Sunday, May 17, 2020

போரும் பரிசுப்பொருளும்

     "கன்னத்தில் முத்தமிட்டாள்" என்ற  திரைப்படத்தின் ஒரு காட்சியின் சாராம்சம் இது. எழுத்தாளர் இந்திரா என்ற கதாபாத்திரம் அவரின் இலங்கை தோழரிடம் இலங்கையின் போர் பகுதி ஒன்றில் உரையாடுகையில் ஏன் உலகில் இது போன்ற போர் நடைபெறுகின்றன என வினவுவார். அதற்கு அந்த தோழர் "ஏதோ ஒரு மூலையில் இவ்வாறான போர் நடைபெறுவதில் யாரோ ஒருவருக்கு லாபம் இருக்கிறது" என்று பதிலுரைப்பார். எப்போது இந்த போர் அனைத்தும் முடிவுக்கு வரும் என்று கேட்பார் எழுத்தாளர். அதற்கு தோழரின் பதில், உலகில் உள்ள அனைத்து போர் உபகரணங்களும் கடலில் வீசப்பட்டால் ஒரு வேளை போர் இல்லாமலே போகலாம் என்பார்.

ஹெச்.ஹெச். முன்ரோ என்ற எழுத்தாளரின் "அமைதியின் பொம்மைகள்" என்ற சிறுகதையில் ஹார்வி என்ற கதாபாத்திரம் தனது அக்காவிடம் குழந்தைகளுக்கு அமைதியை பிரதிபலிக்கும் பொம்மைகள் பற்றி ஒரு அறிக்கை தெரிவித்துள்ள கருத்துக்களை பற்றி குறிப்பிடுகிறார். இவ்வாறான முயற்சி சிறந்தது என்று கூறுபவர் இது  எவ்வளவு சாத்தியம் என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு அவரின் அக்கா தன் பிள்ளைகளை பார்க்க வரும் போது அவ்வாறான பொம்மைகளை வாங்கி வந்து பரிசளிக்குமாறு யோசனை  கூறுகிறார். அவ்வாறே அவரும் செய்கிறார். தன் அக்காவின் இரண்டு மகன்களும் எப்போதும் போர் சம்மந்தப்பட்ட விளையாட்டுகளையே பெரிதும் விரும்பி அதீத ஆர்வத்துடன் விளையாடுபவர்கள். தன்  மாமா அவ்வாறான பரிசே கொண்டுவந்திருப்பார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றம். மாமா வரலாற்று சிறப்பு மிக்க செய்திகளை விளையாட்டாக அறியவும் அதனை கொண்டு விளையாடும்படியான பொம்மைகளை அளித்ததுமில்லாமல் அதனை பற்றி அவர் விளக்கியது அப்பிள்ளைகளுக்கு ஏமாற்றத்தையும் வெறுப்பையும் அளிக்கிறது.  ஹார்விக்கும் அக்காவிற்கும் உள்ளூர ஒரு சிறு நம்பிக்கை என்னவெனில், அப்பிள்ளைகள் சிறிது நேரத்தில் அப்புதிய பொம்மைகளை விரும்ப ஆரம்பித்து விடுவர் என்று.  இறுதியில் நடந்தது (அப்புதிய பொம்மைகளை தங்களின் போர் விளையாட்டுக்கு உகந்தவாறு மாற்றி மீண்டும் போர் விளையாட்டையே ஆர்வத்துடன் விளையாடினர்) அவர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கவில்லை, மாறாக தங்களின் முயற்சி தாமதமானது என்பதை உணர்ந்தனர். உணர்ந்தும் பயனில்லாத நேரம்!

சரி, மேற்குறிப்பிட்ட இரண்டையும் இணைத்துப்பார்ப்போம். உலகில் போர்கள் ஓய்ந்த பாடில்லை, ஓய்வதற்கான அறிகுறி எதுவும் சாட்டிலைட்டிற்கு எட்டியவரை தென்படவில்லை. மாறாக போர் என்பது ஒரு விளையாட்டு ரூபத்தில் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் உறவாடிக் கொண்டுள்ளது.

இவ்வாறான விளையாட்டுகளே நம் பிள்ளைகளிடமும் (அதிகமாக ஆண் பிள்ளைகளிடம்) காண முடிகிறது. துப்பாக்கி, வில்-அம்பு, பெரிய கட்டைகள், கத்தி போன்ற விளையாட்டு பொருட்கள் பெருமளவு குழந்தைகளால் விரும்பப்படுகிறது. தன் நண்பனை சுட்டு விளையாடுவது ஒரு இன்பத்தை தருகிறது. இது விளையாட்டு தானே என்று புறந்தள்ளுவது  சரி இல்லை என்று தான் தோணுகிறது. மேற்கு நாடுகளில் பள்ளி மாணவர்களிடையே பெருகி வரும் துப்பாக்கி கலாச்சாரம் இங்கு கத்தி கலாச்சாரமாக உள்ளது. அவ்வளவே வித்தியாசம்.

உளவியல் ரீதியாக பிள்ளைகள் சிறு வயது முதலே இவ்வாறான பொம்மைகளுடன் விளையாடி (பெரும்பாலான நேரங்களின் பெற்றோர்களின் கண்காணிப்பின்றி) அதுவே தன் நண்பர்களுடன் வெறியாக மாறுகிறது. பாகுபலி செட் போன்ற பொருட்களில் இல்லாத போர் உபகரணம் இல்லை என்றே கூறலாம். தீபாவளி பண்டிகை முதல் திருவிழா வரை துப்பாக்கிகள் வித விதமாக கிடைக்கின்றன. மேலும் திரைப்படங்களில் ஹீரோ, வில்லன் இருவரிடமும் துப்பாக்கி வழங்கப்பட்டு இது நல்ல பொருளா, தீய பொருளா என்ற அறுதியிட்டு நம்மால் நம் குழந்தைகளுக்கு விளக்க முடியாத நிலையும் உள்ளது. கத்தி போன்ற பிற பொருட்களும் அவ்வாறே.

ஒரு பக்கம் பள்ளி பாடங்களின் வழியே அஹிம்சை முறையை பிள்ளைகளுக்கு அளிக்க பல்வேறு வழி முறைகளை முயற்சி செய்தும், அது குறித்த ஆலோசனைகளை வழங்கியும் "Prajnya" போன்ற அமைப்புகள் செயல்படுகின்றன. நாமோ வீடுகளில் நேர்மாறாக நடந்துக்கொள்கிறோம். இதை நம்மால் சுலபமாக சரி செய்ய  இயலும். பெற்றோர்கள் தம் பிள்ளைக்கு இவ்வாறான பொருட்களை வாங்கி தராமலும், நாம் பரிசுகள் வழங்கும் போது "அமைதி பொம்மைகள்" போன்ற கருத்துகளை மனதில் கொள்ளலாம். இவை அனைத்தும் சிறு வயதிலேயே செய்யப்பட வேண்டியதும் அவசியமென்றே தோன்றுகிறது. நம்மை சுற்றி  வன்முறை கூடிக்கொண்டே போகும் சூழலில் பிள்ளைகளுக்கு நாம் அளிக்கும் பரிசுப்பொருட்கள் உலகின் அமைதிக்கு நம்மால் இயன்ற ஒரு சிறிய பங்கு என்பது மறுக்க இயலாத உண்மை.

யார் கூற இயலும், இவ்வாறான முயற்சிகள் உலகில் உள்ள அனைத்து வீடுகளிலும் பெற்றோர்களும் செய்யும் பட்சத்தில் இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்களாகும் போது எங்கள் நாட்டில் இனி போர் உபகரணங்கள் இருக்காது என்றும், போர் என்றது கொடிய தீஞ்சொல் என்றும் கூறி உலகை அமைதி பூங்காவாக சுலபமாக மாற்றி விடுவார்களாவோ என்னவோ.

"அணு விதைத்த பூமியிலே அறுவடைக்கும் அணுக்கதிர் தான்" என்ற பாடல் வரி நாடுகளுக்கு மட்டுமில்லை வீடுகளுக்கும் தான்.

No comments:

Post a Comment

மின்மினி பூச்சிகள் 🐝

என் சிறு வயதில் மின்மினி பூச்சிகள் ஏராளமாக இருந்தன. நாங்கள் வசித்த தெருவில் மாலை, இரவு வேளைகளில் விளையாடும் போது மின்மினிகளும் சேர்ந்து கொள்...