Wednesday, July 5, 2023

இரு வேறு சம்பவங்கள் 😊

முதல் சம்பவம்

சுதந்திர போராட்டக்காலம். காந்தியடிகளை குமரப்பா அவர்கள் நிச்சயம் சந்திக்க வேண்டும் என பலர் கூறி வந்த நிலையில், அவர்களின் சந்திப்பு நிகழ்ந்தது. குமரப்பாவின் வாழ்க்கையை மாற்றியது. தன் பங்கினை சிறப்பாக செய்து வந்தார் குமரப்பா. ஒரு முறை பீகாரில் நில நடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நிவாரணத் தொகை தொடர்பான வேலையில் இருந்துள்ளார். அப்போது ஒரு நாள் காந்தியடிகள் குமரப்பாவை சந்திக்க பீகார் வந்துள்ளார். குமரப்பாவிற்கு அப்பணியை வழங்கிய இராஜேந்திர பிரசாத் அவர்கள் குமரப்பாவை சந்திக்க இயலாது என தெரிவித்துள்ளார். குமரப்பாவின் பணியின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்ட காந்தி  குமரப்பாவை தான் நாளை சந்திக்க வருவதாகக் கூறிச் சென்றுள்ளார். மறு நாள் காந்தி வந்த போது குமரப்பா தான் வேலையாக இருப்பதாகக் கூறி மறுநாள் வரும்படி கூறியுள்ளார். காந்தி, தான் அன்று இரவே ஊருக்கு செல்வதாகக் கூறியவுடன், தன்னை சந்திக்க வருவதை முன் கூட்டியே தன்னிடம் தெரிவித்திருக்க வேண்டும் எனவும், தனக்கு வேலை இல்லாமல் இருந்திருந்தால் தானே காந்தி அவர்களை சந்திக்க வந்திருப்பேன் எனவும் கூறி காந்தியடிகளை சந்திக்கவில்லை. காந்தியடிகளும் தான் சந்திக்க வந்த காரணத்தை எழுதி குமரப்பாவிடம் சேர்க்கும்படி தந்துவிட்டுச் சென்றுள்ளார். (நன்றி: டிராக்டர் சாணி போடுமா?)

டிராக்டர் சாணி போடுமா? - ஜே.சி.குமரப்பா - தன்னறம் | panuval.com

இரண்டாவது சம்பவம்

டேவிட் ஹாஸ்பக் (David Horsburg) என்பவர் 1972ல் கர்நாடகா மாநிலத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு  மாற்றுக்கல்வியனை தன் "நீல் பாக்" (Neel Bagh) என்ற பள்ளி மூலம் வழங்கி வந்தார். அவரின் பள்ளியின் பெருமையினை கேள்விப்பட்ட அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் ஒரு முறை கர்நாடக மாநிலம் சென்றிருந்தபோது தான் அந்த பள்ளியினை பார்வையிட விரும்பியுள்ளார். தன் ஆட்களை அனுப்பி தான் வரவிரும்பும் செய்தியினை டேவிட்டிடம் தெரிவித்துள்ளார். சிறிது யோசனைக்குப் பிறகு பிரதமர் அவர்களுக்கு தன்னால் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய இயலாது என்பதை அந்தச் செய்தி கொண்டு வந்தவர்களிடம் டேவிட் சொல்லி அனுப்பியுள்ளார். சில மணி நேரங்களுக்குப் பிறகு, தான் மட்டும் ஒரே ஒரு காரில் வருவதாகவும், அதிகபட்சம் இன்னொரு கார் மட்டும் வரும்படி தான் பார்த்துக்கொள்வதாகக் கூறி தன் ஆட்களை இந்திரா காந்தி அவர்கள் அனுப்பிவைத்துள்ளார். தன் பள்ளிக்கு பிரதமர் வந்து சென்றால் தேவையற்ற விளம்பரமாகும் என்று கருதியும், வருகைக்குப்பின் அவ்விடம் ஒரு சுற்றுலா தலமாகக்கூடும் என கருதியும் அவர்கள் வருவதை டேவிட் அனுமதிக்கவில்லை. பிரதமரும் டெல்லி சென்றுவிட்டார். எனினும் பிரதமர் தன் அலுவலகம் மூலமும், கர்நாடக மாநிலத்தின் பல்வேறு அரசு அலுவலகங்கள் மூலமும் பல விதமான அழுத்தங்கள், இடர்பாடுகள் கொடுக்கப்பட்டதை டேவிட் உணர்ந்துள்ளார். பெரிய பதவிகளில் இருந்த அவரது நண்பர்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.  பிரதமரின் உத்தரவுகளை மீறி தங்களால் டேவிட் அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய இயலாதது குறித்தும் வருந்தியுள்ளனர். (நன்றி: PROJECT NOMAD)

Focus - 50 Years of Neel Bagh, started in Sep-1972 - SchoolScape 

தலைமை பண்பின் முற்றிலும் மாறுபட்ட உதாரணங்களாக இவ்விரு சம்பவங்களை பார்க்கிறேன். முதல் சம்பவத்தில் குமரப்பாவிற்கு இருந்த தெளிவும், துணிச்சலும் அதனை காந்தி அவர்கள் எடுத்துக்கொண்ட விதமும் இன்று காண்பதற்கரிது. இரண்டாம் நிகழ்வில் மற்றொருவர் இடத்திற்கு தான் வரவிரும்பியதை உரிய மரியாதையுடன் கேட்டனுப்பியது ஒரு புறம், அதை நிராகரித்த டேவிட் அவர்களின் தைரியம் ஆச்சரியத்தை அளிக்கிறது. அதன் பின்னர் நடந்தவை கசப்பானது என்பதும், அவை தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கு உகந்த பண்பில்லை என்பதும் மறுக்கயிலாது. 

'இல்லை', 'முடியாது' போன்ற வார்த்தைகளை நாம் சொல்லப் பழக வேண்டியது அவசியம். அதே போன்று அவ்வார்த்தகளை ஏற்றுக்கொள்ளவும் பெரிய கற்றலும் பக்குவமும் தேவைப்படுகிறது!!💖

No comments:

Post a Comment