பெண்ணியம் பேசுபவர்களால் சமீப காலமாக அதிகம் பேசப்படும் விஷயமாக உள்ளது - "ஏன் இந்த சமூகத்தில் பெண்களுக்கான முடிவுகளை பெண்களால் எடுக்க இயலுவதில்லை?"
இங்குமங்குமாக இந்நிலை மாறி வருகிறது என்றாலும், பெரும்பாலும் பெண்கள் தொடர்பான முடிவுகளை அவ்வீட்டு ஆண்கள் எடுப்பது வழக்கமாக உள்ளது. என்ன படிக்க வேண்டும், யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும், தன் வருமானத்தை எவ்வாறு செலவு செய்ய/சேமிக்க வேண்டும், யாருடன் பழக வேண்டும், எவ்வளவு நேரம் நண்பர்களுடன் நேரத்தை செலவிடலாம், யாரெல்லாம் நண்பர்களாக இருக்கலாம் என பல நிலைகளில் பெண்களுக்கான திட்டங்களை வகுப்பவர், முடிவுகளை எடுப்பவர் என ஆண்கள் உள்ளனர். இப்பொருள் தொடர்பான நிறைய கதைகள், கட்டுரைகள், திரைப்படங்கள், நாடகங்கள் சமீபகாலங்களில் வலம் வருகின்றன. இப்பேசு பொருள் எனக்கும் நெருக்கமானது என்பதால் அது தொடர்பாக கிடைப்பதை பார்ப்பதும், கேட்பதும் வழக்கம்தான். அப்படி சமீபத்தில் வாசித்த கட்டுரை ஷாலினி பிரியதர்ஷினியின் "மீட்சி-சித்திரம் 15" - நாடோடிச் சித்திரங்கள் என்ற புத்தகத்தில்.
இதிகாசங்களை விரும்பிப் படிப்பவள் அல்ல நான். சிறு வயதிலும் இதிகாசங்கள் பற்றிய கதைகளினை நிரம்ப கேட்டவளும் அல்ல. என்றாலும் கூட இராமயாணம் மற்றும் மகாபாரதம் இந்துக்களின் நடைமுறை வாழ்வியலுள் எப்படியேனும் புகுந்துவிடக்கூடியது என்ற அளவில் இராமயாணம் மற்றும் மகாபாரதம் பரிச்சயம். மேற்குறிப்பிட்ட புத்தககத்தின் கட்டுரையில் இராமாயணத்தில் பெண்ணுக்காக ஆண் எடுக்கும் முடிவு குறித்தும் அதன் விளைவுக்குறித்துமான ஒரு கிளைக்கதை வாசிக்கக் கிடைத்தது.
இராமயாணம் என்றால் இராமர் ('ர்' விகுதியில் எழுத வேண்டுமா என்ற குழப்பம் நெடு நேரம் எனக்கு இருந்தது), சீதை, லட்சுமனர், இராவணர், ஹனுமன், ஜடாயு போன்ற பெயர்களும், கதாபத்திரங்களும் தான் பிரபலம். கிளைக் கதைகளில் இன்னும் ஒரு சில பெயர்கள் தெரியவந்திருக்கும். அவ்வளவே. நான் ஊர்மிளை என்ற கதாபாத்திரத்தினை கேள்விப்பட்டதில்லை.
இராமயாணத்தில் வனவாசம் முடிந்து இராமன், சீதை, லட்சுமனன் ஆகியயோர் நாட்டுக்குத் திரும்பும் போது இராமருக்கும் சீதைக்கும் கிடைத்த வரவேற்பு லட்சுமனருக்கு கிட்டவில்லை என்பது வேறு கதை. ஆனால் அவரின் மனைவி ஊர்மிளை அவரைக் காண வெளியில் வரவில்லையாம். இவர் தன் மனைவியை காண உள்ளே சென்றபோது கதவை அடைத்துக்கொண்டு அவரை காண விருப்பமில்லை எனவும் இனி என்றுமே அவருடன் வாழ விருப்பமில்லை எனவும் கூறியிருக்கிறார். சுற்றியுள்ள அனைவரும் ஒரு மனைவி தன் கணவரிடம் இவ்வாறு நடந்துக்கொள்வது தவறு என்று கடிந்துள்ளனர். எனினும் தன் நிலைப்பாட்டிலிருந்து ஊர்மிளை சிறிதும் பிறழவில்லையாம்.
தான் இவ்வாறு நடந்துக்கொண்டதற்குக் காரணமாக அவர் சொன்னது தன் கணவர் காட்டுக்குச் செல்ல முடிவெடுத்தது வரை தவறில்லை. அது அவரின் வாழ்க்கை, அவரின் அண்ணன் மீது உள்ள மரியாதை. ஆனால் அவர் வனவாசம் செல்லும் போது தன் மனைவி எங்கு வசிக்க விரும்புகிறாள் என கேட்காமல் லட்சுமணரே ஊர்மிளை நான்கு சுவர்களுக்குள் இருக்க வேண்டும் என முடிவெடுத்து அதன்படியே நடந்துக் கொண்டது ஏற்கத்தக்கதல்ல என தெரிவித்துள்ளார். தனக்கான முடிவினை தன்னை கலந்தாலோசிகாமல் தனக்கு விருப்பமில்லாத பாதையை தேர்ந்தெடுத்து தன் வாழ்வின் 14 வருடங்களை சிரமத்துக்குள்ளாகியதைச் சுட்டிக்காட்டி தனக்கு தன் கணவருடன் இனி எந்த உறவுமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அத்தைரியம் இல்லாத ஊர்மிளைகள் நம்மிடையே அதிகம்.😟
No comments:
Post a Comment