Wednesday, October 25, 2023

புத்தகக் கொலு 💖💖💖

கிடைக்கும் வாய்ப்பில் எல்லாம் புத்தக வாசிப்பினை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஆர்வக்கோளாறினால் இந்த நவராத்திரியில் கொலுவில் ஏன் பொம்மைகளுக்கு பதிலாக புத்தகங்களை வைத்து, இதை பார்ப்பவர்களுக்கு புத்தக வாசிப்பின் அவசியத்தினை விழிப்புணர்வாக வழங்கக்கூடாது என தோன்றி புத்தகக் கொலு வைக்கலாம் என்ற எண்ணம் உதித்தது. வீட்டில் வைத்தால் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் மட்டுமே பார்க்க இயலும் (வீடு இருக்கும் இடத்தின் தனிமையினால்). எங்கள் நூலகத்தில் வைத்தால்? அங்கும் அதே நிலைமை தான். ஆனால் ஏற்கனவே புத்தகங்கள் உள்ள இடம் தானே அது என்று எண்ணி நூலகத்தில் வேண்டாம் என்று நினைத்து, அலுவலத்தில் வைத்தால் என்ன என தோன்றிற்று. அலுவலகத்தில் அனைவரும் இதை வரவேற்று ஆளுக்கொரு பொருப்பினை எடுத்துக்கொள்ள முன்வந்தனர் (அவர்கள் அனைவருமே கல்லூரியின் அலுவலகப்பணியாளர்கள் என்பதை நினைவில் கொள்க!)

இதற்கிடையில்: இந்த மாத துவக்கத்தில் 50 வருட பழமையான எங்கள் கல்லூரியில் புத்தக திறனாய்வு எதுவும் இதுவரை நடைபெற்றதில்லை என்பதை அறிந்து வேதனையுடன், ஒவ்வொரு மாதமும் நான் ஒரு புத்தகத்தை எங்கள் கல்லூரி மாணவிகளுக்கு அறிமுகப்படுத்துகிறேன் என முன்வந்து, உரிய அதிகாரியின் அனுமதியுடன் 40 நிமிடத்திற்கு ஒரு புத்தககத்தை (பெண்களின் ஆடை: வரலாறும், அரசியலும்) அறிமுகம் செய்தேன். மாணவிகளின் மத்தியில் பெரும் மகிழ்ச்சி, மற்றும் வரவேற்பு. எனினும் ஆசிரியர்கள் குவிந்துள்ள ஒரு இடத்தில் ஒரு அலுவலகப் பணியாளராகிய நான் இந்த முன்னெடுப்பை எடுத்ததில் ஒரு அரசு அலுவலகத்திற்கே உண்டான சலசலப்பு இருந்ததாக புத்தகக்கொலு வைக்கவிருந்த நாளுக்கு இரண்டு நாள் முன்பு கேள்விப்பட்டு புத்தகக்கொலு எண்ணத்தை கைவிட நினைத்தேன்.

இம்மாதிரி சலசலப்புகள் நாம் செய்ய நினைக்கும் நற்காரியங்களுக்கு தடையாக இருக்கக்கூடாது என என் சக பணியாளர்கள் (அனைவரும் அலுவலகப்பணியாளர்களே!) தொடர்ந்து ஊக்குவித்தனர். நமக்குள் நாம் நன்மையினை தொடர்ந்து செய்வோம் என முடிவு செய்தோம். அதன் விளைவே 20.10.2023 வெள்ளி அன்று எங்கள் அலுவலகத்தில் உள்ள சிறிய இடத்தில் கல்லூரி முதல்வரின் ஒப்புதலுடன் நடைபெற்ற புத்தகக்கொலு. 🙌

கொலு வைக்கும் படிக்கட்டுகளின் விலை அதிகமாக இருந்த காரணத்தினால் என்ன செய்வதென்றி தெரியாமல் நின்றோம். ஒரு நாள் மட்டுமே இடையில் இருந்தது. பின்னர் ஆண்டுதோறும் கொலு வைக்கும் நபர் எவரெனும் இந்த ஆண்டு வைக்காமல் இருந்தால், கொலு படிக்கட்டுகளை பெறுவோம் என முடிவு செய்து, அவ்வாறு ஒருவரை கண்டுபிடித்து, படிக்கட்டுகளை பெற்றோம். அதனை வழங்கியவர் தங்கள் குடும்பத்தில் சிலருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் இவ்வாண்டு வைக்க இயலவில்லை எனவும், அவர்களின் கொலு படிக்கட்டுகள் இவ்வாண்டும் தொடந்து பயன்படுவதே மிக்க மகிழ்ச்சி எனவும் தெரிவித்து வழங்கினார். அதனை எங்களுக்கு தெரிந்தவரை தப்பும் தவறுதலுமாக அமைத்து முடித்தோம்.

ஐம்பது புத்தகத்தினையேனும் அறிமுகப்படுத்த வேண்டும் - வெவ்வேறு எழுத்தாளருடையது - என எண்ணி, ஒவ்வொரு படிக்கட்டும் ஒரு பிரிவாக அமைக்க முடிவு செய்தோம்.


 (1) சிறார் இலக்கியம்

(2) பெண்ணியம் சார்ந்த நூல்கள்

(3) கல்வி சார்ந்த நூல்கள்

(4) இயற்கை, சூழலியல் சார்ந்த நூல்கள்

(5) மொழிபெயர்ப்பு நூல்கள் (பிற மொழிகளில் பெரிதும் கவனத்தை ஈர்த்தவை)

(6) சமகால தமிழ் இலக்கியவாதிகளின் நூல்கள்

(7) விரும்பி யாரேனும் வைக்க நினைக்கும் அவர்களின் விருப்பமான நூல்கள் (எங்கள் கல்லூரி முதல்வர் இரு நூல்களை கொலுவிற்கு வழங்கினார்)

இவ்வாறு 80க்கும் குறைவில்லாத புத்தகங்களை அடுக்கி, சுற்றி பூவினாலும் அலங்கரித்தோம்.  

கொலுவிற்கு வருபவர்களுக்கு பரிசாக என்ன வழங்கலாம் என்று யோசிக்கையில், ஆளுக்கொரு புத்தகம் வழங்குவது சாத்தியமாகாது என எண்ணி, BOOK MARKS செய்து வழங்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம். அலுவலகப் பணியாளர் ஒருவரின் மகள் ஐம்பதுக்கும் மேற்பட்ட BOOK MARKS செய்துத்தந்தார் (ஒரே இரவில்). பின்னர் புத்தக வாசிப்பின் அற்புதத்தை விளக்கும் விதமாக ஆளுக்கொரு வாசிப்பின் மகத்துவத்தை உணர்த்தும் சீட்டினைத் தருவோம் என எண்ணி ஐம்பதினை தயார் செய்தோம். 😍

கொலு அன்று எங்கள் அனைவருக்கும் பெரிதாக ஏதோ சாதித்த மகிழ்ச்சி. இவ்வாறு ஒரு கொலு வைக்கப்பட்டுள்ளது என எந்த அறிவிப்பும் வழங்காமல் வாய்மொழியாக மட்டும் தெரிவித்து வருபவர்களை வரவேற்றோம். அலுவலகத்திற்குள் வந்து கொலுவினை ஒரு கண்டும் காணாமல் சென்ற ஆசிரியர்களும் உண்டு. பார்த்து வாழ்த்தியவர்களும் உண்டு. 50 சீட்டுகளில் 30 சீட்டுகள் மீதம் உள்ளது என்று நான் சொன்னால் கொலு பார்க்க வந்தவர்களின் எண்ணிக்கையை நீங்கள் கணக்கிட்டுக்கொள்ளலாம். 😆

எனினும் இதுவரை புத்தகங்கள் வாசிக்காத, வாசிக்கக்கிடைக்காத ஐவரேனும் கொலுவில் இருந்த புத்தகத்தினுள் தமக்கு பிடித்த புத்தகத்தினை எடுத்துச் சென்று வாசிக்கத் துவங்கினர்.💪

திருப்தியாக நாள் நிறைவடைந்தது. அதனினும் ஆச்சரியம், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் இன்ஸ்டாகிரம் (Instagram) பக்கத்தில் அன்று இரவு எங்கள் அலுவலகத்தின் கொலு இடம்பிடித்தது. இது எவ்வாறு அங்கு சேர்ந்தது என்பது எங்களுக்குப் புதிரே!  இப்பூவுலகில் நன்மை மட்டும் இவ்வாறு பரவட்டும்! 💖💖💖



2 comments:

  1. எங்கும் நண்மை பரவட்டும் பூமியில். நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete