Monday, August 4, 2025

கேள்வி நல்லா தான் இருக்கு - 4

"அம்மா உன் கையும் நீ போட்ருக்க Dressம் ஒன்னா தெரியுதுமா," என்றாள் வருணிகா.

"அம்மா கலராயிட்டனோ?!" என்றேன்.

"அம்மா, கலர் அப்படின்னா, கலர் கலரா தானா இருக்கணும். Rainbow மாதிரி. ஏன் இப்படி சொல்றாங்க?" என கேட்டாள். 

சற்று யோசித்து நிலைக்கு வருவதற்குள், "அம்மா, அன்னிக்கும் அப்பா கிட்ட இத பத்தி கேட்டேன். நாங்க பேசிட்டு வந்தோம். அப்பா சொன்னாரு வெள்ளையா இருக்கிறவங்கள கலரா இருக்கிறேனு சொல்லுவாங்கனு சொன்னாரு," என்றாள்.

"ஆனா வெள்ளையா இருக்கறத கலர்னு எப்படி சொல்ல முடியம்?" என்றாள் யோசனையுடன்.

நம்ம ஊரில் கலர் என்று வெள்ளைத்தோல் உள்ளவர்களை சொல்வது வழக்கம். இதுவே மேலை நாடுகளின் கருப்பினத்தவர்களை "people of colour" என்று குறிப்பிடுவது வழக்கம். 

 PC: googleColorblindness is not the goal: Anti-racism in the preschool classroom -  The Oak Leaf

எப்படி பார்த்தாலும் அறிவியலின்படி இரண்டுமே தவறு போன்றதாகவேத் தெரிகிறது. மேற்குறிப்பிட்ட ஒரு நிறம் அனைத்து நிறத்தையும் உள்ளடக்கியது, மற்றொன்று அனைத்து நிறங்களையும் வெளியேற்றி நிர்மூலமாக உள்ளது. அறிவியல் ஆசிரியர்கள் இதனை சரியாக விளக்க இயலும். பொது அறிவியல் பார்வையில் இரண்டையுமே "ஒரு நிறம்" என்று குறிப்பிட இயலாது.

சமூகத்தின் அடிப்படையில் வெள்ளைத்தோல் கொண்டவர்கள் உயர்ந்தவர்கள் என்ற நிலை இன்றளவும் உள்ளது. மேலை நாடுகளில் உள்ள இனவெறியினை (Racism) மட்டுமே குறிப்பிடவில்லை. நம் ஊரில் உள்ள பாகுபாட்டினையும் குறிப்பிடுகிறேன். ஒரு கூட்டத்தில் இருக்கும் போது வெள்ளைத்தோல் உடையவர்கள் மேன்மையானவர்கள், அழகானவர்கள், மெத்தப் படித்தவர்கள், அதிக விவரமுள்ளவர்கள், பண வசதி உடையவர்கள், ஆங்கிலம் பேசக்கூடியவர்கள் என்று பல விதமாகக் கற்பனை செய்பவர்கள் உணடு.

நம் குழந்தைகள் இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டவர்கள். வளர்ந்தபின் தான் பெரியவர்களால் இதில் சிக்க வைக்கப்படுகிறார்கள். 

குழந்தைகளுக்கு நிற பாகுபாட்டினை புரிய வைப்பதற்கும், அதில் சிக்காமல் இருப்பதற்கும் புத்தகங்கள்/கதைகள் உண்டு என்பதனை இங்கு பதிவு செய்கிறேன்.

பின் குறிப்பு: என் ஆராய்ச்சிப் படிப்பு காலத்தில் என்னுடைய இரு சக ஆராய்ச்சியாளர்கள் (வெவ்வேறு காலத்தில்) உடன் பயின்றனர். வெள்ளைத்தோல் கொண்டவர்கள். இருவருக்கும் பெண் குழந்தை. 03-05 வயது. என்னிடம் நெருக்கமாக இருப்பர். என்னுடன் அக்குழந்தைகள் நெருக்கமாக இருப்பதைப் பார்த்து (என் நிறத்தினையும் மனதில் கொள்க!) அக்குழந்தைகளின் காப்பாளர் நான் என்று நினைத்துக் கொண்டனர். நினைத்தவர்கள் அனைவரும் முதுநிலை படிப்போ அதற்கு மேலோ படித்துக் கொண்டிருந்தவர்கள்.அந்த இரு தோழிகளுக்கு முன்னரேன் நான் NET & JRF (UGC நடத்தும் போட்டித் தேர்வுகள்) தேர்ச்சிப் பெற்று படித்துக் கொண்டிருந்தேன் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Who Wrote the Indian Constitution? 💭

"Who wrote the Indian Constitution?" - If this question was asked to me, I would have straight away said "Dr Ambedkar", ...