எனது பிறந்தநாள் அன்று எனக்கு பிரியமான குழந்தைகளான ஜோஹன் மற்றும் ஹரிணி இப்புத்தகத்தை பரிசளித்தார்கள். ஏனோ எடுத்து வாசிக்கப்படாமலே இருந்தது. 'ஆண்ட்டி, அந்த புக் படிச்சீங்களா?' என கேட்டனர். இப்புத்தகம் 'ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு' போன்றது என்பதாலேயோ என்னவோ ஒரு தயக்கம். ஆனாலும் இப்போது முடித்துவிட்டேன்.
இராண்டாம் உலகப்போரிலிருந்தும், ஹிட்லரிடமிருந்தும் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஆன் ஃப்ராங்க் என்ற 12 வயது சிறுமியின் குடும்பம் வேறு இரு குடும்பங்களுடன் இரகசிய இருப்பிடத்தில் (ஆனின் வார்த்தைகளில் 'இணைப்பகத்தில்') சில 'ஜெர்மானிய' நண்பர்களின் உதவியால் தஞ்சம் அடைகிறார்கள். பதின் பருவத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஒரு சிறுமி தன் இயல்பு வாழ்க்கையை தொலைத்து நட்பு ஏதும் இல்லாமல் தனக்கு பரிசாக கிடைத்த ஒரு டைரியை தன் நட்பாகக் கொள்கிறாள். அதற்கு 'கிட்டி' என பெயர் சூட்டி தான் சொல்ல நினைக்கும் அனைத்தையும் அதில் எழுதுகிறாள்.
கோவிட் காலக்கட்டத்தில் வீட்டினுள் முடங்கிக் கிடந்ததை நாம் மறக்க மாட்டோம். எவ்வளவு கடினமாக இருந்தது என அறிவோம். அதைவிட பல மடங்கு சொல்லிலடங்கா துயரமானது போர் காலத்தின் இரகசிய வாழ்க்கை என்பதை இப்புத்தகத்தை வாசிக்கையில் உணரமுடியும். அதுவும் ஒரு சிறுமியின் பார்வையிலிருந்து.
மிக விரைவில் போர் முடிவுக்கு வரும் என்ற ஆசையுடன், எதிர்பார்ப்புடன் ஆன் வாழ்ந்து வருகிறாள். இணைப்பகத்தில் தினம் நடப்பவையை குறிப்பில் எழுதுகிறாள். அங்கு வசிக்கும் அனைவரும் தினம் சந்திக்கும் பிரச்சனைகள், சாப்பாட்டில் வரும் சண்டைகள், கழிப்பறை போராட்டங்கள், அமைதி காக்க வேண்டிய நேரங்கள், மனச்சிக்கல்கள், இடப்பற்றாக்குறை என பலவற்றையும் நம்மால் காணமுடிகிறது.
ஒரு குழந்தையின் உள்ளுணர்வை வெளிப்படையாக நம் முன் நிறுத்துகிறது. தன் தாயை ஆன் பல சமயங்களில் வெறுக்கிறாள். தந்தையின் மீது வெறுப்புணர்வு அதிகரிக்கிறது. தன் அக்காவுடன் இணைப்பகத்தினுள் பக்கத்தில் இருந்தும் கடித பரிமாற்றம் செய்து கொள்கிறாள். நேரில் பேச இயலாதவைக் கூட கடிதம் மூலம் சுலபமாக செய்யமுடிகிறது என நம்புகிறாள். அவ்வாறு தன் தந்தைக்கு வெளிப்படையாக ஒரு கடிதத்தினை எழுதி அவர் மனம் நோகும் போது குற்றவுணர்ச்சியில் உரைகிறாள். ஒரு சிறுமியை பெரியவர்கள் எவரும் புரிந்துகொள்ளவில்லை எனவும், அதற்கான முயற்சியைக் கூட எடுக்க முன்வருவதில்லை எனவும் கொதிக்கிறாள். ஓரிரு வருடத்தில் தன்னை இன்னும் ஒரு குழந்தையாகவே நினைத்து நடத்தப்படுவதை எதிர்க்கிறாள். நாம் குழந்தைகளை புரிந்துகொள்ள தவறுவதை ஆழமாக உணரவைக்கிறது. படிக்கும் பெரியவர்களுள் பெரும்பாலானவர்கள் குற்றவுணர்ச்சிக்கு தள்ளப்படுவதை தவிர்க்க முடியாது.
தன்னுள் தோன்றும் காதல், காமம் போன்ற 'சிக்கலான' ஆனால் 'இயற்கையான' பலவற்றையும் தன் டைரியில் குறித்துள்ளார். உலக நடப்புகள் பற்றி உதவ வரும் நண்பர்கள் மூலமும், வானொலி மூலமும் கேட்டறிந்துக் கொள்கின்றனர். இணைப்பகத்தில் உள்ள நாட்கள் ஏற்ற இறக்கம் நிறந்ததாகவே இருந்துள்ளன. உடலாலும், மனதாலும் பாதிக்கப்பட்ட வண்ணம் இருந்துள்ளனர். இதற்கிடையில் சிலரது மரண செய்திகள், திருட்டு மற்றும் கொள்ளைச் செய்திகளும், அனுபவங்களும் இவர்களை பயத்துடனே வைத்துள்ளது. மாட்டிக்கொள்வோமோ, கொல்லப்படுவோமோ என்ற அச்சம் அவ்வப்போது எழுகிறது.
இணைப்பகத்தில் உள்ளவர்களுக்கான மிகப்பெரிய பொழுதுபோக்கு புத்தகம் வாசிப்பது. ஏராளமான புத்தகங்கள் வாசிக்கப்படுகின்றன. ஆன், தான் என்ன புத்தகம் வாசிக்க வேண்டும் என பெரியவர்களால் சொல்லப்படுவதை விரும்புவதே இல்லை. அப்பகுதி நம் குழந்தைகளை நினைவூட்டுகிறது. ஆன் தன் டைரியில் உலக அரசியலை எழுதுகிறாள். அதனால் தன் வாழ்க்கையில் ஏற்படும் பொருளாதார சிக்கலையும், தினசரி உணவு பிரச்சனைகளையும் பதிவிடுகிறாள். பெரியவர்களின் அரசியல் நிலைப்பாட்டில் குறை காண்கிறாள். யாருக்கும் எந்த நன்மையும் தர இயலாத இந்த போரினை ஏன் பெரியவர்கள் நடத்துகிறார்கள் என ஆன் என்ற சிறுமிக்கு புரியவில்லை. நமக்கும் தான்!!!! ஹிட்லருக்கு ஏன் யூதர்கள் மேல் இவ்வளவு வெறுப்பு என்பதற்கும் அவளுக்கு விடை கிடைக்கவில்லை. ஆனால் ஒரு முறை ஹிட்லரை கொல்லும் முயற்சியைப்பற்றி கேள்விப்பட்டு மிகுந்த மகிழ்ச்சியடைகிறாள். ஹிட்லரின் இறுதிகாலம் நெருங்குவதாக எண்ணி திருப்தியடைகிறாள்.
கிடைத்த நேரத்தில் ஒருவருக்குத் தெரிந்ததை மற்றவருக்கு சொல்லுத்தருதலுடன், தானும் புதிதாக சிலவற்றை கற்றுக்கொள்கிறார்கள். ஆனின் மனதில் அவளின் பள்ளி நினைவுகளும், தோழிகள் பற்றிய நினைவுகளும் இருந்த வண்ணம் உள்ளன. பல பேர் ஜெர்மானியர்களால் கொல்லப்பட்டுவரும் நிலையில் தான் பாதுகாப்பாக இருப்பதை நன்றியோடு மனதில் நிறுத்தினாலும், தான் மீண்டும் சுதந்திரமாக, இயற்கையோடு வாழும் வாழ்க்கையை எதிர்நோக்கி ஏக்கத்துடனும், எதிர்பார்ப்புடனும் காத்துக்கொண்டிருக்கிறாள்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாப்பாக இருந்தவர்கள் போர் முடிய சில மாதங்களே இருக்கும் நிலையில் ஜெர்மானியர்களிடம் மாட்டிக்கொள்கின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திற்கு இழுத்துச் செல்லப்படுகின்றனர். ஆனின் தந்தை மட்டுமே தப்புத்துக்கொள்கிறார். இவர்களுக்கு உதவியவர்களும் தண்டிக்கப்படுகிறார்கள். பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு தன் அக்காவுடன் அடைத்து வைக்கப்பட்ட இடத்தில் 'டைஃபஸ்" நோயால் இருவரும் ஒருவர் பின் ஒருவராக இறக்கிறார்கள்.
ஏன் கொல்லப்படுகிறோம், எதற்கு இந்த இனவெறி, போர் என எதுவும் அறியாத, அல்லது புரிந்துகொள்ள இயலாத குழந்தைகளின் உயிர்கள் பரிக்கப்பட்டன. அவ்வாறே ஆன் கொடூரமான இந்த உலகைவிட்டுச் சென்றாள். அவளின் டைரியை நமக்காக விட்டுவிட்டு!!! 💓
👍
ReplyDelete