கல்லூரி நாட்களில் என்னுடன் விடுதியில் தங்கிப் பயின்ற (மிகவும் வசதியான) மாணவி கல்லூரியின் விழா நாட்களில் வளாகத்தில் அமைக்கப்படும் சிறு கடைகளிலிருந்து ஏதேனும் பொருட்களை திருடி விடுதிக்குக் கொண்டு வந்து தன் தோழிகளுக்குப் பரிசளிப்பாள். பரிசளிக்கும்போதே அது திருடிய பொருள் என்பதையும் தெரிவிப்பாள். சுற்றி உள்ள அனைவருக்கும் முதலில் ஆச்சர்யம் பரவியது. பின்னர் சிரிப்பு மட்டுமே வரத் துவங்கியது. ஏனெனில் தனக்கு தன்னை மீறி திருடும் சுபாவம் சிறு வயது முதலே உள்ளது எனக் கூறினாள். அதைக் கட்டுப்படுத்த இயலவில்லை எனவும் கூறினாள். இன்னொரு தோழி உணவகங்களில் தனக்குப் பிடித்த ஏதேனும் பொருள் தென்பட்டால் அதை திருடிக் கொண்டு வந்துவிடுவாள். இவளுக்கு திருடும் நோயோ கோளாறோ இல்லை. அதை ஒரு ஆபத்தில்லாத விளையாட்டாகவே கருதினாள். நோயோ, கோளாறோ, விளையாட்டோ - திருடுதல் தவறு என்றே நாம் கற்பிக்கப்பட்டோம், நம் பிள்ளைகளுக்கும் கற்பிக்கிறோம். அதையே அறமாக போதிக்கிறோம்.
இவை ஒரு புறம் இருக்க, புத்தகங்களைத் திருடுதல் தவறில்லை என ஒரு சாரார் கூறிவருகின்றனர். அது என்ன புத்தகங்களுக்கு இப்படி ஒரு தனி சலுகை!!!
எனக்கு தெரிந்த ஒரு அரசுக் கல்லூரி நூலகர் காலை சரியான நேரத்தில் நூலகத்தைத் திறந்து விடுவார். நூலகத்தில் தனக்கு வழங்கப்பட்ட நூலக உதவியாளரையும் சரியான நேரத்தில் வரச் சொல்லி புத்தகங்கள் வழங்க ஆயத்தமாவார். ஆசிரியர்கள் பெரும்பாலும் நூலகத்திற்கு வருவதில்லை எனவும், மாணவர்களும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலே வருவதாகவும் தெரிவிப்பார். அவர்கள் எத்தனை புத்தகம் கேட்டாலும் கொடுத்துவிடுவார். விதிப்படியெல்லாம் இல்லை. அவ்வாறு வரும் ஒரு சில மாணவர்கள் புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்கும் போது தாமதக் கட்டணத்தை அவர் பெறுவதில்லை. தான் தாமதக் கட்டணத்தைக் கேட்டால் வரும் ஓரிரு பிள்ளைகளும் எங்கே வராமல் போய்விடுவனரோ என அவருக்கு அச்சம். சில நேரத்தில் புத்தகம் நூலகத்திற்குத் திரும்புவதே இல்லை. சில வேளைகளில் தானும், உதவியாளரும் நூலகத்தில் இருப்பதில்லை எனவும் நூலகத்தை மட்டும் திறந்து வைத்துவிடுவோம் எனவும் தெரிவித்தார். ஏன் என்பதற்கு யாரும் இல்லையென்றால் சில பிள்ளைகள் புத்தகங்களை தங்கள் விருப்பப்படியும், பொறுமையாகவும், விளையாட்டுத்தனமாகவும் எடுத்துச் செல்ல உதவியாக இருக்கும் என கூறுவார். ஒரு வேளை யாரேனும் ஒருவர் புத்தகத்தைத் திருடினால் நூலகரே அதற்கான கட்டணத்தை அரசுக்குக் கட்ட வேண்டுமே என கேட்டதற்கு 'அதனால என்ன, ஏதோ ஒரு பிள்ளப் படிக்க உதவி செஞ்சதா நெனச்சிக்கிறேன். நானே அந்தக் கட்டணத்தக் கட்டிடுவேன்' எனக் கூறினார். அரசு விதிக்கு உடன்படாதவாறு தோன்றினாலும் அவர் பக்கம் ஏதோ நியாயம் உள்ளது என தான் தோன்றுகிறது.
மற்றொரு அரசுக் கல்லூரி நூலகர் அரசு விதிப்படியே அனைத்தையும் செய்யக் கூடியவர். விதிப்படியான எண்ணிக்கையில், குறிப்பிட்ட தேதியில் திரும்பத்தர வேண்டும், இன்னும் பல விதிகளுக்குட்பட்டே மாணவர்களுக்குப் புத்தகம் அளிப்பார். தாமதமாக திருப்பி அளித்தால், நாட்களுக்கு ஏற்றவாறு மிகக் குறைந்த தாமதக் கட்டணமான 0.50 பைசா கூட வசூலிக்கத்தவற மாட்டார். அதற்குத் தேவையான அனைத்துக் கோப்புகளையும் தயார் செய்வார். இவ்வளவு வேலை செய்வதற்கு அந்த 0.50 பைசா வாங்காமல் எச்சரிக்கையுடன் அந்த மாணவரை அனுப்பிவிடலாமா எனக் கேட்டால் விதிப்படித் தவறு எனவும், அவ்வாறு செய்தால் மாணவரிடம் ஒழுங்கு ஏற்படாது எனவும் கூறுவார். இதனால் மாணாக்கர் வராது போய்விட்டால் என கேட்டால், 'அது நம்ம பிரச்சன இல்ல மேடம். படிக்கறப் புள்ள சொல்றத புரிஞ்சிக்கும். தன்ன சரி செஞ்சிக்கும். அது போதாதா' என கூறுவார். இதிலும் ஒரு நியாயம் உள்ளது என தான் தோன்றுகிறது.
இதில் எது சரி? எது தவறு?
சமீபத்தில் ஒரு புத்தக வாசிப்புத் தொடர்பான கலந்துரையாடலில் - குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர் - மெத்தப் படித்த சிறப்புப் பேச்சாளர், தான் நூலகத்தில் புத்தகம் திருடிப் படித்ததுண்டு என பெருமைப்படக் கூறினார். தானும் இவ்வாறு செய்துள்ளதாக இன்னும் இரண்டுப் பள்ளி ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர். இதில் பெருமைக் கொள்ள என்ன உள்ளது எனவும் இது பிள்ளைகளுக்குத் தவறான புரிதலைத்தர இயலும் என கேட்டதற்கு, தாங்கள் குறிப்பெடுக்கும் பகுதியில் உள்ள, தாங்கள் வாங்க இயலாத, விலையுயர்ந்த புத்தகங்களை மட்டுமே அப்படி திருடி வந்ததாக ஒருபோலக் கூறி நியாயப்படுத்தினர். மேலும் புத்தகம் என்பது திருடப்படும் மற்ற பொருட்கள் போல் இல்லை, இது வேறு; அறிவுத் தேடலின் பகுதி; புத்தகங்கள் வாங்க இயலாத சூழல், என பலவாறு கூறினர். அந்த சிறப்புப் பேச்சாளர் பெரியவர்கள் அனாவசியமாக புத்தகத்திற்கு உயர்ந்த ஒரு இடத்தை அளித்து பிள்ளைகளை புத்தகத்திடமிருந்து பிரித்து வைப்பதாக குற்றத்தை பிறர் மீது திருப்பினார். அவரின் "புத்தகத்திருட்டு"க் குறித்த நிலைப்பாடு இறுதி வரை குழப்பத்தையே அளித்தது. எங்கும் ஏற்றுக் கொள்ளுமாறான விளக்கத்தினை அவர் அளிக்கவில்லை. இதே போல ஒரு கருத்தை ஒரு கலந்துரையாடலில் பிரபல எழுத்தாளர் மற்றும் கதைசொல்லி வழங்கினார். பின்னரே இவ்வாறான "புத்தகத்திருட்டு" சரி என்பதான கருத்துகள் பலரால் - முக்கியமாக எழுத்தாளர்களால் - பகிரப்படுவதை அறிவேன்.
"புத்தகத்தைத் திருடிப் படித்தேன்" என ஒருவர் சொல்லிக்கொள்ளும் போது அவர் ஒரு சிறந்த, மிகுந்த ஆர்வமுள்ள வாசகராக அறியப்பட வேண்டும் என்ற எண்ணம் அந்த நபருக்கு உள்ளதாகவே தோன்றுகிறது. இவ்வாறான கருத்து பிள்ளைகளுக்கு ஒரு தார்மீக மோதலை தரவல்லதாகவே கருதுகிறேன். தன் பொருளாதார சூழல் படுமோசமாக இருந்தபோதும் தான் பொது நூலகங்களை நாடி அறிவைத்திரட்டினேன் என்பதோ ஒருவருக்கு உந்துதலைத் தரும் என்பது என் கருத்து.
இதுகுறித்து தாங்கள் தங்கள் குடும்பத்துடன் உரையாடல் நடத்த இயலுமானால் தங்களின் பார்வையையும் தெரியப்படுத்தலாம்.
தப்பு தப்புதான்
ReplyDelete