நான் பள்ளியில் பயின்ற காலக்கட்டத்தில் அரசு பள்ளிகளில் மரங்களின் நிழலில் பாடம் எடுத்தது தினசரி வாடிக்கையான விஷயம் தான். அரசு பள்ளிகளில் போதுமான வகுப்பறை வசதிகள் இருந்ததில்லை. ஒரே அறையினை இரண்டு மூன்று தடுப்புகளாக பிரித்து பல வகுப்புகள் எடுக்கப்பட்டன. மேலும் அன்றைய அரசு பள்ளி வளாகங்களில் மரங்களும் நிறைய இருந்தன.
Pic courtesy: UNICEF
அக்காலக்கட்டத்தில் இருந்த தனியார் பள்ளிகளுமே விருப்பப்படும் ஆசிரியர்கள் தங்கள் வகுப்புகளை மைதானத்தில், மரத்தடியில் எடுக்க அனுமதித்தது. எனது பள்ளியிலும் பல வகுப்புகள் அவ்வாறு எடுக்கப்பட்டன. அவ்வகுப்புகள் பெரும் குதூகலத்தை வழங்கியது என்றால் மிகையாகாது. அதற்கு முக்கிய காரணம் தினமும் 8 மணி நேரமும் ஒரே வகுப்பில், ஒரே இருக்கையில் அமர்ந்து பாடம் கவனித்ததில் ஏற்பட்ட சலுப்பு தான். வெட்டவெளியில், காற்றோட்டமாக, மர நிழலுல், வேடிக்கைப் பார்த்துக்கொண்டே அமர்ந்து, தரையில் உள்ள மண்ணில் ஏதேனும் வரைந்துக்கொண்டே, முடிந்த அளவு பாடம் கவனிப்பதில் இருந்த ஒரு அலாதியான ஃபீல் தான்.
இன்றைய குழந்தைகளுக்கு இது கிடைப்பதில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. தனியார் பள்ளி பெற்றோர்களோ தம் பிள்ளைகளை சாதாரண வகுப்பறையிலிருந்து குளிரூட்டப்பட்ட வகுப்பறைகளுக்கு அனுப்புவதற்கான வழிகளை ஆராய்கின்றனர். அரசு பள்ளி பெற்றோர்களோ தம் பிள்ளைகள் வெட்டவெளியில் பயில்வது தனியார் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப முடியாத "தங்கள் இயலாமையை" ஊர் அறியச் செய்வதாக எண்ணுகின்றனர். உலகளவில் கொரோனா காலக்கட்ட ஊரடங்கிற்கு பிறகு மாணவர்களை வகுப்பறைக்குள் முழு நாளும் அடைத்து வைக்காமல் வெளியில், மரங்கள் உள்ள இடங்களில் அமர வைத்து வகுப்புகள் எடுக்குமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. குழந்தையின் உடல் நலத்திற்கும் வெளிப்புற வகுப்புகள் சிறந்தது என்பதற்கு இது ஒரு சான்று.
சமீபத்தில் ஒரு நாள் மரத்தடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரு நிகழ்வினை செய்திருந்தோம். நெருக்கமானவர்கள், இவ்வாறு செய்யாதீர்கள் என்றும் பெற்றோர்கள் மரத்தடியில் தங்கள் பிள்ளைகள் உட்கார்ந்திருப்பதை விரும்பமாட்டார்கள் என்றும் எங்கள் மீது உள்ள அக்கறையில் சொன்னார்கள். வருத்தமாக இருந்தது. இயற்கையோடு அமர்ந்து குழந்தைகள் கற்பதில் உள்ள உளவியிலையும் மகிழ்ச்சியையும் எவ்வாறு எடுத்துரைப்பது?! குழந்தை வேடிக்கை பார்க்கத்தான் செய்யும். சுவர்கள் கொண்ட வகுப்பறையிலும் குழந்தைகளுக்கு இயல்பான கவனச்சிதறல்கள் இருக்கத்தானே செய்கிறது.
இன்று சில பள்ளிகள் இயற்கையோடு கற்பிப்பதன் விளைவுகளை உணர்ந்து, அதற்கு "பசுமைப்பள்ளி", "இயற்கையோடு கல்வி" என விதவிதமான பெயர்களிட்டு அவ்வாறு செய்தும் வருகின்றனர். எனினும் அப்பள்ளிகள் "மாற்றுப் பள்ளிகள்" என அறியப்படுகின்றன. குழந்தைகள் குறித்தும், கல்வி குறித்தும் எழுதியவர்கள், செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் அனைவரும் அகன்ற வானத்தினை கூரையாகக் கொண்டு, தன் சுற்றுச்சூழலை வகுப்பறையாகக் கருதுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளனர். இதனை வெகுஜென மக்களிடமும், இன்றைய பள்ளி ஆசிரியர்களிடமும் கொண்டு செல்வதுதான் சிரமமாக உள்ளது.
No comments:
Post a Comment