Friday, October 31, 2025

குழந்தைகள் மீது திரைப்படங்கள் ஏற்படுத்தும் தாக்கம் 💖

இன்று வெளிவரும் பெரும்பாலான தமிழ் படங்கள் குடுப்பத்துடன் பார்க்கக் கூடாதது. பெரியவர்களே பார்க்க தகுதியில்லாத படங்கள் தான் வெளிவருகின்றன. அம்மாதிரியான படங்களைக் கூட நாம் குடும்பத்துடன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதன் மூலம் பல மோசமான முன்னுதாரணங்களை குழந்தைகளுக்கு நாமே அறிமுகப்படுத்தும் அவலம் தான் நிலவுகிறது.

இதன் விளைவாக பெரியவர்களாகிய நமக்கே "நல்ல" திரைப்படங்களைப் பார்க்கும் பொறுமை இல்லை. "விறுவிறு" என்று இருக்கும் படங்களையும், "மாஸ்" திரைப்படங்களையுமே பார்க்க விரும்புகிறோம். அதுவே சலிப்புத் தட்டாது என்று நமக்கு நாமே சொல்லுக்கொண்டிருக்கிறோம். இம்மாதிரியான சூழலில் எனக்கு ஏற்பட்ட இரண்டு அனுபவங்களை பகிருகிறேன். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு இரவில் இணையத்தில் "அன்பே சிவம்" என்ற திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தோம். படம் முடிந்தவுடன் மகள் ஒரே அழுகை. என்னவென்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் அந்த இரவு அழுதுகொண்டே உறங்கினாள். முதன்முறையாக என் குழந்தையின் மேல் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தைக் கண்டேன். பெரிதாக கதை புரிந்ததா என்பது தெரியாது. ஆனால் ஏதோ உணர்வுகளை தூண்டியுள்ளது.


சென்ற மாதம் "The Way Home" என்ற கொரியன் திரைப்படத்தை இணையத்தில் காண துவங்கினோம். எப்போதும் போல தொடர்ச்சியாக பார்க்க முடியாமல் மீதியை மறுநாள் பார்க்க முடிவு செய்தோம். மறுநாள் இப்போதே பார்க்க வேண்டும் என்று மகள் கேட்டதால் அவளை பார்க்கச் சொல்லிவிட்டு நாங்கள் சமையலறையில் வேலைப்பார்த்துக் கொண்டு இருந்தோம். திடீரென பெரும் அழுகையுடன் வந்து கட்டிக்கொண்டு "என்னால தனியா பாக்க முடியல. அப்பறம் சேந்து பாப்போம் ம்மா," என்றாள். 

  

மேற்குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களும் "அழுகை" என்ற உணர்ச்சியை குழந்தைக்கு தூண்டியது மட்டுமே தாக்கம் என்றில்லை. சந்தோஷமான உணர்ச்சிகளைத் தூண்டும் நல்ல திரைப்படங்களும் உண்டு. எவையெல்லாம் உண்மையில் சந்தோஷம் என காட்டும் திரைப்படங்கள் உண்டு. மகிழ்ச்சியின் பல்வேறு வடிவங்களை காணமுடியும். சமீபத்தில் தமிழில் வந்த "பறந்து போ" மாதிரி.

எனினும் பிறரின் இடத்தில் தன்னை நிறுத்தி பார்ப்பதும், அவர்களின் வலியை நம் வலியாக உணர்வதும் எவ்வளவு பெரிய தன்மை. அதனை "நல்ல" திரைப்படங்கள் போன்ற கலையால் நிச்சயம் செய்ய முடியும். 

#அன்பே_சிவம்    #the_way_home   #children_movies

No comments:

Jane Goodall - A Netflix Interview

Jane Goodall - A name most of us would have come across in the last month as she passed away. As planned, her interview, titled "Famo...