Politics - அரசியல்
15ம் நூற்றாண்டு முதல் 'அரசியல்' என்ற வார்த்தை நடைமுறையில் உள்ளது. கிரேக்க மொழியிலிருந்து வந்த இந்த வார்த்தையின் தமிழாக்கமாக 'அரசியல்' என்ற வார்த்தையினை கொள்ளலாம். ஆங்கிலத்தில் Politics என்பதை Art or Science of Government என்று கூறப்படுகிறது. அரசின் அல்லது அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள், மக்களுக்கும் - ஆட்சி புரிபவர்களுக்குமான உறவு, மக்களுக்கான கொள்கையினை உருவாக்குதல், மக்களும், நாடும் செழிப்புடன் இருத்தல், அமைதியான சூழல் ஏற்படுத்துதல் என பல்வேறு பணிகளின் கூட்டு வார்த்தையாக 'அரசிய'லைக் குறிப்பிடலாம். அரசியல் நம் அனைவரின் வாழ்வுமுறை.
அரசியல் என்பது ஒரு கலை. ஒவ்வொரு இடத்துக்கும், ஊருக்கும், நாட்டுக்கும் வேறுபடக்கூடியது. அங்குள்ள மக்களுக்கு, சூழலுக்கு, பொருளாதாரத்திற்கு, சித்தாந்தத்திற்கு, இன்னும் பல காரணிகளுக்கு ஏற்றார்போல் அரசியல் மாறுபடும்.
அதே வேளையில் அரசியல் அறிவியலும் கூட. அதன் கட்டமைப்பு எங்கும் குடிமக்கள் தாம். சில பிரச்சனைகளுக்கு பொதுவான தீர்வும் உண்டு. அதன் மூலப்பொருட்கள் ஒன்று தான். மக்கள்-பொருளாதாரம்-கொள்கை, இதனைச் சுற்றியே அரசியலின் கிளைகள் எங்கும் செயல்படும்.
அரசியல் என்பது மனிதனின் மாபெரும் கண்டுபிடிப்பாகவே எனக்கு எப்போதும் தோன்றும். தன்னை ஒழுங்குப்படுத்திக்கொள்ள அல்லது தன் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளை எதிர்த்து தன்னை விடுவித்துக்கொள்ள அரசியல் தான் முதல் அறிவுசார் கருவி என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. தனக்கென்று ஒரு வரையறைக் கொண்டு, அதை ஆள்வதற்கு ஒரு முறையினைக் கொண்டு, அதில் வரும் இடர்களுக்கு வழிகளை கண்டடைந்து ஒரு நாட்டினை, உலகினை கொண்டு செல்லுதல் என்பது மனிதனின் பெரும் வெற்றியாக நான் காண்கிறேன்.
அப்படிப்பட்ட "அரசியல்" என்ற வார்த்தையினை ஒரு 'கெட்ட' வார்த்தையாக பாவிக்க தொடங்கியது, மனிதனுக்கு அரசியலில் உள்ளவர்கள் மீது ஏமாற்றமும், கோபமும் வருவதினால் தான் என தோன்றுகிறது. நம் திரைப்படங்களும் "அரசியல் ஒரு சாக்கடை" என்று அடிக்கடி சொல்லி நம்மை நம்பவும் வைக்கிறது. அரசியல் எப்படி "சாக்கடை"யாகும்? அரசியல் என்ற ஒன்று இல்லாமல் போனால் கலவரமும், யுத்தமும் தானே மிஞ்சும்?! அரசியல் சரியாக உள்ளதா இல்லையா என்பது வேறு வாதம். ஆனால் அரசியல் இல்லாமல் இருத்தல் சாத்தியமில்லை.
அதே போல் 'அரசியல்' பண்ணுகிறார்கள் என்ற வார்த்தையும் மிக அதிகமாக பிரயோகிக்கப்படுகிறது. யாரேனும் சூழ்ச்சி செய்தால் இவ்வார்த்தை தான் முதலில் வருகிறது. தனக்குப் பின்னால் யாரேனும் ஏதேனும் செய்தாலோ, பிரித்தாழும் சூழ்ச்சி என்று நினைத்தாலோ, முன்னுக்குப்பின் முரணாக பேசினாலோ, மறைமுகமாக ஏதும் செய்தாலோ, ஒருவருக்கு தீங்கு நேரும் வண்ணம் ஏதும் செய்தாலோ, அவன்/அவள் அரசியல் செய்கிறாள் என சொல்லப்படுகிறது. மேற்குறிப்பிட்டவைக்கு நேரெதிராக நன்மை செய்யும் எந்த செயலும் "அரசியல்" என யாராலும் குறிப்பிடப்படுவதில்லை. அந்த நன்மைக்குள் ஏதோ 'அரசியல்' உண்டோ ('தீங்கு' உண்டோ) என மட்டுமே எண்ணுகின்றனர்.
அரசியலை மற்றுமொரு தொழிலாக (profession) பார்க்கும் பாங்கு இன்று நமக்கிடையில் இல்லை. அதை தீண்டத்தகாத ஒரு தொழிலாகவே பார்க்கின்றனர். சமகால அரசியலில் உள்ளவர்களால் அந்த எண்ணம் மக்களிடையே விரிவடைகிறது. அதனால் நம் குழந்தைகளுக்கும், இளையவர்களுக்கும் அரசியலை அறிமுகப்படுத்த தயங்குகிறோம். ஆனால் உண்மை என்னவெனில் அரசியல் இன்றி இங்கு எதுவும் இல்லை. அரசியல் ஒரு "நேர்மறை"யான வார்த்தை. 👍
சாியான புரிதல் அரசியல் என்பது சுயநலம் சாா்ந்தாக இருப்பதினால்
ReplyDelete