Wednesday, March 13, 2024

மஞ்சும்மல் பாய்ஸ் - ஓரிரு கருத்துகள்

தமிழகத்தின் தற்போதைய 'ட்ரெண்டிங் டாக்'  "மஞ்சும்மல் பாய்ஸ்" என்ற மலையாளத் திரைப்படம். மலையாளத் திரைப்படம் என சொன்னாலும் தமிழகத்தில் எடுக்கப்பட்ட, பழைய தமிழ் திரைப்படமான "குணா"வின் பாடல்களையும், "குணா" திரைப்படம் எடுக்கப்பட்ட குகையிலும், தமிழ் கதாபாத்திரங்கள் சரிசமமாக இருக்கும் திரைப்படம் "மஞ்சும்மல் பாய்ஸ்."

 Manjummel Boys - Sacnilk

மேலோட்டமாக பார்த்தால் நட்பினை கொண்டாடும் திரைப்படம் என தோன்றும். மக்கள் அப்படத்தை கொண்டாடும் விதத்தையும், அப்படத்தினைக் கொண்டு வெளிவரும் "மீம்ஸ்"கள்  ஆகியவை இப்படத்தினை பார்க்காத ஒவ்வொரு தமிழனயையும் ஏக்கப்படவும், ஏதோ குற்றவுணர்விற்கு உள்ளாக்குவதாகவும் இருந்தது/இருக்கிறது என்று சொன்னால் மிகையல்ல. குறிப்பாக இளைய தலைமுறையினரை.

ஆனால் படத்தில் கொண்டாடக்கூடிய அம்சமாக எனக்கு இருந்த ஒன்றே ஒன்று "குணா"வின் பாடல்கள். பெரிய திரையில் பெண் குரலில் ஒலிக்கும் "மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதர் காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது" என்பது அலாதியான அனுபவமாக இருந்தது.

சுற்றுலா செல்ல பணமில்லை என சொல்லும் ஒரு கதாபாத்திரம். 'நாங்க பாத்துக்குறோம், வா' என கூட்டில் செல்லும் நட்பு, வாகனத்தில் இடம் கொள்ளாத போதும் விதியை மீறி கூடுதல் ஆட்களோடு செல்வது, சுற்றுலாவினருக்கு 'பெண்' ஏற்பாடு செய்து தர முடியுமா என கேட்கும் ஒரு கதாபாத்திரம், குகையில் உள்ளே நுழைய தடை செய்யப்பட்ட பகுதிக்கு குடித்துவிட்டு மீறி நுழையும் கும்பல். இதில் பாராட்டிக் கொண்டாட என்ன உள்ளது?! தன்னால் கட்டாயப்படுத்தி அழைத்து வரப்படும் நண்பன் குகைக்குள் விழுவதும், அவனை காப்பாற்ற வேண்டிய கடமை தன்னுடையது என எண்ணுவதும் பாராட்டுக்குரியதே! எனினும் விதியினை மீறி செல்லாமல் இருந்திருந்தால் உயிர் ஆபத்து நிகழாமல் தவிர்த்திருக்கலாம் என பார்ப்பவர்களுக்கு தோன்றாமல் இருந்திருக்குமா என்ன?!!!

இப்படத்தை பார்த்து இதுபோல் செய்யத்துடிக்கும் இளசுகள் நிச்சயம் இருக்கும். அவ்வாறான விளைவே தற்போது கொடைக்கானலிற்கு படையெடுக்க தொடங்கியிருக்கும் சுற்றுலாவினர்.

"யானை டாக்டர்" படித்த எவரும் இத்திரைப்படத்தை கொண்டாட வாய்ப்பில்லை!!!

யானை டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி | வாசகம்


2 comments: