Thursday, August 21, 2025

அகரம் - தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி

அகரம் அறக்கட்டளையானது தன் 'விதை' என்ற முன்னெடுப்பை எடுத்து 15 ஆண்டுகள் நிறைவுற்றதைக் கொண்டாடும் விதமாக விஜய் தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது.😍

அகரம் அறக்கட்டளை வாயிலாக பயனடைந்த மாணவர்கள் தங்களின் வாழ்க்கைப் போராட்டத்தினையும், தங்கள் அனுபவங்களையும், அகரம் அறக்கட்டளை தங்களின் வாழ்க்கைப் பாதையினை அமைத்துக் கொடுத்தது பற்றியும் உணர்ச்சிப் பொங்க விவரித்தனர். 

 Agaram Suriya-vin Kalviye Aayutham 15-08-2025 Independence Day Vijay Tv  Show • TamilDhool

அந்நிகழ்ச்சியினை பார்க்க மனபலம் நிச்சயம் தேவை. ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கையும் ஒரு பாடம் தான். கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் நடிகர் சூர்யா தொடங்கி, பல தொழிலதிபர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஊரில் உள்ள பெரியவர்கள், தன்னார்வலர்கள் என பலர் கூடி இந்த 'விதை' என்னும் தேரினை இழுத்து வருகின்றனர். இதில் ஆட்டோ அண்ணாக்களும், தபால் துறை சார்ந்தவகளும் உள்ளனர். அந்நிகழ்ச்சி நான் கிராமப்புறத்தில் வேறொரு அரசு சாரா அமைப்புடன் செயல்பட்ட அனுபவத்தை மீண்டும் கண்முன் காட்டியது. கண்ணீரை அடக்க முடியவில்லை.  கணவரின் கண்களும் கலங்கியே இருந்தது. 

சற்று நேரத்திற்கு முன்பு வரை வேறு அலைவரிசைக்கு மாற்றும்படி கேட்டுக்கொண்டிருந்தவள், இருவரும் கலங்கியிருந்ததைப் பார்த்து "இது நிஜமா நடந்ததா?" என்றாள். தொலைக்காட்சியில் எந்த படம் பார்த்தாலும் "இது நிஜமா நடந்ததா?" என்ற கேள்வியினை எப்போதும் கேட்பாள். சினிமா என்பது உண்மையா பொய்யா, நடிப்பா, நிஜமா போன்ற வினாக்கள் குழந்தைகளிடம் இருப்பது இயல்பு தான். அது போன்றுதான் இவளுக்கும்.

நான் "நிஜம் பாப்பா. அந்த அக்கா, அண்ணாக்கு நிஜமா நடந்தத தான் நமக்கு சொல்றாங்க. அதுக்கு Help பண்ணவங்க தான் அங்க உக்காந்துட்டிருக்காங்க," என்று சொன்னேன். 😇

ஒரு நொடிக்கூட யோசனையில்லாமல், "இது சினிமா மாதிரி இல்லம்மா. இது தான் Super, நிஜமா இருக்கு," என்றாள்.  💗

No comments:

யாருடைய துகள் நாம்?

"சீதக்காதி" திரைப்படத்தில் வருவது போன்று "கலைக்கும் கலைஞனுக்கும் மரணமில்லை" தான். அதே போன்று நம் முன்னோர்களுக்கும் மரணமி...