சில நாட்களுக்கு முன் "ஆன் ப்ரான்க்" பற்றிய ஒரு சிறிய ஆங்கில புத்தகத்தை மகளுக்கு வாசிக்க கொடுத்தேன். அரசு பள்ளியில் படிப்பதால் ஆங்கிலம் சிறிய கடினத்துடன் வருவது இயல்பு தான் என்பதால், பொறுமையாக படித்து கதையினை எனக்கும் சொல்லுமாறு கேட்டேன். ஒவ்வொரு பக்கமாக படித்து எனக்கு சொன்னாள்.
அப்போது ஒரு இடத்தில் 'ஆன் ப்ராங்கி'னை 'நல்லா கவனிச்சிக்க கூட்டிட்டுப்போனாங்க' என்று சொன்னாள்.
என்னது "நல்லா கவனிச்சிக்கவா?" "ஹிட்லரா?" "யூதர்களையா?" எனக்கு ஒன்றும் புரியவில்லை.
"இல்லையே பாப்பா, அவங்கள சித்திரவதை செய்ய தானே பிடிச்சிட்டு போவாங்க!" என்றேன்.
"இல்ல அம்மா, 'concentration camp' க்கு கூட்டிட்டுப் போனாங்கனு தான் இந்த புக்ல போட்டிருக்கு. 'concentration' அப்படினா நல்ல கவனிக்க னு தான வரும்," என்றாள்.
அவளிடம், நிறைய மக்களை ஒரு இடத்தில் குவிப்பதால் அந்த பெயர் என்று சொன்னேன். குவித்து சித்திரவதை செய்யப்படும் இடம் தான் "concentration camp" என்றேன்.
பள்ளியில் 'concentration' என்ற வார்த்தைக்கு இனி 'ஆன் ப்ரான்க்' நினைவுக்கு வருவாள் என்று நினைக்கிறேன். சில பள்ளிகளில் நடப்பதும் சித்திரவதை தான் என்பதால், பெயர் காரணத்தில் பெரிய விவாதம் ஒன்றும் தேவையில்லை என்றே தோன்றுகிறது.
No comments:
Post a Comment