"சீதக்காதி" திரைப்படத்தில் வருவது போன்று "கலைக்கும் கலைஞனுக்கும் மரணமில்லை" தான்.
அதே போன்று நம் முன்னோர்களுக்கும் மரணமில்லை தானே. நம் அம்மா, அப்பா, அவர்களின் பெற்றோர்கள், அவர்களின் பெற்றோர்கள் என எவருக்கும் நிரந்திர மரணமில்லை என்பதை உணர்த்துவதாகத்தான் "அவன் துகள் நீயா.. அவன் தழல் நீயா.." என்ற பாடல் ஒலிப்பதாக எனக்கு ஒவ்வொரு முறையும் தோன்றும்.
நம் ஒவ்வொருவருக்குள்ளும் நம் முன்னோர்களின் நிழல் இருக்கும். அதனை தான் அறிவியல் மரபியல் மூலம் நிரூபிக்கிறது. மரபியல் வழியாக கொஞ்சமும், பழக்க வழக்கங்கள் வழி மிச்சமும் குணநலன்கள் அனைத்தும் கடத்தப்படுகின்றன.
நான் வெளிப்படையாக இருக்கும் போது "நீ உன் அப்பா வழி தாத்தாவே தான்," என்று சொல்வார்கள். கோபப்படும் போது "உன் அம்மா பெத்த தாத்தா தான் நீ," இப்படி நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் யாரோ ஒருவர் இருக்கத்தானே செய்கிறார். நம் அம்மாவோ, அப்பாவோ, தாத்தாவோ, பாட்டியோ, ஆசிரியரோ, அதிகாரியோ! ஏன் நாம் படிக்கும் புத்தகங்கள், பார்க்கும் மனிதர்கள், இரசிக்கும் ஆளுமைகள், கடந்து செல்லும் உறவுகள், உடன் பயணிப்பவர்கள், நம் விரோதிகள் என எல்லாராலும் ஆனது தான் நாம்! அதனை அப்பாடலின் ஒவ்வொரு வரியிலும் உணர முடியும்.
யாருடைய அடையாளமோ நம்மிடம் இருந்து கொண்டே தான் இருக்கும். அது நல்ல குணநலனா கெட்டவையா என்பது தான் யோசிக்க வேண்டியது. எந்த ஒருவரும் முழுமையாக தனித்த அடையாளத்துடன் இருக்கவே முடியாது.
நான் யாருடைய துகளெல்லாம் கொண்டுள்ளேன் என்பது எனக்கு ஓரளவுக்குத் தெரியும். நீங்கள் யோசித்திருக்கிறீர்களா!?