Monday, August 23, 2021

செவி கொடுக்கும் தமிழக அரசு 👏💪

பெருந்தொற்றுக் காலத்தில் பதிவியேற்ற தமிழக அரசுக்கு சவால்கள் ஏராளம். எந்த சவாலையும் இது சிறியது, இது பெரியது என புறக்கணிக்க இயலாத அளவுக்கே அனைத்து சவால்களும் உள்ளன. இவற்றை வேகம் மற்றும் விவேகம் ஆகிய இரண்டும் கொண்டே எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் துறை சார்ந்த வல்லுனர்களின் அறிவுரைகள், பரிந்துரைகள் போன்றவையின் அவசியம் இன்றியமையாதது. தமிழக அரசு பதவியேற்றவுடன் பலதரப்பட்ட வல்லுனர் குழுக்களை அமைத்துள்ளது பலரின் பாராட்டையும் பெற்றது.

இந்த நடவடிக்கையின் அடுத்தப் படியாக தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்களின் கருத்துகளையும், எழுத்துகளையும் கூர்ந்து கவனிப்பது, வாசிப்பது மட்டுமன்றி அதன் தேவையினை உணர்ந்து தமிழக அரசு உடனுக்குடன் நடைமுறைப்படுத்துவது பெரும் மகிழ்ச்சியை மட்டுமன்றி ஒரு புது நம்புக்கையையும் அளிக்கிறது. கீழே இரண்டு உதாரணங்கள்.

                                                        நன்றி: கூகுள்
எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்கள் குமுதத்தில் தமிழ் எழுத்தாளர்களின் நிலையினைக் குறித்தும் அரசு செய்யக்கூடிய செய்ய வேண்டிய முன்னெடுப்புகள் குறித்தும் விரிவாக முதலமைச்சருக்கு திறந்த மடல்கள் இரண்டை கடந்த ஜூன் மாதத்தில் எழுதினார். அதனை தன் வலைப்பக்கத்திலும் வெளியிட்டிருந்தார் (http://charuonline.com/blog/?p=10346). மிக நீண்ட கடிதங்கள் அவை. தமிழ் எழுத்தாளர்களின் அவல நிலையும், அங்கீகரிக்கப்படாத சூழலும், சமுதாயத்தின் பார்வையும் என விவரித்துள்ள கடிதங்கள் அவை. அதில் அவர் குறிப்பிட்டுள்ள முக்கியமான கருத்துகளை ஏற்று அடுத்த ஓரிரு வாரங்களில் முதலமைச்சர் சில உத்தரவுகளையும் ஆணைகளையும் பிறப்பித்திருந்தார். அதாவது புதிய நூலகம் அமைத்தல், எழுத்திற்கு உயரிய விருதுகள் பெறுவோர்க்கு அரசு வீடு பரிசளித்தல், ஆண்டுதோறும் எழுத்தாளர்களை கண்டெடுத்து தமிழக அரசு விருதுடன் பரிசுத்தொகையும் வழங்குதல் போன்ற ஆணைகளே அவை. இன்னும் செய்ய வேண்டியவை ஏராளம் இருந்தாலும் இந்த நடவடிக்கைப் பாரட்டுக்குரியதே. 

 

                                                      நன்றி: கூகுள்

இதே போன்று எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் வாசகர் ஒருவரின் ஆரம்பக் கல்வி சார்ந்த ஒரு கேள்விக்கு இம்மாத தொடக்கத்தில் தனது விரிவான கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அதாவது பெருந்தொற்றுக் காரணமாக பள்ளிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ளதால் குழந்தைகளின் படிப்பாற்றல் பெரிதும் மந்த நிலையில் உள்ளதையும், மாணாக்கர் படிப்பினை மொத்தமாக மறக்கும் நிலை உள்ளதையும், இதை சரி செய்ய என்ன செய்யலாம் என்பதான கேள்வி அது. தன் பதிலில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ஆரம்பக்கல்விக்கென பள்ளிகளுக்கு வெளியே ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு, அதற்கென பெரும் நிதி ஒதிக்கீடு செய்து, ஆசிரியர்களைப் பணியமர்த்தி குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியான எழுதுதல், வாசித்தல் போன்றவற்றை சிறு குழுக்களாக பிள்ளைகளைப் பிரித்து கற்பிக்க அரசு நடவடிக்கை எடுக்கலாம் என பதிவு செய்திருந்தார் (https://www.jeyamohan.in/150889/). இப்பதிவு வெளிவந்த ஒரே வாரத்தில் தமிழக அரசு ஆரம்பக்கல்விக்கென ஒரு இயக்கம் தொடங்கப்படவுள்ளது என சட்டசபையில் தெரிவித்திருந்தது. இவ்வாறான முயற்சி இந்தியாவிலேயே முதல்முறை எனக் கூறப்படுகிறது. 

                                                      நன்றி: கூகுள்

எழுத்தாளர்கள் சமுதாயத்திற்கு ஆற்றும் பணி மகத்தானது. முன்னோடியாக தமிழக அரசு இதை அடையாளம் கண்டுகொள்ளும் போதும், அவர்களின் கருத்துகளின் ஆழத்தையும் தேவையையும் உணரும் போதும் சமுதாயத்தின் மீது ஒரு வெளிச்சம் பரவுகிறது. இவ்வேலையை செய்ய வேண்டிய கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழங்களுக்கும் இது போன்ற அரசு நடவடிக்கைகள் ஒரு நினைவூட்டல், அவர்களின் கடமையை உணர்த்துதல். இவை தொடரும்பட்சத்தில் எழுத்தாளர்களையும், எழுத்துகளையும் கொண்டாடும் நிலை எழலாம். இதன் மூலம் அடுத்த தலைமுறை பரந்த அறிவோடும், மனதோடும் வளர வாய்ப்புள்ளது.👏

1 comment:

  1. இத்தகைய செயல்கள் பாராட்டப் படவேண்டியவை வளரட்டும் பெருகட்டும்... 😇

    ReplyDelete

மின்மினி பூச்சிகள் 🐝

என் சிறு வயதில் மின்மினி பூச்சிகள் ஏராளமாக இருந்தன. நாங்கள் வசித்த தெருவில் மாலை, இரவு வேளைகளில் விளையாடும் போது மின்மினிகளும் சேர்ந்து கொள்...