Friday, October 31, 2025

புத்தகங்களும் மொழியாக்கங்களும் - அனுபவப் பகிர்வு

சமீபத்தில் சமூக ஊடகங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது உம்பர்ட்டோ எக்கோ எழுதி தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட "ரோஜாவின் பெயர்" என்ற புத்தகம். எதிர் வெளியீடு. இப்புத்தகத்தை நான் வாசிக்கவில்லை. பலர் இதனின் மொழியாக்கம் மோசமாக உள்ளதை சுட்டிக்காட்டினர். குறிப்பாக எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்கள் இதனை கடுமையாக விமர்சித்திருந்தார்.

எனது சொந்த அனுபவத்தில் நேரடி ஆங்கில புத்தகமானால் அதனை வாசிப்பதே சிறந்தது என்ற எண்ணம் உண்டு. பிற மொழி புத்தகங்கள் ஆங்கிலத்தில் கிடைக்காத பட்சத்தில் தமிழில் வாசித்தல் நலம் என்று எண்ணுவது உண்டு. இதெல்லாம் மீறியும் பல புத்தகங்களின் தமிழ் மொழியாக்கத்தை வாங்கிவிடுவதும் உண்டு. இந்த "ரோஜாவின் பெயர்" புத்தக சர்ச்சையின் போது தான் நான் இரண்டு புத்தகங்களை ஒரு வருடத்திற்கும் மேலாக வாசிக்க முடியாமல் திணறுவது நினைவுக்கு வந்தது. அப்புத்தகங்களை வாசிக்க அவ்வளவு சிரமமாக இருந்தது. படு மோசமான மொழியாக்கம். அந்த இரண்டுமே (கீழே) எதிர் வேளியீட்டுப் புத்தகங்கள் என்பது அதிர்ச்சி.



இதனைத் தொடர்ந்து மக்கள் பதிப்பாக (இலாப நோக்கமற்ற) வெளிவந்த "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற புத்தகத்தின் மொழியாக்கமும் சிறப்பாக இல்லை. மேற்குறிப்பிட்ட இரண்டு புத்தகங்களைவிட இது மேல். ஆனால் சில இடங்களில் அப்பட்டமாக ஆங்கில வார்த்தைகளின் நேரடி தமிழ் அர்த்ததை வழங்கியுள்ளது அபத்தம்.


ஆங்கிலமும் பிற மொழிகளும் தெரியாதவர்கள் அம்மொழிகளின் இலக்கயத்தினை அறிவது மொழியாக்கங்கள் மூலம் தான். மொழிப்பெயர்ப்பாளர்கள் இரண்டு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமில்லையா!!! மொழிபெயர்ப்பு என்பது சுலபமானதாக பார்க்கப்படுவது கொடுமையானது. நேரடியாக எழுதுவதைக் காட்டிலும் மொழியாக்கத்திற்கு திறமையும், தேர்ச்சியும் கூடுதலாகத் தேவை என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் புத்தகங்கள் அச்சில் ஏறுவதும், ஏற்றப்படுவதும் பெரும் சமூகச்சிக்கல் தான். சற்றேனும் பொறுப்புணர்ச்சியுடன் பதிப்பகங்களும், மொழிபெயர்ப்பாளர்களும் செயல்பட வேண்டியது அவர்களின் கடமை. 

No comments:

Jane Goodall - A Netflix Interview

Jane Goodall - A name most of us would have come across in the last month as she passed away. As planned, her interview, titled "Famo...