான ஏற்பாடு. சில வேளைகளில் இரு புத்தகங்களும் வாசிக்கப் பிடிக்காமல் கைப்பேசியை நோண்டுவதும் உண்டு.
நேற்று அலுவலக வேலையாக வெளியூருக்கு செல்லும் போது சின்னதாக ஒரு புத்தகத்தை எடுத்து செல்லலாம் என அலமாரியில் தேடுகையில் இமையம் அவர்கள் எழுதிய "வாழ்க வாழ்க" புத்தகம் சிறியதாக இருந்ததால் எடுத்துக் கொண்டேன். சென்றிருந்த அலுவலகத்தில் காத்திருப்பு அதிகமாக இருந்ததால் இப்புத்தகத்தை எடுத்தேன்.
கரூர் சம்பவம் நடந்து 10 நாட்களை ஆன நிலையில் இப்புத்தகத்தை கையில் எடுத்தது இயற்கையின் விதியில் நடந்த ஒரு நிகழ்வு. ஒரு அரசியல் கூட்டம் நடக்கையில் ஒவ்வொரு ஊரிலிருந்தும் மக்களை, குறிப்பாக பெண்களை (சில நேரங்களில் குழந்தைகளுடன்) வண்டிகளில் ஏற்றிச் செல்வதும் அதன் தொடர் நிகழ்வுகளாக நடப்பவைக் குறித்தும் எழுதப்பட்டுள்ள குறுநாவல்.
நாம் அறிந்த, ஆதங்கப்படுகிற பல விஷயங்களை நமக்கு மீண்டும் நியாபகப்படுத்துவதாக பல பகுதிகள் உள்ளன. பெண்களுக்கு உடுத்த கொடுக்கப்படும் சேலையில் தொடங்கி, பெண்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்கிறதோ இல்லையோ, ஆண்களுக்கு சாராயம் கிடைப்பது வரை ஏராளமான விஷயங்களை இந்நாவல் கையாண்டுள்ளது. நான் இதுநாள் வரை யோசிக்கத் தவறிய ஓரிரு விஷயத்தை அறிய வைத்தது இந்நாவல்.
ஒன்று, இக்கூட்டத்திற்கு வண்டியில் ஏற்றி அழைத்துச் செல்லப்படும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு வாழ்க்கையும் ஒவ்வொரு வலியும் உள்ளது. ஆணாதிக்கச் சமுகத்தில் பல பெண்களுக்கு 'இருத்தலே' போராட்டம் தான்.
மற்றொன்று, இவ்வாறான கூட்டங்களில் குடிநீர் வசதியில்லை, புழுக்கம் போன்றவை நாம் பெரும்பாலும் பேசுவது தான். ஆனால் இந்த பெண்கள் "எங்கு சிறுநீர் கழிப்பர்?" என்று நான் இதுவரை யோசித்ததில்லை. இப்புத்தகம் அதை யோசிக்க வைத்தது. பாரபட்சமின்றி ஆண் தலைவர் கூட்டமோ, பெண் தலைவர் கூட்டமோ, பெண்கள் ஒதுங்க இடம் பெரும்பாலும் இருப்பதில்லை, அப்படியே இருந்தாலும், அது கூட்டம் நடக்கும் இடத்திலிருந்து வெகு தூரமாகவும் பாதுகாப்பின்றியும் இருப்பதாகவே தோன்றுகிறது இப்புத்தகத்தை வாசிக்கையில்.
அரசியல் கூட்டங்களில் அல்லல்படும் பெண்களின் நிலை மாற இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ!!
No comments:
Post a Comment