கதை கேட்கவும் கூறவும் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதிலும் குழந்தைகளுக்கு கதை என்றால் அலாதி பிரியம். விதவிதமான கதைகளும் அதை சார்ந்த உரையாடல்களும் குழந்தைகளுக்கு இயல்பாகவே வரக்கூடியவை. அதனாலேயே எந்த காலக்கட்டத்திலும் குழந்தைகளுக்கான புத்தகங்களில் கதைளே பெரும் பகுதியை பிடிக்கின்றன. இதிகாசங்களும், வரலாறுகளும் கதை வடிவிலே பிள்ளைகளிடம் கொண்டு சேர்க்கப்பட்டன/சேர்க்கப்படுகின்றன. பள்ளி செல்லும் முன்னரே குழந்தைகள் பல கதைகளுடனே வளர்கின்றனர்.
முந்தைய தலைமுறை வரை கதை என்பது தினமும் சாதாரணமாக நிகழும் நிகழ்வு. வீடுகளில், தெருக்களில், பள்ளிகளில், வகுப்பறைகளில், விளையாட்டுத் திடல்களில், குடும்ப நிகழ்வுகளில் என எல்லா இடங்களிலும்/இடங்களைப் பற்றியும் கதைகள் வாழ்ந்த வண்ணம் இருந்தன. அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, பக்கத்து வீட்டு மாமா, அத்தை என அனைவரும் கதை சொல்லிகளே.
ஆனால் சில வருடங்களாக "கதை சொல்லிகள்" (இக்கட்டுரை குழந்தைகளுக்கான கதை சொல்லிகள் பற்றி மட்டுமே) என்ற அடைமொழியுடன் பலரின் பெயர்களை பார்க்க முடிகிறது. இவ்வாறான ஒன்று பெருமளவில் வளர்ந்து வருவதை உணர்வதற்கே எனக்கு நெடுநாள் ஆனது. யார் இந்த கதை சொல்லிகள்? இவர்களின் பங்கு என்ன? யாரெல்லாம் கதை சொல்லிகள் என்ற கூட்டுக்குள் வர இயலும்? இது போன்ற கேள்விகள் எனக்கு எழுந்த வண்ணம் இருந்தன. இது தொடர்பான என் புரிதலை இங்கே விவரிக்கிறேன்.
கலை என்பது ஒருவரின் கற்பனைத் திறன் மற்றும் செயல் திறன் கொண்டு அழகிய எதோ "ஒன்றை" உருவாக்குவதேயாகும் (எ.கா. ஓவியம் வரைதல், இசை அமைத்தல்). கதை சொல்லுதல் என்பது, சந்தேகமேயின்றி, ஒரு கலை. அனைவராலும் கதை சொல்ல இயலும். மனிதனுக்கு இயல்பாகவே கதை சொல்லும் திறன் உண்டு. கதைகளின்றி மனிதனால் முழுமையான வாழ்க்கை வாழ இயலாது. கதை சொல்லும் கலையின் ஆரம்பப் புள்ளி பிறப்பிலேயே நம் உயிரணுக்களில் வைக்கப்பட்டுவிட்டது. அது அழகான கதைகோலமாக மாறுவதும், அத்திறன் அலங்கோலமாக மாறுவதும் நாம் அந்த கலையை கையாள்வதில் உள்ளது.
ஆனால் மிக நேர்த்தியாகவும், கவனத்தை சிதரவிடாமலும், கதைக்குள் ஊடுருவ/சில நிமிடங்களுக்கேனும் வாழ வைக்கவும், கேட்பவரின் கற்பனையை தூண்டவும் கதை கூற எல்லாராலும் இயலாது.
அதிலும் குழந்தைகளுக்கு கதை சொல்லுதல் என்பது நாம் நினைத்துக் கொண்டிருப்பதை விட கடினமானது. அவர்களின் கற்பனைக்கு தீனி போடுவது சவாலானது. விபரம் அறியாத வயதில் குழந்தைகள், நாம் கூறும் கதைகளை விரும்புவர். அவர்களே சற்று வளர்ந்த பின், ஏராளமான நிபந்தனைகள் இடுவர். உதாரணத்திற்கு, கதை நீண்டதாக இருக்க வேண்டும், சொல்லப்பட்ட கதைகள் அவர்கள் விருப்பமில்லாமல் திரும்பவும் சொல்லக்கூடாது, அவர்கள் கேட்கும் தலைப்பில் கதை இருக்க வேண்டும், அவர்கள் கூறும் கதாபாத்திரங்கள் கண்டிப்பாக அக்கதையில் இருத்தல் வேண்டும், நாமே ஒரு இயங்குபடமாக கதை கூற வேண்டும், கதை பிடிக்கவில்லையெனில் பாதியில் அக்கதையை நிறுத்தி உடனடியாக வேறொரு புதிய கதையை கூற வேண்டும். இப்படி ஏகப்பட்ட நிபந்தனைகள் (இவையெல்லாம் என் நான்கு வயது மகள் செய்து வருகிறாள்!!). இவற்றையெல்லாம் சமாளிக்க அந்த நொடியில் ஒன்றிரண்டு குழந்தைகளுக்கான புத்தகங்களை மட்டும் படித்து கதைகளை கூறிவிட இயலாது. பல கதைகளை நாம் படித்த வண்ணம் இருக்க வேண்டும். அதை பலவாறு சொல்ல பழக வேண்டும்.
இங்கு தான் நமக்கு "கதை சொல்லிகள்" உதவுகிறார்கள். இப்புள்ளியில்தான் கதை என்பது கலை மட்டும் அல்ல அறிவியலும் தான் என்று நமக்கு உணர்த்துகிறார்கள். குழந்தைகளுக்கு அவர்கள் விரும்புமாறும், அவர்களை தூண்டும் விதமாகவும், கற்பனையை அதிகரிக்கும் விதமாகவும், அவர்களே கதை சொல்லியாகவும், கதை எழுதுபவர்களாக மாறவும், நாம் கையாளும் கதை கொண்டு அவர்களின் குழந்தை பருவத்தை மெருகேற்றவும் உதவுகிறார்கள். "கதை சொல்லிகள்" அவர்களின் கதை சொல்லும் அனுபவங்கள் கொண்டு ஒரு கதையை எவ்வாரெல்லாம் சொல்ல முடியும், எவ்வாரெல்லாம் சொல்லுவதை தவிர்க்க வேண்டும், மேலும் மேலும் நாம் சொல்லும் விதத்தினை நேர்த்தியாக்குவது எப்படி என்று ஒரு அறிவியலை நமக்கு படைக்கின்றனர். இதுவே இறுதியானதல்ல. இந்த அறிவியல் முயற்சியும் கலையோடு ஒட்டி மேன்மையாகிக் கொண்டே இருக்கும். மேலும் நம்மைச் சுற்றியுள்ள கதைகளை/கதைகள் தொடர்பான புத்தகங்களை நமக்கு காட்டித்தரும் வழிகாட்டியாக இருக்கின்றனர்.
இவற்றிலிருந்து நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது கதை சொல்வது என்பது "கதை சொல்லிகள்" என்ற அடைமொழி கொண்டவர்களால் மட்டுமே கூற முடியும் என்ற எண்ணம் முற்றிலும் தவறானது. "கதை சொல்லிகளின்" நோக்கம் அது அன்று. அவர்களும் ஒப்புக்கோள்வது நாம் அனைவரும் அற்புதமான கதை சொல்லிகளே என்ற உண்மையாகும். இன்னும் அழகாகவும் நம் குழந்தைகள் விரும்பும்படி சுவாரஸ்யமாக சொல்ல உதவும் வினையூக்கி மட்டுமே "கதை சொல்லிகள்". அதுமட்டுமல்ல, நம் குழந்தையின் விருப்பமான கதை களம், சூழல், விதம், எண்ண ஓட்டம் அனைத்தும் நமக்கு மட்டுமே ஓரளவேணும் புரிந்திருக்கும். அதற்கு மேல் தேவைப்படுவதை நம் பிள்ளைகளே நமக்கு கற்றுத்தருவர். எனவே என் புரிதல் என்பது கதை சொல்லிகளின் தேவை குழந்தைகளுக்கல்ல பெரியவர்களுக்கே!!
கதைகளோடு பயணிப்போம்!👪👫👬👭