Monday, February 24, 2020

தூக்கி வீசப்பட்ட எனது சிவப்பு மை பேனா

தூக்கி வீசப்பட்ட எனது சிவப்பு மை பேனா 

Image result for red ink pen imagesகல்வி சார்ந்த கட்டுரைகள், கதைகள் வாசிப்பதில், திரைப்படங்கள் பார்ப்பதில் அலாதி பிரியம் எனக்கு. இந்த தொடர்பு எங்கு, எப்போது துவங்கியது என சரியாக சொல்ல இயலவில்லை என்றாலும், 10 வருடங்களுக்கு குறையாமல் என்று மட்டும் திட்டவட்டமாக கூற இயலும். கல்வி சார்ந்த வாசிப்புகளினால் கைவிடப்பட்ட, கையில் எடுக்கப்பட்ட, மாறுதல்களுக்குட்பட்ட முக்கியமான தீர்மானங்கள் உண்டு. அவற்றுள் இங்கு நான் இப்போது குறிப்பிட விரும்புவது எனது சிவப்பு மை பேனா அடக்கம் செய்யப்பட்டதும், அதன் இடத்தை பிற மை பேனாக்கள் பிடித்துக் கொண்டதும் குறித்து. சிவப்பு மை  பேனா வீசியெறியப்பட்டு வருடங்கள் பல கடந்துவிட்ட போதும் தற்போது மீண்டும் நினைவுக்கூற வைத்தது சமீபத்தில் வாசித்து முடித்த திரு மாடசாமி அவர்களின் "எனது சிவப்பு பால் பாய்ண்ட் பேனா" என்ற புத்தகம்.


பள்ளிக்  குழந்தைகளிடம் "நீங்க என்னவாக ஆசைப்படறீங்க?" என்ற கேள்வி கேட்டால் "teacher" ஆகணும் என்ற பதில் அதிகமாக வரும். குழந்தைகளின் விளையாட்டுகளுள் முக்கியமான ஒன்று ஆசிரியர்-மாணவர் விளையாட்டு. குழந்தைகள் யார் கூறும் அறிவுரைகளை வேத வாக்கு போல் உணர்வார்கள் என்றால் ஆசிரியர்களுடையது தான். இவை எல்லாவற்றிற்கும் ஒரு முக்கிய காரணம், ஆசிரிய பணி என்பதில் "அதிகாரமும்" கலந்திருப்பதாக ஒரு பொது புத்தி இருப்பது தான். அந்த "அதிகாரம்" என்பது வெட்ட வெளிச்சமாக வெளிப்படும் இடம் விடைத்தாள்களும், அதில் திகிலூட்டும் சிவப்பு மையின் கிறுக்கல்களும்  தான். 

சிவப்பு என்பது அபாய குறியாகவே அனைவராலும் கருதப்படுகிறது. எடுத்துக்காட்டு, போக்குவரத்து (பேருந்து, ரயில்) சைகை, அபாய குறியீடுகள், தடை செய்யப்பட்ட பகுதியை, மாற்று  பாதையை குறிக்க, போன்றவைகள். அவ்வாறான அபாய சின்னத்தை கொண்டே விடைத்தாள்கள் திறுத்தப்படுகின்றன. காரணமாக கூறப்படுவது தவறுகளை சுட்டிக்காட்ட ஒரு "பளீச்" நிறம் தேவை என்பதாகும். ஆனால் தவறுகளை சுட்டிக்காட்டுவதை காட்டிலும் "நீ தவறு" என குறிப்பிடுவதாகவே சிவப்பு மை கிறுக்கல்கள் உள்ளன. அவ்வாறு சுட்டிக் காட்டுவதில் ஒரு திருப்தியையும், சந்தோஷத்தையும், அதிகாரத்தையும் ஆசிரியர்கள் உணர்கிறார்கள். ஆனால் அது எம்மாதிரியான தாக்கத்தை மாணவர்களிடம் உருவாக்குகிறது என்பதை பெரும்பாலானவர்கள் உணரத் தவறுகிறார்கள். மாணவர்களிடம் ஒரு விதமான "பீதி"யை உருவாக்குவதாகவே சிவப்பு மையின் கிறுக்கல்கள் உள்ளன. இக்காரணத்தினாலே என்னவோ மாணவர்கள் தாங்கள் சிவப்பு மை பயன்படுத்த நேர்ந்தால் அதை ஒரு பெரும் அங்கீகாரமாகவும், சாதனையாகவும் கருதுகிறார்கள்.

இந்த மாபெரும் தவறை நான் உணர்ந்த போது, என்னிடம் திருத்த இருந்த சிவப்பு மை  பேனா தூக்கிவீசி, என்னை திருத்திக்கொண்டேன்.  அதன் பின் பணியாற்றிய பல்கலைக்கழகத்திலும், கல்லூரிகளிலும் எந்த ஒரு வேலைக்கும், முக்கியமாக விடைத்தாள்கள் திருத்துவதற்கு, சிவப்பு மை பேனாவை பயன்படுத்தியதில்லை. மாறாக நீல மையும், கருப்பு மையும் பயன்படுத்த துவங்கினேன். மாணவர் நீல மையில் எழுதியிருந்தால் நான் கருப்புமையிலும் , மாணவர் கருப்பில் எழுதியிருந்தால் நான் நீலமையிலும் திருத்த துவங்கினேன். விடைத்தாளில் எங்கும் சிவப்பு மை தென்படவில்லை.

இந்த மாறுதலே ஆசிரிய அதிகாரத்தை வேரோடு அறுத்துவிடும் என நான் கூறவில்லை. ஆனால் பெரிய மாற்றத்திற்கு இந்த சிறிய மாறுதல் இன்றியமையாததாகவே தோன்றுகிறது. என்னை போலவே மாணவர்களுக்கும் இது புதியதாகவே (சிலருக்கு வினோதமாகவும்) இருந்தது. பின்னர் பழகிற்று. ஆனால் மாணவர்களால் வரவேற்கப்பட்டது. எனக்கே எனக்கென்று இருந்த சில வகுப்பறை வழங்கங்களுடன் (வேறொரு சந்தர்ப்பத்தில் அவற்றை பற்றி எழுதுகிறேன்) இந்த புது வழக்கம் சேர்ந்தது எங்கள் வகுப்பறையை மேலும் அழகாக்கிற்று.

எனது அனுபவம் வளர்ந்த பிள்ளைகளுக்கிடையில். அதாவது கல்லூரி அல்லது பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில். அவர்களே சிவப்பு மையின் கிறுக்கல்களை விரும்பாத போது, அழகிய பட்டாம்பூச்சிகளான பள்ளிக் குழந்தைகள் சிவப்பு மையற்ற விடைத்தாள்களை எவ்வளவு விரும்புவார்கள் என உணர வேண்டிய கட்டாயம் எழுகிறது. "நீ எழுதியதில் இவ்வளவு தவறு உள்ளது" என தெரிவிப்பதை தவிர்த்து "நீ எழுதியதில் இவ்வளவு சரியாக உள்ளது, இதர பகுதிகளும் செம்மைப்படுத்தப்படலாம்" என குறிப்பிடும்போது விடைத்தாள் பயமூட்டும் ஒன்றாக இல்லாமல் உந்து சக்தியாக மாறும் வாய்ப்பு அதிகம். இந்த மாற்றத்தின் குறியீடாகவே சிவப்பு மை பேனாக்கள் குழந்தைகளின் உலகில் இல்லாமல் செய்ய வேண்டும் என தோன்றுகிறது.

அதற்கு பதிலாக குழந்தைகளின் விடைத்தாள்களும், புத்தகங்களும் வெவ்வேறு வண்ணங்களில் திருத்தப்பட்டால் எவ்வளவு அழகு!!! 💙💚💛💜 அதில் என்ன தவறு இருக்க முடியும், இல்லை யார் இதை தடுக்க முடியும்!? வண்ணங்களை விரும்பாத வாண்டு (வளர்ந்தவர்) ஏது?! 

2 comments: