நம் காலத்துப் பெற்றோர்களுக்கு தம் பிள்ளைகள் பள்ளி வகுப்பில் முதல் ரேங்க் வாங்க வேண்டும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகள் வெல்ல வேண்டும். பள்ளி ஆண்டு விழாக்களில் ஏதேனும் பரிசு வாங்கினால் பூரிப்பு அடைந்து பெருமையாக பேசிக்கொள்வர். ஆனால் இந்த முயற்சியில் அவர்களின் பங்கு பெரிதாக இருந்ததில்லை. பெரும்பாலானக் குடும்பங்களில் பெற்றோர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்தனர். தம் பிள்ளைகளை விளையாட்டு, பாட்டு, நடனம் போன்ற இதர பயிற்சிகளுக்கு அழைத்துச் சென்றவர்கள் மிக மிகக் குறைவு. எனினும் தம் பிள்ளைகளிடம் யாருக்கும் எந்தவொரு பெரும் பாதிப்பும் இல்லாத ஒரு எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
இன்றைய காலக்கட்டமானது முற்றிலும் மாறியுள்ளது. அனைத்து பெற்றோருக்கும் தம் பிள்ளைகள் - ஒன்று, இரண்டல்ல - அனைத்திலும் முதன்மையாக வர வேண்டும் என்ற எண்ணம் - சிலருக்கு வெறி என்று கூட சொல்லலாம். அனைத்திலும் முதன்மையாக வரவில்லையெனில், ஏதேனும் ஒன்றில் பெரியதாக சாதிக்க வேண்டும் என்ற அவா. இந்த ஏதேனும் ஒன்று பள்ளிப் படிப்பினை பாதித்து விடவும் கூடாது. பாட்டு, இந்தி வகுப்பு, நடனம், விளையாட்டு, தற்காப்புக் கலை, நீச்சல் போன்ற ஒன்றில் சேர்த்துவிட்டு பின்னர் ஆர்வம் வந்ததா, வந்ததா என தேடும் கும்பலாக பலரும் மாறிவிட்டனர். அடுத்த வீட்டுப் பிள்ளை ஒரு சிறப்பு வகுப்பில் இருந்தால், தம் பிள்ளை இரண்டிலாவது இருக்க வேண்டும் என எண்ணும் பெற்றோர்களும் இருக்கின்றனர்.
இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்த வெறிகொண்ட பெற்றோர்களை அந்த வகுப்புகளில் சந்திப்பது ஒரு புதுவித அனுபவம் என்றே சொல்லலாம். இப்பெற்றோர்களுக்கு அவ்வகுப்புகளில் பயிற்சி அளிப்பவர் தம் பிள்ளைக்கு தனிக்கவனம் கொடுத்தாக வேண்டும். இல்லையெனில் பயிற்சி அளிப்பவரின் நிலை பரிதாபத்துக்குரியதாகிவிடும். என்னதான் அவர் தனி கவனம் அளித்தாலும் திருப்தியும் வருவதில்லை. அதனை மீறி இவர்களே தம் பிள்ளைகளை அதட்டியும், விரட்டியும் அவ்வகுப்பிலேயே தங்களின் மூக்கை நுழைத்து பிள்ளைகளை கூச்சப்படவும், அவமானப்படவும் செய்வது வாடிக்கையாக உள்ளது. தாங்கள் கற்றுக்கொண்டதை தம் பிள்ளைகள் எந்த நேரத்தில், எவர் முன்னிலையில் கேட்டாலும் செய்யத் தயங்கவோ, கூச்சப்படவோ கூடாது. உடனே செய்தாக வேண்டும். இல்லையெனில் அவ்வகுப்பிற்கு செலுத்தும் கட்டணம் வீண் என அடுத்த நாள் படையெடுப்பர் பயிற்சி அளிப்பவரிடம். அவ்வகுப்பில் தம் பிள்ளைகள் தனித்துத் தெரிய வேண்டும் என்ற துடிப்பில், ஆர்வக் கோளாறில் தாங்கள் சில நேரங்களில் கோமாளிகளாகவும், சில இடங்களில் ராட்சர்களாகவும், சிலர் கண்களுக்கு பிரச்சனைக்குரியவர்களாகவும், தம் பிள்ளைகளுக்கு பாரமாக இருப்பதையும் கண்டுகொள்ள தவறுகின்றனர்.
நம் பிள்ளைகள் சில இடங்களில் அவர்களை கண்டு களிக்கும், ரசிக்கும், எதிர்பார்ப்பில்லாத பார்வையாளர்களாக மட்டும் தம் பெற்றோர்கள் இருக்க விரும்புகின்றனர். எந்தெந்த இடங்கள் என பிள்ளைகளை பார்த்தோ, அவர்களிடமே கேட்டோ தெரிந்து கொண்டுதான் ஆக வேண்டும். இதற்கு குறுக்கு வழியோ, மாற்று சாலையோ இல்லை!
No comments:
Post a Comment