பள்ளிப் படிப்பை தாண்டாதவர்கள் என்பதாலும், 90களின் தனியார்மையமாக்கல் கொள்கையினை எதிர்கொண்ட முதல் தலைமுறை என்பதாலும், தன் பிள்ளைகள் ஆங்கிலம் சரளமாக பேச வேண்டும் என்ற பேரா(ஆ)சையினாலும், சுற்றத்தாரின் அழுத்ததினாலும் (இது குறைவே), எனது பெற்றோர்கள் எங்களை தனியார் ஆங்கில (கிருத்துவ) பள்ளி ஒன்றில் சேர்த்தனர். பள்ளிக்கு மிதிவண்டியிலும், பள்ளி பேருந்திலும் சென்று வந்தோம். ஆனால் இப்பதிவு என் பள்ளி பற்றியதல்ல. நான் பள்ளி சென்ற வழியில் வேறு ஒரு பள்ளி இருந்தது. அதன் பெயர் "காக்கா ஸ்கூல்."
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அப்பள்ளியை அவ்வாறே அழைத்தனர். அவ்வளவு ஏன், அப்பள்ளியில் பயிலுபவர்களிடம் "எங்க படிக்கற" என்று கேட்டால், "காக்கா ஸ்கூல்ல" என்றே சொல்வார்கள். இருபாலர் பயின்ற பள்ளி. பெரிய மைதானம் உண்டு. பெரிய பெரிய மரங்கள் சூழ்ந்த நிழல் பரந்த வளாகம். மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு அருகாமையில் இருந்தது. நியாய விலைக்கடைக்கு எதிரே. வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளின் மத்தியில். வாக்கு செலுத்தும் மையமாகவும், வாக்கு எண்ணும் மையமாகவும் செயல்படும். தடுப்பூசி செலுத்தப்படும். இவ்வாறு முக்கியமான இடத்தில் அமைந்து, பல ரகங்களில் பணிகளால் சூழப்பட்டு எப்போதும் துடிப்புடனே இருப்பது சாலையில் புதிதாக செல்பவர்களுக்குக்கூட விளங்கும். மரங்கள் நிறைய இருந்ததால் நிறைய காகங்களும் இருக்கும். ஆனால் அப்பள்ளி "காக்கா ஸ்கூல்" என்று அழைக்கப்பட்டதற்கு காரணம் வேறு.
நூற்றுக்கணக்கான குழந்தைகள், மாணவர்கள் பயின்று வந்த அப்பள்ளியில் எந்த நேரமும் அவர்களின் சத்தம் - பாடங்களை கூட்டாக படிக்கும் பழக்கம் மற்றும் சுதந்திரமாக விளையாடுவது - இருந்து கொண்டே இருக்கும். அதை விட அதிகமாக மாலையில் பள்ளிவிடும் வேளையில் அத்தனை பிள்ளைகளும் 'ஓ' என்ற பெருஞ்சத்தத்துடன் கலைந்து செல்வார்கள். இவ்விரு காரணங்களே அப்பள்ளி 'காக்கா ஸ்கூல்' என்று அழைக்கப்பட்டதற்கு காரணம் என சொல்லிக் கேட்டதுண்டு.
நானும் அப்பள்ளியை அவ்வாறே அழைப்பேன். அப்பள்ளியின் பெயர் தெரியாது, தெரிந்து கொள்ள முயற்சிக்கவும் இல்லை. யாரும் என்னை திருத்தவும் இல்லை. அப்பள்ளியை தாண்டும் போது ஒவ்வொரு முறையும் ஒரு கர்வம் தோன்றியதுண்டு. நான் உயர்ந்த இடத்தில் படிப்பதாகவும், "காக்கா ஸ்கூல்" தாழ்ந்தது என்றும், அங்கு படிப்பவர்களை விட எனக்கு அதிகம் தெரியும் என்றும். இந்த எண்ணம் என்னுடன் படித்தவர்களுக்கு இருந்ததையும் நினைவுக்கூற முடிகிறது.
குறிப்பிட்ட வயதினை தாண்டிய பிறகே அப்பள்ளியின் பெயர் "பஞ்சாயத்து யூனியன் பள்ளி" என தெரிந்து கொண்டேன். அதனை தொடர்ந்து அதிர்ஷ்ட்டவசமாக வயதுடன் சேர்ந்து கிடைக்கப்பெற்ற முதிர்ச்சியில் - புத்தகங்கள், தொடர்புகள், பயணங்கள் வழியாக - (அப்)பள்ளி தொடர்பான அறியாமையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுப்பட்டு வருகிறேன். எனினும் அன்று அறியாமையிலிருந்ததை இப்போது நினைவுக்கூறும் போது அவமானமாக உள்ளது. நிச்சயம் அப்பள்ளியில் பயின்ற நிறைய பேர் நல்ல பணியில் இருப்பார்கள். சமுதாயத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழியில் தங்களால் இயன்றதை செய்து கொண்டிருப்பார்கள். என்னைக் காட்டிலும் பல மடங்கு பயனுள்ள வாழ்க்கையை இந்தியாவின் அல்லது உலகின் ஏதோ ஒரு மூலையில் வாழ்ந்துக்கொண்டிருப்பார்கள்.
இந்த நினைவுகள் இப்போது தோன்ற காரணம், இந்த கல்வியாண்டில் எனது மகள் வீட்டின் அருகாமையில் உள்ள ஒரு "பஞ்சாயத்து யூனியன் தொடக்க பள்ளி"யில் முதலாம் வகுப்பில் சேர்ந்து பயின்று வருகிறாள். யாருக்கோ இது ஒரு "காக்கா ஸ்கூல்" என தோன்றலாம். பாவம், அவர்களுக்கும் என்னை போல பல வருடத்திற்கு பிறகு அந்த மாயை மறையலாம்.
PC: Google Images
No comments:
Post a Comment