Monday, May 2, 2022

மணல்மகுடி, நாடகநிலம் - ஒரு அனுபவம்

மணல்மகுடி என்ற நாடகக்குழு என் வசிப்பிடத்திலிருந்து 90 கி.மீ. தொலைவில் உள்ள கோவில்பட்டியில் இருப்பதும், அவர்கள் கடந்த வாரம் சனிக்கிழமை (30.04.2022) அன்று "குட்டி இளவரசன்" என்ற புத்தகத்தினை சில்க் ரூட் என்ற நாடகக் குழுவுடன் இணைத்து நாடக வடிவத்தில் வழங்கப்போவதையும் அறிந்த பிறகு அங்கு செல்லாமல்  இருக்க இயலவில்லை. 

முதல் காரணம் "குட்டி இளவரசன்" என் மனதுக்கு மிக மிக நெருக்கமான புத்தகம். என் வாழ்க்கையின் மிக முக்கியமான நபர்களுக்கு இந்த புத்தகத்தை பரிசாக அளித்துள்ளேன். அவ்வளவு நெருக்கமான இந்த கதையை நாடகமாக பார்க்கப் போகிறோம் என்ற குதூகலம் தொற்றிக்கொண்டது. சற்று நேரத்தில் இந்த கதையை எவ்வாறு நாடகமாக மாற்ற இயலும் என்ற கேள்வி மலையாக எழுந்தது. இது இரண்டாவது காரணம். மூன்றாவது, எங்கள் மகள் பார்க்கும் முதல் நாடகம் "குட்டி இளவரசன்" என்பது ஒரு வகையான - சரியான வார்த்தை கிடைக்கவில்லை - மன நிறைவை, சந்தோஷத்தை, நெகிழ்வைத் தந்தது. எங்களுக்குமே நாடகங்கள் பார்த்த அனுபவங்கள் சொல்லும் அளவுக்கு இல்லை. இதனுடன் சேர்ந்து மற்ற சில சின்ன சின்ன காரணங்களால் இந்த நாடகத்துக்கு செல்வது என்று முடிவு செய்யப்பட்டு மூவரும் சென்றோம். 

எப்போதும் போல் கூகுள் கடைசி நேரத்தில் சொதப்புவது போல் தோன்றியது. பலரை விசாரித்த போது யாருக்கும் அவ்வாறான இடத்தினைப் பற்றி தகவல் தெரியவில்லை. மீண்டும் கூகுளை நம்பி சென்ற போது ஒரு முட்டுச்சந்தில் நிறுத்தியது. முட்டிய இடம் ஒரு ரயில் பாதை. இரு இளைஞர்கள் இடத்தைக் காட்டினர். ரயில் பாதையை ஒட்டி நடந்து சென்று இடத்தை அடைந்தோம். மணல்மகுடி எங்கும் அழகான சுவர் ஓவியங்கள். கலை நயமிக்க பொருட்கள் என வசீகரமாக இருந்தது. 

நாடகம் நடத்தப்படவிருக்கும் இடம் நேர்த்தியாக அமைக்கப்பெற்று, பார்வையாளர்களுக்கு கேலரி போன்ற அமைப்பு இருந்தது. மரங்கள் சூழ இருந்த இடத்தை பார்த்தவுடன் குழந்தைகளுக்கும் பெரியவர்களிக்கும் ஒன்று போல ஒரு உற்சாகம் பிறக்கும். நானும் என் மகளும் சுற்றிப்பார்த்து மகிழ்ந்தோம். மாலை 6.30க்கு துவங்க வேண்டிய நாடகம் 7.00 மணிக்கு துவங்கியது. துவங்கிய பின்பே தெரிந்தது இருவர் மட்டுமே நடிக்கவுள்ளனர் என்று. இரு பெண்களும் நன்கு பரிச்சயப்பட்ட சினிமா, தொலைக்காட்சி முகங்கள். நடிப்பு , பாவைக் கூத்து, பொம்மலாட்டம் என்று வெவ்வேறு வடிவத்தில், பல பொருட்கள் கொண்டு, தங்களின் கதாபாத்திரங்களை ஒருவரோடொருவர் மாற்றிக்கொண்டு அசத்தி, 'குட்டி இளவரசன்' நம்மோடு இருப்பது போன்றே உணர வைத்தனர். புத்தகத்தை மீண்டும் கண்முன் நிறுத்தினர். நாம் நமக்குள் அவ்வப்போது தொலைத்துவிடும் குழந்தையை மீட்க உதவினர். நம் பிள்ளைகளை நாம் பார்க்கும் பார்வையில் உள்ள தவறுகளை நினைவுறுத்தினர். 'சே, நம்ம பொண்ணும் ஒரு குட்டி இளவரசினு மறந்திடுறோமே' எனவும் 'நாம ஏன் குட்டி இளவரசன் மாதிரி இருக்க மறந்திடிறோம்' எனவும் தோன்றியவாறே இருந்தது.


அந்த புத்தகத்தை வாசித்த போதே அது ஒரு கதை என நான் நம்ப மறுத்தேன். என்னைப் பொருத்தவரை அது நிஜம். முழுக்க முழுக்க நிஜம் என நம்பினேன். அந்த குட்டி இளவரசன் இப்போது கூட எங்கோ ஏதோவொரு கிரகத்தில் யாருடனோ உரையாடிக் கொண்டுதான் இருப்பான். அவன் என்றும் வளராத 'குட்டி இளவரசனா'கவே இருப்பான். நமக்குள் இருக்கும் நம்மைப் போன்று! 

மணல்மகுடியுடன் துவங்கியிள்ள இந்த உறவு நீண்ட காலம் நீடிக்கக்கூடியது! 💗


No comments:

Post a Comment

மின்மினி பூச்சிகள் 🐝

என் சிறு வயதில் மின்மினி பூச்சிகள் ஏராளமாக இருந்தன. நாங்கள் வசித்த தெருவில் மாலை, இரவு வேளைகளில் விளையாடும் போது மின்மினிகளும் சேர்ந்து கொள்...