பள்ளிப் பருவத்தில் கோட்டைகளைப் பற்றி பாடத்தில் படித்ததோடு சரி. வேலூர் கோட்டை, செஞ்சிக் கோட்டை போன்றவற்றின் பெயர்கள் பரிச்சயமே தவிர வேறேதும் சுவாரஸ்யமாகவோ, உற்சாகமாகவோ தெரிந்திருந்ததாக நினைவில்லை. எந்த வரலாற்று ஆசிரியரும் கோட்டைகளை பார்க்கத் தூண்டும் அளவிற்கு அதன் விவரங்களை எடுத்துரைத்ததில்லை.
தற்போது தமிழக மாவட்டங்களை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சுற்றிப்பார்க்கலாம் என்று முடிவெடுத்ததிலிருந்து கோட்டைகளை பார்க்க நேர்கிறது. அவ்வாறு பார்த்த சில: வட்டக்கோட்டை, கன்னியாகுமரி; தரங்கம்பாடி, நாகப்பட்டினம்; செஞ்சிக் கோட்டை, திருவண்ணாமலை; ரஞ்சன்குடி, பெரம்பலூர்.
இக்கோட்டைகளுக்கு பொதுவான சில குணங்கள்:
- புகைப்படங்களில் பார்க்க மிகவும் வசீகரமானவை.
- நேரில் சற்று தொலைவிலிருந்து பார்க்க அழகோடு கூடிய ஆடம்பரமான, கம்பீரமான தோற்றங்கள்.
- வரலாற்றுச் சிறப்புமிக்கவை.
- விசாலமானவை.
- போர் காலங்கள் குறித்த ஆர்வத்தை வெகுவாக தூண்டக்கூடியவை.
- ஆழமான கேள்விகளை எழுப்பக்கூடியவை.
- குடும்பத்துடன்/நண்பர்களுடன் ஒரு நாள் சுற்றுலா செல்ல ஏற்ற இடங்கள்.
- காற்றோட்டமான மரங்களின் நிழலில் இளைப்பாற இயலும்.
மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காக கோட்டைகளைச் சுற்றிப்பார்க்க முயற்சித்த போது சில பாடங்களைக் கற்றோம்.
- கண்டிப்பாக வெயில் காலங்களில் கோட்டைகளை சுற்றிப்பார்க்க செல்லக் கூடாது. தமிழகத்தை பொருத்தவரை ஜூலைக்கு பிறகு டிசம்பருக்குள் பார்ப்பது சரியானதாகும். எக்காலத்திலும் தொப்பி அணிந்து செல்வது நலம்.
- கண்டிப்பாக சுமக்கக் கூடிய அளவிற்கு தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும்.
- எந்த கோட்டையின் அருகிலும் நல்ல உணவு கிடைப்பது கடினம்.
- அரை நாளில் கோட்டையை பார்த்துவிட்டு அடுத்த இடத்த்ற்கு செல்லலாம் என்ற பேச்சிக்கே இடமில்லை. (எ.கா.) செஞ்சி ராணி கோட்டை மட்டும் பார்க்கவே ஒரு நாள் ஆகும். புகைப்படங்கள் எடுத்தால் இன்னும் கூடும்.
- ஓரளவிற்கு இக்கோட்டைகளின் வரலாற்றை கதைபோல தெரிந்துகொண்டால் குழந்தைகளிடம் (உடன் வரும் மற்றவர்களுக்கும் கூட) கூற வசதியாக இருக்கும்.
- நிச்சயம் பெரிய குழுக்களாக செல்லுதல் நலம். சோர்வு ஏற்படுதல் சுலபமாதலால் குழுவாக சென்றால் விளையாட்டாக செல்ல இயலும்.
- வயதானவர்களுக்கு ஏற்ற சுற்றுலாத்தலம் இவை அல்ல.
மேற்குறிப்பிட்டவற்றை மனதில் கொள்ளும்போது கோட்டைகளை சுற்றிப்பார்க்க சரியான காலம் பள்ளிப்பருவம் அல்லது கல்லூரிப்பருவம் என்றே தோன்றுகிறது. களைப்பு என்பதே தெரியாத விளையாட்டுப் பருவத்தில் கதைகளோடு கோட்டைகளை சுற்றிப்பார்ப்பது எளிதானது மட்டுமல்ல சுவாரஸ்யமானதும் கூட. சற்று வயது கூடியவுடன் சோம்பலும் அலுப்பும் சோர்வும் தொற்றிக்கொள்கிறது. பிள்ளைகளுக்கு ஈடு கொடுக்க இயலாமல் போகிறது. மேலும் நண்பர்களுடன் பார்க்கும்போது மனதில் ஆழமாக பதிந்து நல்ல நினைவுகளைக் கொடுக்கவல்லது.
பள்ளிகளிலோ கல்லூரிகளிலோ சுற்றுலா அழைத்து செல்லும் போது கோட்டைகளை பிள்ளைகள் பெரிதும் விரும்புவதில்லை (நாமுமே சிறு வயதில் விரும்பியதில்லை). காரணம், அக்கோட்டைகளை விரும்புகிறவாறு நாம் எதையும் சொல்லிக்கொடுப்பத்தில்லை. அதன் அந்தரங்கங்களை விவாதிப்பதில்லை. அதன்பின் உள்ள அரசியலை தெரியப்படுத்துவதில்லை. இவற்றை செய்யும் பட்சத்தில் பிள்ளைகள் தாமாக முன்வந்து அவ்விடங்களுக்கு அழைத்து செல்லுமாறு ஆசிரியர்களையும், பெர்றோர்களையும் நச்சரிப்பர். வரலாறும் விருப்பப் பாடமாகும்.