பரம்பொருள் என்ற அமைப்பின் நிறுவனர் மகாவிஷ்ணு என்பவரால் ஏற்பட்ட பிரச்சனை நாம் அனைவரும் அறிந்ததே. அவரை கண்டிப்பது, கைது செய்வது என்பதெல்லாம் ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம் அவரின் பேச்சினை ஏற்பாடு செய்த பள்ளி தலைமையாசிரியர்களின் பணியிட மாற்றம்.
அரசு பள்ளிகள் நிரந்தரமாக மூடப்பட்டு விடக்கூடாது என்றும் அப்பள்ளிகளில் கல்வித்தரம் உயர வேண்டும் என்றும் மனதார நினைப்பவர்கள் ஒரு சிலரே. மேற்குறிப்பிட்ட மகாவிஷ்ணு பிரச்சனையால் பள்ளிகளின் நலன் கருதி பணியாற்றிய பள்ளி தலைமையாசிரியர்கள் இப்போது தைரியமாக புது முயற்சிகளையும் முன்னெடுப்புகளையும் எடுக்க விரும்புவதில்லை. யாருக்குத்தான் திடீர் பணியிட மாற்றம் ஏற்புடையதாக இருக்கும்?! அதிலும் ஏதோ நல்லது செய்யலாம் என்று எண்ணுபவர்கள் இவ்வாறு தாக்கப்படும் சூழல் இருந்தால்! பணி செய்ய விரும்பாத பள்ளி ஆசிரியர்களுக்கு இப்பிரச்சனை ஒரு சாக்காக உள்ளது, அப்பாடா எதுவும் செய்யாமல் தப்பிக்க ஒரு காரணம் கிடைத்துவிட்டது என்று.
பள்ளியின் மேலதிகாரியின் அனுமதியுடன் நிகழ்வுகளை நடத்தலாம் என்றால், பள்ளி வளர்ச்சியில் அக்கறை உள்ள ஒரு சிலரே அனுமதி அளிக்கின்றனர். மற்றவர்கள் பாடத்தைத் தவிர வேறெதுவும் செய்யாதீர்கள், யாரையும் பள்ளிக்குள் அனுமதிக்காதீர்கள் என்று அதிகாரத் தோரணையுடன் கூறுகிறார்கள். அதிலும் ஒன்றிய, மாவட்ட அலுவலர்கள் என அதிகாரத்துவத்தின் தட்டுகள் பல இருப்பதால், ஒரு கடிதத்திற்கு பதில் கிடைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது.
மகாவிஷ்ணுவை கைது செய்வது என்று இருந்தாலும், பள்ளி தலைமையாசிரியரை கண்டித்து இது போன்ற தவறு நிகழாமல் பார்த்துக்கொள்ள சொல்லியிருக்கலாம். பணியிட மாற்றம் என்பது அவசர கதியில், ஊடகங்களுக்காக செய்யப்பட்டதாகவே தோன்றுகிறது.
அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிக்கு இணையான வாய்ப்புகள் கிடைக்க நாம் அரசு பள்ளிக்குள் நுழைய வேண்டியது அவசியம் என்று நானும் என் கணவரும் கருதியதால், அதற்கான வழி நம் பிள்ளையை அரசு பள்ளியில் சேர்ப்பது என்று முடிவெடித்தோம். அதன்படியே சேர்த்துள்ளோம். அவ்வாறே ஒரு பள்ளியின் நம்பிக்கையை இயன்றெடுக்க முடியும் என்று நினைத்தோம். ஆனால் மகாவிஷ்ணு பிரச்சனைக்குப் பிறகு ஒரு அடி எங்களால் நகர இயலவில்லை. எந்த நிகழ்ச்சி செய்யவும் அனைவருக்கும் பயம். எங்கள் பள்ளி ஆசிரியர்களை குற்றம் சொல்லமாட்டேன். எங்கள் மகள் சரளமாக தமிழும் ஆங்கிலமும் வாசிப்பதும், பாடங்களில் சிறப்பாக இருப்பதும், அனைவரிடமும் மரியாதையாகவும், அன்பாகவும் இருப்பது அப்பள்ளியினாலும், ஆசிரியர்களால் மட்டுமே. ஆனால் யாரோ ஒருவர் செய்த தவறினால் பாதிக்கப்படுவது வேறு யாரோ.
மகாவிஷ்ணு மீதும் நிகழ்வை ஒருங்கிணைத்த ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்த பலர் அடுத்து என்ன? இனி பள்ளிகளில் எவ்வாறு இதை முன்னெடுக்கலாம்? என்பதற்கு நெருக்கடி தராமல் இருப்பது நியாயமில்லை. காலம் பொன் போன்றது என்பதை மறந்துவிடுகிறோம்.
என்னை போன்ற சிலருக்கு மன உளைச்சலே மிச்சம்!!!