Friday, May 10, 2024

விசித்திரமான அருங்காட்சியகங்கள் 🎊

சென்னை வாசிகளால் எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகம் பரவலாக 'செத்த college' என்று அழைக்கப்படும். நம் ஊரில் அருங்காட்சியகம் பார்க்கப்படும் பொதுப்பார்வையாக இதை கருதலாம். உயிரற்ற பொருட்கள் குவிக்கப்பட்டுள்ள இடமாகவும், கடந்த காலத்தில் என்ன உள்ளது என்ற எண்ணமும் ஒரு சேர உருவான இடமாக அருங்காட்சியகம் நம்மில் பலரால் எண்ணப்படுகிறது.

எனினும் புத்தகக்கண்காட்சியில் சுபாஷினி என்பவரின் படைப்பு "உலக அருங்காட்சியகங்களினூடே ஒரு பயணம்" கண்ணில் தென்பட்டவுடன் வாசிக்கத் தூண்டியது. நாங்கு பகுதிகளாக வெளிவந்த இத்தொகுப்பில் முதல் பகுதியை மட்டும் வாசித்துள்ளேன்.

 உலக அருங்காட்சியகங்களினூடே ஒரு பயணம் (தொகுதி - 1) - Aazhi Books 

உலகின் பல பகுதிகளில் உள்ள பிரம்மாண்டமான, வரலாற்றுச் சிறப்புமிக்க, ஆச்சரியமான, சுவாரஸ்யமான அருங்காட்சியங்கள் பற்றிய தொகுப்பாக இந்த நூல் உள்ளது. இலங்கையின் தேயிலை தொழிலாளர்கள், கடல் ஆய்வு, வாசனை திரவியங்கள், பூமிக்கடியில் அமைக்கப்பட்டுள்ள உப்புச் சுரங்கம், பண்டைய மக்களின் வாழ்க்கையை சித்தரிப்பது என பலதரப்பட்ட அருங்காட்சியங்களின் விவரங்கள் இதில் உள்ளன. வரலாற்றின் மீது பெரிய ஈடுபாடு இல்லாதவர்களுக்கும் புது ஈடுபாட்டினை இப்புத்தகம் உருவாக்கக்கூடும் என நினைக்கிறேன். அருங்காட்சியங்களுக்குள் செல்வதற்கான வழித் தொடங்கி, நுழைவுச்சீட்டு விபரங்கள், அனுமதி நேரம், நெரிசல் என அனைத்து தகவல்களும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் உள்ளன. கூடுதலாக அருங்காட்சியங்களின் முழு விலாசமும் ஆசிரியர் வழங்கியுள்ளார்.

இப்புத்தகத்தில் என்னை மிகவும் கவர்ந்தவை 🎉

(1) தென் ஆப்பிரிக்காவில் உள்ள மகாத்மா காந்தி அருங்காட்சியகம்

(2) பர்மா-சியாம் மரணப்பாதை அருங்காட்சியகம், தாய்லாந்து

(3) வதை அருங்காட்சியகம், செக் குடியரசு

(4) உடைந்த உறவுகள் அருங்காட்சியகம், குரோஷியா

இதிலும் எனக்கு மிகவும் வித்தியாசமாக தெரிந்தது குரோஷியாவில் உள்ள "உடைந்த உறவுகள் அருங்காட்சியகம்." மற்ற அனைத்தும் கடந்த காலத்தை உறைய வைத்த, இனி கூடுதலாக இணைக்க வேண்டிய அவசியம் இல்லாதவை. பார்வையாளர்கள் பார்வையாளர்களாக மட்டுமே இருக்கக்கூடியவை. 

ஆனால், "உடைந்த உறவுகள் அருங்காட்சியகம்" உலகில் சம காலத்தில் உள்ளவர்களால் இயங்கி வருகிறது. உலகின் எந்த மூலையில் இருந்தும், உறவுகளால் தன் இதயம் வலி கண்டிருந்தாலும், அவ்வுறவினை மறக்கவும், உடைந்த உறவுகளை திரும்பிப் பார்க்க வேண்டாம் என எண்ணுபவர்கள் எவரும் அந்த உறவினை நினைவுப்படுத்தக்கூடிய எந்த பொருளையும், ஒரு குறிப்புடன் இங்கு அனுப்பி வைக்கிறார்கள். அவைகளால் ஆனதே இந்த அருங்காட்சியகம். மனித உறவுகளுக்காக மட்டுமே இந்த அருங்காட்சியகம் என்பது எனக்கு சிலிர்ப்பாக இருந்தது.💞

இந்த புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த வேளையில் எங்கள் மகளுக்கு காண்பித்த திரைப்படம் நாங்கள் சிறு வயதில் மிகவும் ரசித்த "Night at the Museum." 🎥

 The Case for Night at the Museum. “What's your favorite movie?” This is a…  | by Gwen Rogers | Medium

இது தற்செயலாக நடந்ததே. ஒரு அருங்காட்சியகம் இரவில் உயிர் பெறுவதாக எடுக்கப்பட்ட திரைப்படம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கக்கூடியது. அருமையான கதாபத்திரங்கள், திரைக்கதை மற்றும் வசனங்கள். தான் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் ஒரு வரலாற்று ஆளுமையிடன் அவரை பற்றி அவரிடமே கேட்டு தெரிந்துகொள்வது போன்ற கட்சிகள் மிகவும் அருமை. 😍

இப்படத்தில் வருவது போல் ஒவ்வொரு அருங்காட்சியகத்திற்கும் உயிர் உண்டு. அவை நிச்சயமாக 'செத்த college' அல்ல. அவை நம்மிடம் நாம் மறக்கக்கூடாத கடந்த காலத்தைப் பற்றி தொடர் உரையாடல் நிகழ்த்துபவை. 🙌

No comments:

Post a Comment