குட்டி ஆகாயத்தின் 13வது இதழ் ரஷ்ய இலக்கியத்தினை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதாக அமைந்துள்ளது. ரஷ்யாவிற்கும் இலக்கியத்திற்குமான தொடர்பு, வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்களும் அறிந்த ஒன்று என்றே சொல்ல வேண்டும். எனினும் குழந்தைகளுக்கு ரஷ்ய இலக்கியம் அளித்துள்ள பொக்கிஷங்கள் பலவும், பலரும் அறியாதவை. அந்த வகையில் இந்த இதழ் ஒரு சிறந்த முன்னெடுப்பே. ஆங்கிலத்தில் First Comes First என சொல்வதுண்டு. அந்த வகையில் இந்த இதழ் பழுப்பு நிற பக்கங்களில் அச்சிட்டுள்ளது மிகவும் பொருத்தம். ரஷ்ய இலக்கியத்தின் தொன்மைக்கானக் குறியீடாகத் தோன்றுகிறது. மேலும் குட்டி ஆகாயம் தனக்கென ஒரு குறிப்பிட்ட கட்டமைப்புக் கொள்ளாமல் ஒவ்வொரு இதழுக்கும் ஏற்றவாறு தன்னை வடிவமைத்துக்கொள்வது அருமை.
இந்த இதழில் என்னை கவர்ந்த ஐந்து விஷயங்கள்:
(1 (1) முதலாவதாக இடம்பெற்றுள்ள “கதை சொல்லி” என்ற கதை. கதையின் சாராம்சம், இரு சிறுவர்கள் யார் அதிகமாகவும், பிரம்மாண்டமாகவும் பொய் சொல்கிறார்கள் என்பது. பொய் சொல்லக் கூடாது என நம் பிள்ளைகளுக்கு சொல்லுத்தந்தும், அவ்வாறே வாழவும் முயற்சி செய்யும் போது ‘இது என்ன விளையாட்டு?’ என தோன்றினாலும் தவறில்லை. அதற்கான விடையும் அந்த கதையிலேயே கிடைத்துவிடுகிறது. இதைவிட முக்கியமான ஒன்று, கதை சொல்வதும் கேட்பதும் அலாதியானது. ஆனால் பலரால் (பெரும்பாலான பெரியவர்களாலும், சில குழந்தைகளாலும்) தங்களின் கற்பனையினை பெரிதாக்கி அற்புதமான கதைகளை அளிக்க இயலுவதில்லை. இதற்கு முக்கியமான காரணம் அவர்களால் நிஜத்தை ஒட்டியும், நீதி போதனைகளுடனும், ஏதேனும் ஒரு கருத்தை முன்னிருத்தியுமே கதைகளை உருவாக்க முடிகிறது. இந்த ‘கதை சொல்லி’ கதையின் நாயகர்கள் விளையாடும் விளையாட்டை நாம் விளையாட முயற்சித்தால் நம் கற்பனை உலகம் விரிந்து அருமையான கதை சொல்லிகளாக முடியும். இதை ஒரு குழு விளையாட்டாக விளையாடும் பட்சத்தில் பல கதைகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். எங்கள் வீட்டின் இரவு நேர விளையாட்டில் இதுவும் இப்போது சேர்ந்துக்கொண்டது.
( (2) ரஷ்ய நாட்டு ஓவியர் ரசோவ்-ஐ பற்றிய குறிப்பும், அவரின் படங்களும். பெரியவர்களுக்குத்தான் பிற உயிரனங்கள் வேறானவை. குழந்தைகளுக்கோ அவை தம்மைப் போன்றவைதான். செல்லப்பிராணிகள் உள்ள வீடுகளில் அவைகளுக்கு அழகான உடைகள் அணிவிப்பதைப் பார்க்க முடிகிறது. அதை விடவும் அழகு ரசோவின் ஓவியங்கள். ஒரு இயல்பான மனிதனைப் போன்ற சித்திரமாக இருப்பது குழந்தகளுக்கு மிகவும் நெருக்கத்தையும் அன்பையும் விதைப்பதாக உள்ளது. குழந்தை உள்ளம் கொண்ட பெரியவர்களுக்கும் தான். இந்த சித்திரங்கள் மிகவும் பிரபலமான Hobbesஐ நினைவுப்படுத்துவதாக உள்ளது.
(3) ரஷ்ய சிறார் இலக்கியமானது கதைகள், ஓவியங்களைத் தாண்டி அறிவியல் சார்ந்த புத்தகங்களை வழங்கியுள்ளது. இந்த இதழ் அவற்றுள் சிலவற்றை அறிமுகப்படுத்தி அவற்றைத் தேடும் எண்ணத்தைத் தூண்டுகிறது. நான் Raduga Publishers குறித்து google செய்தேன்.
( (4) அனைத்து பக்கங்களிலும் அருமையான படங்கள். பிள்ளைகள் வரைந்துப் பார்த்து மகிழும்படியாக உள்ளன.
(5) பொதுவகவே ரஷ்ய இலக்கியத்தில் குழந்தைகளுக்கான கதைகள் ஒரு விதமான சாகசங்கள் கொண்டதாகவே இருக்கும். நம் ஊர் கதைகள் போல இல்லாமல். பல இடங்களில் ஆச்சரியமாகவும், நம்பகத்தன்மை இல்லாதது போன்றும் தெரியும். இருந்தும் குழந்தைகளின் பார்வையிலிருந்து படிக்கும் போது அவர்களின் தினசரி அப்படி அமையவே குழந்தைகள் விரும்புகின்றனர். அது போன்ற கதைகளும் இந்த இதழில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெற்றோர்களும், பிள்ளைகளும் சேர்ந்து வாசிக்க வேண்டிய இதழ்! பிள்ளைகளுக்கு ரஷ்ய இலக்கித்திறக்கான திறவுகோல் இது!
No comments:
Post a Comment