Tuesday, December 27, 2022

 சலூன் நூலகத்தில் ஒரு சந்திப்பு 📔📚👪

தமிழகத்தில் முதன்முறையாக (பல ஆண்டுகளாக) ஒருவர் தன் சலூனில் நூலகம் ஒன்றை நடத்தி வருவது நம்மில் பலரும் அறிந்ததே. கேட்டிராதவர்களுக்கு இதோ: 

தூத்துக்குடி மாவட்டம், மில்லர்புரத்தில் திரு. பொன் மாரியப்பன் என்பார் தன் முடிதிருத்தகத்தில் தினமும் பலரின் சொற்பொழிவுகளை கேட்பதுண்டு. அவ்வாறு ஒரு நாள் கேட்டுக்கொண்டிருக்கும் போது எதேச்சயாக எழுத்தாளர் எஸ்.ரா அவர்களின் உரையை கேட்டு அவரின் வாசகனாகி, வாசிப்பின்பால் ஈர்க்கப்பட்டு, தான் பெறும் இன்பம் பிறரும் பெறவேண்டும் என எண்ணி தன் சலூனில் ஒரு நூலகம் துவங்கி, தன்னிடம் முடிதிருத்த வருபவர்களை வாசிப்பு நோக்கி நகர்த்தி வருகிறார். வாசிப்பவர்களுக்கு சலுகை விலையில் முடிதிருத்தம் செய்து வருகிறார். குழந்தைகளுக்கும் அவ்வாறே. குழந்தைகளுக்கு மேடை பேச்சினை ஊக்குவிக்கும் வகையில் மைக் ஒன்று வைத்து அவர்களை பேச, வாசிக்க ஏற்பாடு செய்துள்ளார். இவருக்கு பல திசைகளிலிருந்தும் விருதுகளும், வாழ்த்துகளும் குவிந்த வண்ணமே உள்ளன. 💝

எங்கள் வசிப்பிடத்திலிருந்து இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே இவ்விடம் இருந்தும், சென்ற வாரமே முதன்முறையாக குடும்பத்துடன் சென்றோம். கிருத்துமஸ் தூத்துக்குடியில் பிரம்மாண்டமாக இருக்கும் என பலர் சொல்லி கேட்டதுண்டு. எனவே கிருத்துமஸுக்கு முந்தின தினத்தன்று தூத்துக்குடி சென்று சலூன் நூலகத்தை பார்வையிட திட்டமிட்டுச் சென்றோம்.👪 குழந்தைகளுக்கு அச்சலூனில் செய்யப்பட்டுள்ள ஏற்பாட்டினை மகளுக்கு சொல்லியிருந்தோம். 

அக்கடை புகைப்படத்தில் பார்த்ததைவிட சிறியதாக இருந்தாலும் ஏராளமான புத்தகங்களால் நிரம்பியிருந்தது. எதை எடுத்து வாசிப்பது என தினறும் அளவிற்கு இருந்தது புத்தகங்களின் எண்ணிக்கை. 90 சதவீதத்திற்கும் மேலானவை தன் சொந்த செலவில் வாங்கி வைத்துள்ளார். இவரால் புத்தகம் வாசிப்பிற்குள் வந்த இளைஞர்களைப் பற்றி கூறினார். அக்குழுவில் திரு. அருண் என்பவரையும் சந்தித்தோம். அன்று மாலை எஸ்.ரா. அவர்களின் புத்தக விழாவில் கலந்து கொள்ள தாங்கள் அனைவரும் சென்னை செல்லவிருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள திரு. பொன் மாரியப்பன், ஏட்டுக்கல்விக்கும் நிறைவான, மகிழ்வான, பயனுள்ள வாழ்க்கைக்கும் தொடர்பில்லை என நிரூபிக்கும் மற்றுமொரு ஆளுமை. 🏆

எங்களின் சிறார் நூலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்து கிளம்பும் வேளையில் எங்கள் மகள் இரகசியமாக தான் அங்கு முடி வெட்டிக்கொள்ள விரும்புவதாகக் கூறினாள். ரப்பன்ஸ்லில் வரும் நாயகியை போன்றும், தன் தோழி ஒருவரைப் போன்றும் முடி வளர்க்க வேண்டும் என அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பவள் இவ்வாறு சொன்னது அதிர்ச்சியாகவே இருந்தது. ஆர்வக் கோளாறில் 😆 ஏதும் சொல்கிறாள் என அவளிடம் புரிய வைக்க முயன்றேன். தற்போது வெட்டுவிட்டால் மீண்டும் இதே நீளத்திற்கு வளர ஒரு வருடமாவது ஆகும் என எடுத்துக் கூறினேன். அவள் பரவாயில்லை, இவரிடம், இப்பவே வெட்டுக்கொள்ள ஆசை என அழுத்தம் திருத்தமாக கூறியவுடன், அவள் யோசித்தே இம்முடிவிற்கு வந்துள்ளதை புரிந்துகொண்டோம். அவளும் மகிழ்ச்சியாக முடிவெட்டுக்கொண்டாள். வெட்டிக்கொள்ளும் முன்பு தான் மைக்கைப்பிடித்து தமிழ் எழுத்துக்களை வாசித்துக் காட்ட வேண்டும் என கூறி அதையும் செய்த பின்னரே முடித்திருத்தம் செய்துகொண்டாள். 😍💟


அச்சந்திப்பு நிறைவானதாக அமைந்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை.💓

Jane Goodall - A Netflix Interview

Jane Goodall - A name most of us would have come across in the last month as she passed away. As planned, her interview, titled "Famo...