Monday, December 2, 2024

டோமோயி நூலகம் உருவான கதை :-)

 1

சிறு வயதில் என் தந்தை ஞாயிற்றுக்கிழமைகளில் காஞ்சிபுரம் மாவட்ட நூலகத்திற்கு கூட்டிச்செல்வார். நான் எந்த பிரிவுக்கு செல்ல வேண்டும் என்று அவர் எதுவும் சொன்னதில்லை. உனக்கு பிடித்த பிரிவுக்கு செல் என்று சொல்லிவிட்டு அவருக்கு விருப்பமான புத்தகத்தை எடுக்கச்செல்வார். நூலகரின் உதவியை கேட்கத் தோன்றியதில்லை. ஆதலால் ஏதோ ஒன்று என புத்தகத்தை எடுத்து வருவேன்.  எடுத்த அனைத்து புத்தகங்களையும் முழுமையாக வாசித்தேனா என்றால் இல்லை.

நான் பயின்ற பள்ளியில் பெயருக்கு ஒரு நூலகம் இருந்தது. அவ்வப்போது என் தலைமையாசிரியரிடம் நூலகம் செல்ல அனுமதி கேட்டதும், அங்குள்ள புத்தகங்களை அடுக்கியதும், நூலகம் செல்ல பிரத்யேக நேரத்தை ஒதுக்கி கேட்டதும் நினைவில் உள்ளது. பொது அறிவு புத்தகங்களே இருந்தன என்பதும் ஞாபகத்தில் உள்ளது. அப்புத்தகத்திலுருந்து பொது அறிவு வினாடி வினா காலை கூட்டத்தில் நடத்த கோரியதும் நான் ஒரு ஆர்வக்கோளாறாக இருந்துள்ளேன் என்பதும் இன்று நினைத்துப் பார்க்கையில் சற்று கூச்சத்தை ஏற்படுத்துகிறது.

நான் கல்லூரி படித்துக்கொண்டிருந்த போது தன்னார்வலராக பணிபுரிந்த இடங்களில் நூலகங்களை அமைப்பதை ஒட்டி உரையாடுவதில் ஆர்வம் காட்டியுள்ளேன். மேலும் அங்கெல்லாம் புத்தகங்களை பரிசாக வழங்கி நூலகங்கள் அமைக்க வலியுறுத்தியுள்ளேன். தெரிந்த, தெரியாத அரசு பள்ளிகளுக்கும் கூட.

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கும் இன்னொரு விஷயம், என் மகள் பிறந்த உடன் எங்கள் அறையின் ஒரு மூலையில் ஒரு சிறிய திறந்த cupboard வைத்து வண்ண புத்தகங்கள் சிலவற்றை அதில் அடுக்கி எங்கள் மகளின் முதல் நூலகம் என்று சொல்லி வந்தேன்.

தொடர் வாசிப்பில் இருக்கிறேனோ இல்லையோ, நூலகங்களுக்கு செல்வது, வித்தியாசமான நூலகங்களைப் பற்றி இணையத்தில் தேடுவது, வீட்டில் நூலகம் அமைப்பது என நூலகம், புத்தகம் தொடர்பான ஏதோ ஒரு ஆர்வம் ரொம்ப காலமாக இருந்துள்ளது. நிறைய படித்திருக்கேனா என்றால் இல்லை. ஆனால் நிறைய படிக்க வேண்டும் என்ற ஆசை அன்று முதல் இன்று வரை உண்டு. முயற்சி செய்தும் வருகிறேன்.

2

2010-2011 காலக்கட்டத்தில் தினமும் இரயிலில் பயணம் செய்து படிக்கச்செல்லும் போது என்னுடன் ஒரு அரசு சாரா அமைப்பில் தன்னார்வலராக பணியாற்றிய ஒரு நண்பரும் அதே இரயிலில் தினமும் வேலைக்கு செல்வதை அறிந்தேன். அப்போது நாங்கள் இருவரும் எங்களிடம் இருக்கும் புத்தகங்களை மாற்றிக்கொள்வோம். இருவரும் அப்புத்தகங்களை படித்து முடித்தவுடன் மாற்றிக்கொண்டு புதிய புத்தகங்களை பரிமாறிக்கொள்வோம். அவ்வாறு அவரிடமிருந்து 2011ல் அறிமுகமாகியது தான் எனக்கு இன்று வரை மனதிற்கு நெருக்கமான “டோட்டோ-சான்” என்ற புத்தகம்.

இரயிலில் அப்புத்தகத்தை படித்துக்கொண்டே நான் இறங்க வேண்டிய நிலையத்தைத் தாண்டி சென்றது அதுவே முதலும், கடைசியுமாகும். அப்படி ஒரு தாக்கத்தை அந்த புத்தகம் ஏற்படுத்தியது. அதற்கு பிறகு அப்புத்தகத்தை பல முறை முழுமையாகவும், இங்குமங்குமாகவும் வாசித்திருக்கிறேன். இன்று வரை.

அப்புத்தகத்தை படித்த காலக்கட்டத்தில் வார இறுதி நாட்களில் வேலூர் பகுதியில் ஒரு அரசு சாரா அமைப்பு நடத்தி வந்த கிராமப்புற பள்ளியில் தன்னார்வலராக பணியாற்றினேன். அப்பள்ளியில் நாம் கொண்டுவர நினைக்கும் நல்ல முன்மாதிரிகளை பரிசோதித்துப் பார்க்க தடையேதும் இல்லாத சூழல் இருந்தது. டோட்டோ-சானை படித்துவிட்டு அப்புத்தகத்தில் வரும் டோமோயி பள்ளியின் செயல்பாடுகளை இப்பள்ளியில் செய்து பார்க்க ஆசைப்பட்டு சிலவற்றை முயற்சி செய்தது நினைவிருக்கிறது.

டோமோயி பள்ளி ஒரு கனவுப் பள்ளி. இவ்வாறு நமக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் எனக்கு உண்டு. தெரிந்தோ தெரியாமலோ என் மகளுக்கும் டோமோயி பள்ளியின் தலைமையாசிரியரை மிகவும் பிடித்துவிட்டது.; எனக்கு இருந்தது போன்ற ஏக்கமும் தொற்றிக்கொண்டுள்ளது.

மகளை பள்ளியில் சேர்க்க நினைத்த போது, டோமோயி போன்ற பள்ளி நம் அருகமையில் இல்லையே என்றும், அது போன்ற பள்ளியை நிறுவும் அளவுக்கு நமக்கு வசதி வாய்ப்பும் இல்லையே என்றும் நினைக்கத் தோன்றியது.

டோமோயி பள்ளியின் சாயல் சிறிதளவேனும் உள்ளது அரசு பள்ளியில் மட்டும் தான் எனவும் நாம் முயன்றால் டோமோயி பள்ளியின் சிறப்பு அம்சங்களை அரசு பள்ளிகளில் முயற்சி செய்து பார்க்க இயலும் என்ற நம்பிக்கையில் எங்கள் மகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளோம்.

 

 Totto-Chan: The Little Girl at the Window Book by Tetsuko Kuroyanagi –  Bookowls

 3

நூலகங்களின் மேல் இருந்த ஒரு பிணைப்பும், குழந்தைகள் (எனக்கு பெரியவர்களோடு அவ்வளவாக set ஆவதில்லை) புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்ற ஆசையும், டோமோயி மேல் இருந்த காதலும், ஏக்கமும் எனக்குள் சேர்ந்திருந்தது. முக்கியமாக கிராமங்களிலும், அரசு பள்ளிகளிலும் உள்ள குழந்தைகளுக்கு டோமோயி போன்ற அனுபவத்தை சிரிதளவேனும் கொடுக்க வேண்டும் என்ற ஆசை. தனியார் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு வாய்ப்புகள் நிறைய வாய்க்கப்பெற்றுள்ளன. ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு அவ்வாறு இல்லை என்பது என்னுள் அசைக்க முடியாத எண்ணம். ஆனால் அவ்வாறு கிராமத்திலோ, அரசு பள்ளிகளிலோ நாம் நினைப்பது போன்று பணி செய்ய வேண்டும் என்றால் நமக்கான ஒரு இடத்தை உருவாக்க வேண்டும். ஏனெனில் நம் மனதில் ஓடும் எண்ணங்கள் பொதுபுத்தியிலிருந்து மிகவும் மாறுபட்டது. எனவே டோமோயில் உள்ளவாறு குழந்தைகளுக்கு ஒரு சுதந்திர வெளி. அவ்வாறான ஒரு இடம் புத்தகங்களோடு இருந்தால் சரியாக இருக்கும் என்று தோன்றவே திருநெல்வேலி மாவட்டம், வல்லவன்கோட்டை கிராமத்தில் 2022 ஏப்ரல் மாதத்தில் டோமோயி நூலகம் திறக்கப்பட்டது. வாடகைக்கு ஒரு சிறிய வீட்டினை கொண்டு நூலகம் செயல்பட்டது. வாசிப்பைக் காட்டிலும் குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடிய நாட்களே அதிகம். சுற்றுலா செல்வது, பயிலரங்குகள் நடத்துவது, கதைகள் பேசுவது, கொஞ்சமாக புத்தகம் வாசிப்பது என இரண்டு ஆண்டுகள் ஓடின.

பல்வேறு காரணங்களால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அக்கிராமத்தில் தொடர முடியாமல் போனதால், எங்கள் மகள் படிக்கும் அரசு பள்ளிக்கு அருகில் ஒரு கடையினை வாடகைக்கு எடுத்து தற்போது மூன்று மாத காலமாக டோமோயி நூலகம் செயல்பட்டு வருகிறது. என்ன பெயர் இது என்று கேட்பவர்களிடம் டோட்டோ-சானையும் டோமோயியையும் கொண்டு சேர்ப்பதை ஒரு குஷியான வேலையாக செய்து வருகிறோம், குடும்பமாக!!!


பின் குறிப்பு: இதை எழுதத் தூண்டிய சண்முகவடிவு அக்காவிற்கு நன்றிகள்!

1 comment:

  1. தொடரட்டும் தங்கள் செயல்கள் .....வாழ்த்துகள் ...!

    ReplyDelete

Who Wrote the Indian Constitution? 💭

"Who wrote the Indian Constitution?" - If this question was asked to me, I would have straight away said "Dr Ambedkar", ...