புத்தருக்கும் எனக்கும் தனிப்பட்ட தொடர்பு ஏதும் இல்லாத போதும், ஏதோ ஒன்று உண்டு. அது போல தான் இந்த நிலப்பரப்பு மீதான காதலும் - இராமேஸ்வரம். காரணம் கன்னத்தில் முத்தமிட்டால்.
அப்படம் வெளிவந்த வேளையில் பெரிதும் வெற்றி பெறாமல், பின்னாளில் பெரும் கவனத்தை ஈர்த்தது. பலருக்கு அப்படம் ஏற்படுத்திய ஆழமான பாதிப்பு மறுதலிக்கயியலாது. எனக்கும். அப்படத்தின் கதை, கதாப்பாத்திரங்கள், காட்சியமைப்புகள், பாடல்கள், பின்னணி இசை என அனைத்தும் வெகுவாக கவர்ந்தன. ஒவ்வொரு முறையும் அழகிய ஆழமான உணர்வுகளை கொடுத்த வண்ணமே உள்ளது.
மேற்குறிப்பிட்ட அனைத்தையும் தாண்டி "நிலப்பரப்பு" என் மீது அதீத ஆதிக்கம் செலுத்தியது என்றே கூற வேண்டும்.
கோவிலுக்காக மட்டுமே சிறு வயதில் சென்ற ஊர், இராமேஸ்வரம். கடற்கரை முழுக்க குப்பை. எங்கும் கூட்டம். இரைச்சல். அவசரகோலமாக கடவுளின் தரிசனம். பெரிதாக எதுவும் மனதோடு ஒட்டவில்லை. ஆனால் அப்படத்தின் வழியாகக் கண்ட இராமேஸ்வரம் வேறு.
கவர்ச்சியான கடல் அலைகள்
நீண்ட நிலப்பரப்பு
அகப்பட்டுக்கொண்ட அகதிகள் முகாம்
ரெட் க்ராஸ் அமைப்பின், மரங்களுக்கு இடையே அமைந்த கட்டடம்
செவ்வனே சேவை புரியும் செவிலியர்கள்
நீலமான சாலைகள்
வெப்பக்காற்றோட்டமான வீடுகள்
தூர தேசமாக வெற்றுக்கண்ணுக்கு புலப்படாத இலங்கை
இவை அனைத்துடன் சேர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் "அமுதாவின் அமுதமான அழுகை"
இவை ஏற்படுத்திய பாதிப்பினால் இராமேஸ்வரம் மனதுக்கு நெருக்கமான இடமானது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு சென்ற போது, சிறு வயதில் ஏற்பட்ட எந்த அனுபவமும் ஏற்படவில்லை. நீண்ட சாலை வழியாக தனுஷ்கோடி செல்லும் போது கடல் அலைகள் போல மாறி மாறி வரும் பல எண்ணங்கள். வேறு ஒரு ஆளாக உணர வைத்தது. அது அழகாகவும் இருந்தது.
இவை இல்லாவற்றையும் விட இது: அரிச்சல்முனை - தென்கோடி - இலங்கைக்கு மிக அருகாமையில் உள்ள இந்திய நிலபரப்பு. மூன்று திசையிலும் அலைகள். காற்று. அங்கு சென்று சேர்ந்தவுடன் கைப்பேசியில் பெறப்பட்ட குறுஞ்செய்தி. "ஏர்டெல் தங்களை இலங்கைக்கு அன்புடன் வரவேற்கிறது."
ஒரு நிலப்பரப்பால் அசைக்க முடியாத பாதிப்பை தர முடியுமா என்றால், நிச்சயம் முடியும். குறைவாகவே புத்தகம் வாசிப்பவள் என்றாலும் ரஷ்யா என்றவுடன் நினைவுக்கு வருவது இரண்டு வார்த்தைகள் - ஸ்டெப்பி & பாப்ளர் மரங்கள். புத்தகங்களோ, திரைப்படங்களோ, எந்த நல்ல கலைவடிவத்தாலும் நம்மை எங்கும் கொண்டு செல்லவும் இயலும், நமக்கு மட்டுமே புரியக்கூடிய புதிய உறவுகளை உருவாக்கித்தர இயலும்.
No comments:
Post a Comment