கடந்த மூன்று மாதங்களாக பணியிடத்தில் அழுத்தம் அதிகம். இரண்டு வருடங்களாக எனச் சொன்னாலும் தப்பில்லை. பொய் புகார்களும், மொட்டைக் கடுதாசிகளும், விசாரணைகளும் என பல நிகழ்ச்சிகள் நிகழந்த வண்ணம் உள்ளன. அதிகாரிகள், உடன் பணிபுரிபவர்கள், சற்றும் தொடர்பில்லாதவர்கள் என அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து நம் மீது ஏதேனும் ஒரு புகாரை சொல்லிக் கொண்டும், எழுதி போட்டுக் கொண்டும் இருக்கும் போது, நாம் செய்வதற்கு என்ன உள்ளது?? 😵
புலம்பலுக்கு எப்போதும் கதவு திறந்திருப்பது குடும்பத்தில் தான். கணவரிடம் புலம்பியவாறே நாட்கள் நகர்கிறது. தன்னால் இயன்ற வரை அவரும் பொறுமையுடன் கேட்டு வருகிறார். உடன் எங்களின் மகளும். பல பிரச்சனைகள் அவளுக்கும் தெரியும். அவள் தெரிந்துக் கொள்வதும் அவசியம் என்று தான் கருதுகிறேன். ஒரு பெண்ணுக்கு பணியிடம் அவ்வளவு சுலபமானதில்லை என்பதை அவள் அறிகிறாள். அதுவும் நேர்மையுடனும், நேர்க்கொண்ட பார்வையுடனும் பணியாற்றுவதால் ஏற்படும் சிக்கல்களும், அப்போது நமக்கு தேவைப்படும் ஆறுதலும், அரவணைப்பும் எவ்வளவு அவசியம் என்பதையும் அவள் தெரிந்துக் கொள்கிறாள். 😍
இவ்வாறு போன வாரத்தின் ஒரு நாள் நான் புலம்பிக் கொண்டே சமையலறையின் வேலைகளுக்கிடையில் என் கணவரிடம் "எனக்கென்னவோ எல்லாரும் என் மேல புகார் சொல்றத பாக்கும் போதும், கேக்கும் போதும் உண்மையிலையே நான் தான் தப்பான ஆளோ?!! இல்ல என்னையே அப்படி நம்ப வெச்சிடுவாங்களோ?! நான் சொல்றத ஏன் உண்மைனு எல்லாரும் நம்பனும்? அவங்க சொல்ற உண்மைய நான் தான் ஏத்துக்கனுமோ? இப்படியெல்லாம் நம்ப தொடங்கிடுவேன் போல," என்றேன் விரக்தியோடு. 😔
என் மகள் அருகில் வந்து, "அம்மா, 'நீ கரடி என்று யார் சொன்னது?,' ன்ற கதை மாதிரி சொல்ற அம்மா," என்றாள். அதிர்ச்சியானேன்!
உண்மைதான்! அந்த கரடியை நம்ப வைத்தது போல் தான் என்னையும் நம்ப வைக்க இச்சமூகம் எதையும் யோசிக்காமல் பல காரியங்களைச் செய்யும். அந்த உண்மையை மறந்து நானும் யோசிக்கிறேன். மற்றவர்கள் சொல்வதால் என் அடையாளம் மாறிவிடாது.😊
அந்த புத்தகத்தை அந்த நேரத்தில் என் மகள் நினைவுப்படுத்தியதுதான் அந்த நாளுக்கான மிகப் பெரிய ஆறுதலும், உந்துதலும்! புத்தகங்களும் கதைகளும் செய்யும் மாயம் தான் எத்தனை! 😘
1 comment:
அந்நியாயங்கள் தலை விரித்து ஆடுகையில் மௌனமும் பொறுமையும் பெரிதும் துணையாக இரு கேடயங்கள் போல் காக்கும் தோழி. நம்பலாம்.
Post a Comment