சாவித்திரிபாய் பூலே அவர்களின் பிறந்தநாளான இன்று (03.01.2024) இப்பதிவினை அளிப்பதில் மகிழ்ச்சி!
புத்தாண்டில் முடித்த முதல் புத்தகம் வானவில் புத்தகாலயத்தால் ஆகஸ்ட் 2023ல் வெளியிடப்பட்ட முகில் அவர்களின் "மாண்புமிகு ஆசிரியர்கள்."
இந்தியாவின் பல பகுதிகளை சேர்ந்த 20 அரசு பள்ளி ஆசிரியர்களின் (அ)சாத்தியமான பணிகளின் தொகுப்பாக இந்நூல் உள்ளது. ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் முன் இருந்த பல தடைகளைத்தாண்டி தங்களின் பணியினை மேற்கொண்டு இலட்சியத்தை நோக்கி பயணிப்பது என ஒவ்வொருவரின் வாழ்க்கையினையும் நம்மால் உணர முடிகிறது. பல இடங்களில் கண்ணீரை அடக்க இயலவில்லை (நான் உணர்ச்சிகளுக்கு வசப்பட்டவள் என்பதாலும் இருக்கலாம்). ஒவ்வொருவரின் பணியிடமும், சூழலும் வெவ்வேறு என்றாலும் இவர்களின் பயணங்களில் என் பார்வைக்குப் பொதுவாக இருக்கும் சில விஷயங்களை குறிப்பிட விழைகிறேன்.
(1) இந்தியாவின் அனைத்து மூலையில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகள் சரியான ஆசிரியர்களின் வருகைக்காக இன்றும் ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றன.
(2) இப்பணியில் சேரும் போது உத்வேகம் உள்ளவர்களால் மட்டுமே சாதிக்க இயலும் என்பது இல்லை. தங்களின் பணியில் எந்த நொடியிலும் நமக்குள் ஒரு புதிய உந்துதலும், இலட்சியமும், நோக்கமும், குறிக்கோளும், பாதையும் உண்டாகலாம். உண்டாகக்கூடும். நம் மனதையும், புலன்களையும் திறந்து வைத்திருந்தால் போதுமானது. அதிசயங்கள் நமக்குள்ளேயே நிகழக்கூடும்.
(3) ஒரு அரசு பள்ளியில் பணிபுரிவது என்பதில் அங்கு பயிலும் குழந்தைகளைத்தாண்டி அவர்களின் பெற்றோர்களிடமும், ஊர் மக்களிடமும் ஒரு இணக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது முதன்மையான பணி. அதில் அவர்களின் மொழிக்கு பெரும் பங்குண்டு. மொழியின் வாயிலாகவே ஒருவரின் கலாச்சாரத்திற்குள்ளும், வாழ்வியலுக்குள்ளும் செல்ல இயலும் என்பதற்கு இப்புத்தகத்தில் வரும் ஆசிரியர்கள் உதாரணம்.
(4) அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரின் வாழ்க்கைத்துணையின் பங்கு இன்றியமையாதது. இவர்களின் ஒத்துழைப்பு என்பது ஒரு ஆசிரியரை துணிச்சலுடனும், மகிழ்ச்சியுடனும் பணி செய்ய வைக்கும். பிற குடும்ப உறுப்பினர்களின் பங்கும் அவசியமாகிறது.
(5) எந்தவொரு அரசு பள்ளியும் அரசின் பங்களிப்பைக் கொண்டு மட்டுமே இயக்குவது சாத்தியமாகா. அரசு சாரா நிறுவனங்கள், ஆர்வமுள்ள தனி நபர்கள், செல்வந்தர்கள், ஊர் மக்கள் என பலரின் பங்களிப்பினால் மட்டுமே சாத்தியம். ஊர் கூடியே தேர் இழுக்க முடியும். தங்களால் இயன்ற அளவுக்கு மக்களை சந்தித்து அவர்களால் இயன்ற உதவியை பெறுவதற்கு தயங்காத உள்ளம் கொண்டுள்ளனர் இப்புத்தகத்தில் வரும் ஆசிரியர்கள் அனைவரும்.
(6) ஒரு ஆசிரியர் புதிதாக ஒரு முயற்சி எடுக்கும்பட்சத்தில் எதிர்ப்புகள் வருவதைக்காட்டிலும் உடன் பயணிக்க விரும்புபவர்கள் அதிகமாக உள்ளனர். தங்களை வழிநடத்தினால் தாங்களும் அப்பாதையில் பயணிக்க தயாராக உள்ளனர்.
(7) அன்பினால் மட்டுமே மாணவர்களிடம் கல்வியினை மகிழ்ச்சியாக கொண்டு செல்ல முடியும். கண்டிப்பின் பங்கு மிகக்குறைவு.
(8) ஏட்டுக்கல்விக்கப்பால் செய்யப்படும் முயற்சிகளே மாணவர்களை ஆசிரியர்களுக்கு நெருக்கமாக்கும். புதிய முயற்சிகளை செய்து பரிசோதித்துப்பார்க்க இவர்கள் தயங்குவதில்லை.
(9) நல்லாசிரியர்கள் அனைவருமே தங்கள் பள்ளிகளில் சிறிய நூலகத்தை நடத்தி மாணவர்களை வாசிக்கத் தூண்டியுள்ளனர்.
(10) கொரோனா காலக்கட்டத்திலும் மாணவர்களை சந்திக்கவும் கற்றல் பயணத்தைத் தடையின்றி தொடரவும் புதிய வழிமுறைகளை கண்டடைந்துள்ளனர். எப்பேர்பட்ட தடையையும் தாண்ட இயலும் என்பதற்கு அந்நாட்களில் அவர்கள் எடுத்த முயற்சிகளே சாட்சி.
(11) புதிய பயணங்களுக்கு அஞ்சாதவர்களாக இருக்கின்றனர். புதிய முகங்களை சந்திக்கவும் உடன் பணிபுரியவும் எப்போதும் தயாராக உள்ளனர்.
(12) தங்கள் மேல் காழ்ப்புக்காட்டினாலும், தங்களின் முயற்சிகளை கேள்விக்குள்ளாக்கினாலும் அதற்கு பதில் கொடுத்து நேர விரயம் செய்யாமல் தங்கள் பணியை செவ்வனே தொடர்ந்து செய்யும் மனப்பக்குவம் கொண்டுள்ளனர். தங்கள் பணியினையே பதிலாக அளிக்கின்றனர்.
(13) கற்பித்தலைத் தாண்டி கற்றலை தொடர்ச்சியாக செய்வதின் பலனை தினம் காண இயலும்.
(14) தன்னைச் சுற்றியிருக்கும் அனைத்தையும் கற்றலுக்கு உபயோகப்படுத்த இயலும்.
(15) எந்த பலனையும், அங்கீகாரத்தையும் எதிர்பார்க்காமல் பணிபுரிகின்றனர்.
மேற்குறிப்பிட்டவை சமூகப்பணியில் ஈடுபடும் எந்தவொரு தனி நபருக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 😇