Thursday, October 9, 2025

புத்தக கொலு 2025 💟

2023 நவராத்தியின் போது பணிபுரியும் அலுவலகத்தில் புத்தக கொலு ஒன்று வைத்து (https://pryashares.blogspot.com/2023/10/blog-post.html) பல புகார்களையும், மொட்டைக் கடுதாசிகளையும் பரிசாகப் பெற்றேன். சரி 2024ல் 'சும்மா இருப்போம்' என்று இருந்தேன். ஆடின காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். 2025ல் மீண்டும் புத்தக கொலு. ஆனால் இம்முறை எங்களின் டோமோயி நூலகத்தில்!  புகார் எழுத முடியாமல் ஒரு கும்பல் தவித்துக்கொண்டிருக்கிறது. 

இம்முறை கொலுவிற்கு தினமும் ஐந்தாறு குழந்தைகளும், இரண்டு மூன்று பெரியவர்களும் தொடர்ச்சியாக ஒன்பது நாளும் வந்தனர். மைக்கில் புத்தகங்களை வாசித்து மகிழ்ந்தனர்.

மெத்தப் படித்தவர்கள் வசிக்கும் பகுதி தான் என்றாலும் தலையைத் திருப்பிக் கூட பார்த்துவிடக் கூடாது என்று ஓடியவர்களைக் கண்டேன். பேசாம ஒரு வாரம் வேற ரூட்டுலப் போவோம் என்று ஓடியவர்களும் இருப்பார்கள். தெரிந்தவர்கள் கூட தெரியாதவர்கள் போன்று நடந்துக் கொண்டார்கள். சும்மா பாருங்க வாங்க என்றாலும் வரத் தயங்கினர்.

ஆசிரியர்கள் அல்லது கல்விக் கூடங்களில் பணிபுரிபவர்கள் அதிகம் உள்ள பகுதி. ஆனாலும் கொலு பார்க்க வருபவர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த 100 புத்தகங்களில் 10 புத்தகங்கள் மீந்துள்ளன. எப்புடி எங்க கொலுல கூட்டம் அலமோதிருக்கும்னு யோசிக்கோங்க! சிலர் பரிசாகக் கூட புத்தகம் வேண்டாம் என்று கூறினர். ஒன்றிரண்டு குழந்தைகள் கூட!!!!!

தினமும் ஒரு தலைப்பில் கொலு வைத்திருந்தோம்.

முதல் நாள்: கல்விசார் புத்தகங்கள்


இரண்டாம் நாள்: சமகால சிறார் இலக்கியம்


மூன்றாம் நாள்: சமகால தமிழ் இலக்கிய நூல்கள்


நான்காம் நாள்: சிறார் இதழ்கள்

ஐந்தாம் நாள்: வின்னி த பூ, நூற்றாண்டு கொண்டாட்டம்


ஆறாம் நாள்: சூழலியல் புத்தகங்கள்


ஏழாம் நாள்: பெண்கள் சார்ந்த நூல்கள்


எட்டாம் நாள்: சிறார்களுக்கான ஆங்கில இலக்கியம்


ஒன்பதாம் நாள்: போரும் குழந்தைகளும்


கொலு முடிந்து சில நாட்களுக்குப் பிறகு ஒரு செய்தித்தாளில் கொலு புகைப்படம் ஒன்றை கண்டு என் மகள் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும், "அம்மா, கொலுல பொம்ம வெச்சிருக்காங்க ம்மா.. கொலுல பொம்மக் கூட வெக்கலாமா???? புக்ஸ் தான வெக்கனும்?" என்றாள். ஏனோ அவளிடம் இன்னும் நான் எந்த பதிலும் சொல்லவில்லை. சிரித்து கடந்துவிட்டேன் அக்கேள்வியை!

1 comment:

தேனி சுந்தர் said...

சிறப்பு வாழ்த்துகள்.. தொடர்ந்து நடத்துங்கள்.. அன்பு வாழ்த்துகள்

Jane Goodall - A Netflix Interview

Jane Goodall - A name most of us would have come across in the last month as she passed away. As planned, her interview, titled "Famo...